இணையத்தின் மூலம் தொழில் முனைவோர் பயிற்சி
Thursday, March 4, 2010
இளைஞர்களை சுய வேலைவாய்ப்புக்கு ஊக்குவிக்க அவர்களுக்கு பல்வேறுபட்ட நிர்வாகத் திறமைகளை, இணையத்தின் உதவியோடு அளித்து, அதன் மூலம் பல இளைஞர்களை தொழில் தொடங்க வழிவகை செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் பெருமளவிலான மக்களை அவர்களுக்கு ஏற்றவாறு சிறந்த முறையில் பயிற்சியளைத்து, சுயமாக நம்பிக்கையுடன் தொழில் தொடங்க உதவுகிறோம்.சமீபத்தில் தொழில் நேசன் இதழில் இந்த விளம்பரத்தைப் பார்த்தேன். சொந்தமாக தொழில் தொடங்க இருப்பவர்களுக்காக பிரத்யூகமான பயிற்சியை இந்திய அரசின் சான்றிதழோடு தமிழில் கற்றுத்தருகிறார்கள். தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு யாரை அணுகுவது, நடைமுறை தகவல்களை எவ்வாறு அறிந்து கொள்வது, எப்படி முறைப்படி பதிவு செய்து கொள்வது, எந்த வகையின் கீழ் நம் தொழிலை பதிவு செய்வது, அரசின் சலுகைகள் உதவிகள் என்னென்ன? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த பயிற்சியில் தெளிவு கிடக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள www.edponline.in இணையதளத்தைபாருங்கள். Read more...
காதல் ஆத்திச்சூடி - தபூ சங்கர்
Saturday, February 6, 2010
அவளிடம் மதி மயங்கு!
ஆயிரம் முறை அவள் கண்ணில் படு!
இதயத்தை அலங்கரி!
ஈர்க்கும் படி நட!
உறுத்தாமல் பார்!
ஊதியமின்றிக் காவல் செய்!
அவள் அப்பா மாதிரியோ அண்ணன் மாதிரியோ 'எங்க போற' என்று நீ கேள்வியும் கேட்க மாட்டாய். அவளுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நீ பொங்குவாய் என்கிற மதர்ப்பே அதற்குக் காரணம்.
என்றாவது ஒரு நாள். குரைக்கும் நாய்க்குப் பயந்தோ, பாய்ந்து வரும் மாட்டைக் கண்டோ அத்தனை பேரையும் விட்டுவிட்டு உன் பின்னால் ஓடி வந்து ஒளிவாள். அதுதான் உன் காவலுக்கும் காதலுக்கும் அவள் தரும் மரியாதை!
எதற்கும் வழியாதே!
தவறுதலாய் அவள் கைக்குட்டை கீழே விழுவதைப் பார்த்துவிட்டால் ஓடிப்போய் சிதறு தேங்காய்ப் பொறுக்கு பவனைப் போல் பொறுக்காதே. செடிக்கு அடியில் கிடக்கும் மலரைப் போல் நிதானமாய் எடு.
அதை அவளிடம் தருகையில் 'உங்க கர்ச்சீப். மிஸ் பண்ணிட்டீங்க' என்று வழியாதே. 'இது உன் கர்ச்சீப்பா' என்று பந்தாவாகக் கேள்.
இன்னொரு தெய்வாதீனத் தருணத்தில் நீயும் அவளும் அருகருகே நிற்க வேண்டிய வாய்ப்பு கிடைக்கலாம். அப்படி அவள் அருகில் நிற்கையில் உனக்குக் கைகால்கள் உதறலாம். அல்லது சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு வானத்தைப் பார்த்து ஏகாந்தமாய் நமட்டுச்சிரிப்பு சிரிக்கத் தோன்றலாம். இதில் நீ எதைச் செய்தாலும், உனக்கு அவள் போட்டுவைத்திருக்கும் மதிப்பெண் அம்பேல் ஆகிவிடும்.
ஒன்றும் தெரியாத பையனைப் போல அமைதியாய் நில். அமைதி ஓர் அற்புதமான வசிய மருந்து!
ஏகலைவனாய் இரு!
நீ எத்தனையோ காதல் காவியங் களைப் பார்த்திருக்கலாம். எத்தனையோ காதல் படங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், அவை எதிலிருந்தும் உனக்கான காதலை நீ எடுத்திருக்க முடியாது.
அது அவளிடம் மட்டுமே கொடுத்தனுப்பப்பட்டு இருக்கிறது.
அதை, அவளை நீ பார்த்த நொடியிலேயே உன்னிடம் சேர்த்துவிட்டாள்.ஆகையால், காதலில் அவளே உனக்கு குரு.
அதற்கான குருதட்சணையாக, அவள் உன் உயிரைக் கேட்டாலும், ஏகலைவன் போல் யோசிக்காமல் கொய்து தரத் தயராய் இருக்க வேண்டும் நீ. ஆனால், அப்படிக் கேட்க அவள் ஒன்றும் துரோணர் இல்லை. என்றாலும் அவள் எப்போது எது கேட்டாலும் தருவதற்குத் தயராய் நீ ஏகலைவனாகவே இரு!
ஐம்புலனிலும் அவளை வை!
கண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும் இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும் ஒன்றாய் இருப்பது பெண்ணிடம் மட்டுமே என்று அடித்துச் சொல்கிறது திருக்குறள். உன் காதலியும் இப்படித்தான் உன் ஐம்புலன்களையும் சொக்கவைக்கப் போகிறாள். ஆனால், அதற்கு முன்... உன் ஐம்புலனாலும் அவளை நீ காதலி.
கண்களில் அவள் உருவத்தை வை,
காதுகளில் அவள் குரலை வை,
சுவாசத்தில் அவள் வாசம் வை,
உதடுகளில் அவள் பெயரை வை,
உணர்வில் அவள் உயிரை வை!
ஒரு நாள் காதலைச் சொல்!
அவள் மகிழ்வாய் இருக்கும் நேரம் பார்த்து, ''நான் ரொம்ப நாளாய் ஒருத்தியைக் காதலிக்கிறேன் அவள் நீயா?' என்று கேள்.
புன்னகையை அடக்கிக்கொண்டு 'ஏன்... அவள் யாரென்று உனக்குத் தெரியாதா?' என்பாள்.
'அவளை நினைக்க ஆரம்பித்த பிறகு என்னையே நான் மறந்துவிட்ட தால், அவள் யார் என்பது தெரியாமல் போய்விட்டது' என்று சொல்.
'உன்னை ஞாபகப்படுத்திக்கொள். அவள் யாரென்பது தெரிந்துவிடும்' என்பாள்.
'அவளை நான் மறந்தால்தானே என் ஞாபகம் எனக்கு வரும்' என்று கேள்.
'அவளை மறந்துவிட வேண்டியது தானே' என்பாள்.
'என் ஆயுள் காலம் வரை அவளை ஞாபகம் வைத்திருப்பேன்' என்பது நிஜமில்லைதான்.
ஆனால், அவளை நான் ஞாபகம் வைத்திருக்கும்வரைதான்... 'நான் உயிரோடு இருப்பேன் என்பது மட்டும் கண்டிப்பாய் நிஜம்' என்று சொல்.
'அப்படியானால் நீ காதலிக்கும் பெண் நான்தான்' என்பாள் தலையைக் குனிந்து.
'எனக்குத் தெரியும்' என்று சொல்.
செல்லமாய் கோபிப்பாள். பிறகு கண்டிப்பாய் கிடைக்கும் அழகான பிகு முத்தம்!
ஓர் உலகம் செய்!
அந்த உலகம் அற்புதமானது. அங்கே கடற்கரை, திரையரங்குகள் எல்லாம் உண்டு. ஆனால் உங்களைத் தவிர வேற யாருமே இல்லை. அங்கே சில்லென சூரியன் உதிக்கும்... கதகதப்பாய் மழை பெய்யும்.
அந்த உலகம் எங்கே இருக்கிறது என்று கத்தாதே. நீ உன் காதலியோடு எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் அந்த உலகம் இருக்கும்.
ஆனால், நீங்கள் போகும் இடமெல்லாம் உங்கள் பின்னாலேயே வரும் ஒரு ஆப்பிள் மரம். அவசரப்பட்டு அந்த மரக்கனியைத் தின்றுவிடாதீர்கள். அதற்கின்னும் காலமும் கனியவில்லை. ஆப்பிளும் கனியவில்லை!
ஒளவியும் ஒளவாமலும் பழகு!
இது என்ன வார்த்தை என்று முழிக்காதே. தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், அணைத்தும் அணைக்காமலும் என்ற வார்த்தைகள் எல்லாம் கலந்தெடுத்த, காதலுக்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட அழகான வார்த்தை இது.
தொடுவானம் எப்போதும் பூமியைத் தொட்டுக்கொண்டு இருப்பது மாதிரித்தான் தெரியும். ஆனால் தொடாது. அதற்காக வானமும் பூமியும் தொட்டுக்கொள்வதே இல்லை என்று அர்த்தம் அல்ல. மாபெரும் வானத்துக்குள்தான் இருக்கிறது இந்த பூமி. அப்படித்தான் நீயும் அவளும் பழக வேண்டும். அவள் வானமாய்... நீ பூமியாய்!
காதல் காலம் என்பது, பார்ப்பதற்கும் பேசுவதற்குமே போதாது. ஆகையால் இப்போதைக்கு அவளைப் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இரு.
தொடுதலையும் படுதலையும் அவ்வப்போது அனிச்சையாய் காதலே அரங்கேற்றிக்கொள்ளும்!
டீம் எவரெஸ்ட்
Friday, February 5, 2010
சமீபத்தில் புதிய தலைமுறையில் டாக்டர். அப்துல் கலாமின் இளைய இந்தியா தொடரில் செயல்வீரர்கள் என்ற வரிசையில் "எவரெஸ்ட் டீம்" பற்றிய கட்டுரையை படித்தேன். மிகவும் அருமையான சேவை செய்கிறார்கள் இவர்கள். படித்துப் பாருங்கள்...
எவரெஸ்ட் என்பது உலகின் உயர்ந்த சிகரம். மலையேறும் வீரன் சிகரத்தைத் தொட்ட மகிழ்ச்சிக்கு இணையான மகிழ்ச்சி, ஏதேனும் சிறு உதவியை மற்றவர்களுக்கு செய்துப் பார்த்தாலும் கிடைக்கும். எனவேதான் உயர்ந்த உள்ளங்களின் சங்கமமான இந்த அமைப்புக்கும் ‘எவரெஸ்ட்’ என்று பெயர்.
சுமார் மூவாயிரத்து ஐநூறு பேர் இவ்வமைப்பில் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டு சமூகத்துக்கு, தங்களால் ஆன பங்களிப்பினை செய்துவருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்.
எவரெஸ்ட்டுக்கு என்று அலுவலகம் கூட கிடையாது. ஒருவரை ஒருவர் இவர்கள் பெரும்பாலும் சந்தித்தது கூட இல்லை. இண்டர்நெட்தான் இவர்களை ஒருங்கிணைக்கிறது. யாருக்காவது உதவி தேவை என்பதை அறிந்தால், உடனடியாக இண்டர்நெட்டில் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அச்சமயத்தில் இயன்றவர்கள் உடனடியாக பங்களிக்கிறார்கள். அவ்வப்போது இவர்களில் சிலர் ஒன்றுகூடி களச்சேவையும் செய்வதுண்டு.
கட்டுரையாசிரியரின் இணையதளத்தில் மேலும் படிக்க இங்கு கிளிக் பண்ணுங்க.
மேலும் சில இணைப்புகள் - இணையத்தில் தேடிய போது கிடைத்தவை இவை:
கிழக்கு பதிப்பக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி அவர்களின் எவரெஸ்ட் டீம் பற்றிய பதிவு
http://thoughtsintamil.
எவரெஸ்ட் டீம் நிறுவனர் கார்த்தீபனின் சமூக இணையதள பக்கம்
http://ngogateway.com/ngo-
டீம் எவரெஸ்ட் வலைப்பூ
http://teameverest.wordpress.
அப்படியா?
Sunday, January 31, 2010
ஜென் குருவான ஹகுயின் எல்லோராலும் தூய்மையானவர் என்று புகழப்பட்டு
பெரிதும் மதிக்கப்படுபவர். ஜப்பானிய அழகி ஒருத்தி அவர் வாழும் இடத்திற்கு அருகில் உணவு விடுதி வைத்திருந்த தம்பதிகளுக்கு ஒரே புதல்வி. திடீரென்று ஒரு நாள் அவள் கர்ப்பமுற்றிருப்பதைக் கண்ட பெற்றோர் திகைத்தனர். கோபம் மேலிட இதற்குக் காரணமானவன் யார் என்று பெற்றோர் அவளைக் கேட்டனர். பதில் வரவில்லை. உடனே மிகவும் அவளை வற்புறுத்தவே அவள் ஹகுயின் பெயரைக் கூறினாள். கோபமடைந்த பெற்றோர் ஹகுயினை அணுகிக் கத்தினர்.
"அப்படியா?" என்றார் ஹகுயின்.
குழந்தை பிறந்தவுடன் அதை ஹகுயினிடம் கொண்டு வந்து விட்டனர் பெண்ணின்
பெற்றோர். அவரது நல்ல பெயருக்குக் களங்கம் ஏற்பட்டது. அதைப் பற்றி அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. குழந்தையைச் சீராட்டி நன்கு வளர்க்க ஆரம்பித்தார். அண்டை அயலாரிடம் பால் வாங்கி குழந்தைக்குக் கொடுத்து வரலானார்.
ஒரு வருடம் கழிந்தது. குழந்தையின் தாயான அந்தப் பெண்ணால் பொறுத்துக்
கொள்ள முடியவில்லை. மீன் சந்தையின் மீன் விற்பனை செய்யும் இளைஞன் ஒருவனே குழந்தையின் தகப்பன் என்று அவள் உண்மையைப் பெற்றோரிடம் கூறினாள். உடனே பெண்ணின் பெற்றோர் குழந்தையைத் திரும்பப் பெற வேண்டி ஹகுயினிடம் விரைந்தனர். குழந்தையைத் திருப்பித் தர ஹகுயின் இசைந்தார்.
தங்கள் செயலுக்கு மன்னிப்பு அளிக்குமாறு அவரைப் பெண்ணின் பெற்றோர் மன்றாடிக் கேட்டுக் கொண்டு குழந்தையின் தந்தை யார் என்பதையும் கூறினர்.
ஹகுயின் கூறினார்: "அப்படியா?"
நன்றி: மஞ்சரி அக்டோபர் 2006
நன்றி: http://www.nilacharal.com/tamil/specials/zen_stories_288.asp
ஈரோட்டில் ஓர் புரட்சி அமைப்பு - பசுமை உலகம்
Monday, January 11, 2010
கை ரேகையை நம்பாதே, கைகளை நம்பு.
காடு நகரமானால், நாடு நரகமாகும்.
மனைவியை மட்டும் நேசி, எயிட்ஸ் வருமா யோசி.
- நேரு யுவ கேந்திரா திட்டத்தின் உதவியுடன் இளைஞர் மன்றங்களுக்குத் தேவையான விளையாட்டுக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- இளைஞர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் பேணும் விதமாக கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டும் ஊக்குவிக்கப்பட்டும் வரப்படுகிறது.
- நாட்டுநலப் பணித்திட்ட முகாம்கள், தன்னம்பிக்கை முகாம்கள், உலகப்பொருளாதார விளக்க முகாம்கள், தொழில் முனைவோர் ஆலோசனை முகாம்கள் ஆகியவைகளில் பசுமை உலகம் உற்சாகமாக பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வேலைவாய்ப்புக்காக அணுகுவோரையும், வேலை வாய்ப்பு கொடுப்போரையும் பசுமை உலகம் ஒருங்கிணைக்கும் சேவையும் செய்து வருகிறது.
- பிறந்தநாள், திருமணநாள் போன்ற விசேஷங்களை ஆதரவற்றோர், கருணை இல்லங்களோடு ஆத்ம திருப்தியுடன் கொண்டாட ஒருங்கினைப்பு செய்தல்.
- கண்தானம், இரத்ததானம் செய்ய விருப்பமுடையவர்கள் பசுமை உலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இவை பசுமை உலகத்தால் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கப் படுகின்றன.
- உலக எயிட்ஸ் தினம், ரேபிஸ் (வெறிநாய்க் கடி) தினம் போன்ற எல்லா உலக விழிப்புணர்வு தினங்கள் பசுமை உலகத்தால் அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- மோளக்கவுண்டம் பாளையம் அரசுப்பள்ளியில் மிகச் சமீபத்தில் கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சின்னச் சின்ன மலைக்குன்றுகள், கரடு ஆகிய இடங்களில் வளமான நீர் ஆதாரத்தை உருவாக்கி, அவற்றின் மேலும், அதனைச் சுற்றிலும் மரக்கன்றுகளை உள்ளூர் நன்கொடையாளர்களின் பெயரில் நட்டு வளர்ப்பதற்கான பணிகள் நடந்துவருகின்றன. நன்கொடை ஆர்வலர்கள் தொடர்பு கொள்ளலாம்.
- கிராம இந்தியா திட்டத்திற்காக, ஐந்து கிராமங்களை தத்தெடுக்க இருக்கிறது பசுமை உலகம். இதற்கான ஆய்வுப்பணிகள் நடந்து வருகின்றன.
- தெருக்களில் கேட்பாரற்று சுற்றித் திரியும் வெறிநாய்களின் பிரச்சினைக்காக பசுமை உலகம் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. எயிட்ஸ் போலவே வெறிநாய்க் கடி நோயும் குணப்படுத்த முடியாத நோய் என்பது இன்னும் நம்மில் பலருக்கு தெரிந்திராத விஷயும். இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த, பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஒரு குறும்படமும் தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
- பேருந்து நிலையம் மற்றும் நகரில் ஆங்காங்கு இருக்கும் ஆதரவற்ற பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்தல்
- எயிட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்விற்குத் தேவையான உதவிகளை செய்தல்
ஈரோட்டில் பதிவர்கள், வாசகர்கள் சங்கமம் | 20.12.2009
Sunday, December 6, 2009
உலகின் இளம் தலைமையாசிரியர்!
Monday, October 19, 2009
கோல்கத்தா, அக். 18: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவருக்கு "உலகின் இளம் தலைமையாசிரியர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறது பி.பி.சி.
பி.பி.சி. செய்தி நிறுவனம் "கற்றுக்கொள்ளும் வேட்கை' என்ற பெயரில் புதிய செய்தித் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளது. உலகெங்கும் மிக மோசமான சூழல்களுக்கு இடையிலேயும் கற்றுக்கொள்ளும் வேட்கையோடு செயல்படுபவர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் நோக்கோடு இத்தொடரை பி.பி.சி. வெளியிடுகிறது.
இத் தொடரின் முதல் செய்தியாக மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பள்ளிக்கூடத்தைப் பற்றி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. உலகெங்கும் இன்னமும் கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வி ஒரு பெருங்கனவாகத்தான் இருக்கிறது.
பள்ளிக்கூடங்கள், மதிய உணவு, சீருடைகள், கல்வி உதவித்தொகை என்று பல்வேறு சலுகைகளை அரசுகள் அளித்தாலும்கூட மோசமான வறுமை கோடிக்கணக்கான குழந்தைகளை இன்னமும் இளம் தொழிலாளர்களாகவே வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஒரு சூழலிலிருந்து வெளிவந்திருப்பவர்தான் பாபர் அலி (16).
குடும்பத்தின் முதல் மாணவரான பாபர் அலி தன்னுடைய வீட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள ராஜ் கோவிந்தா பள்ளியில் படித்துவருகிறார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதால், பாபர் அலிக்குப் பெரிய அளவில் செலவுகள் ஏதுமில்லை. ஆனால், பிறரைப்போல குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ளாததோடு, குடும்பத்தினருக்கு மேலும் ஒரு சுமையைத் தரும் வகையில், தான் படிக்க வந்திருப்பதே ஒரு பெரிய காரியம்தான் என்கிறார் பாபர் அலி.
அவர் சொல்வது உண்மைதான். பாபர் அலி பகுதியைச் சேர்ந்த - அவர் வயதை ஒத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கிடைக்கும் வேலையைச் செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கும் துர்பாக்கியமான நிலையிலேயே இருக்கின்றனர். ஆகையால், தனக்கு தன் குடும்பம் அளித்த மிகப் பெரிய கொடையாக பள்ளிக்கூட வாய்ப்பைக் கருதிய பாபர் அலி கல்வியில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்கிறார்.
ஆனால், பாபர் அலிக்கு பி.பி.சி. புகழாரம் சூட்ட காரணம் ராஜ் கோவிந்தா பள்ளியின் சிறந்த மாணவராக அவர் திகழ்வதற்காக அல்ல. பாபர் அலி விளையாட்டாகத் தொடங்கிய இன்னொரு காரியத்துக்காக. அதாவது, அவர் விளையாட்டாகத் தொடங்கிய பள்ளிக்கூடத்துக்காக. அப்போது பாபர் அலிக்கு வயது 9. நம் வீட்டுப் பிள்ளைகள் விடுமுறை நாள்களில் "டீச்சர் விளையாட்டு' விளையாடுவதுபோல தன் வீட்டில் ஒரு நாள் "டீச்சர் விளையா'ட்டைத் தொடங்கினார் பாபர் அலி.
டீச்சர் - பாபர் அலி. மாணவர்கள் யார் என்றால், அங்குள்ள பிள்ளைகள். அதாவது, முன்னெப்போதும் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத ஏழைப் பிள்ளைகள். விளையாட்டு எல்லோருக்கும் பிடித்துப்போனது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளையாடத் தொடங்கினார்கள். விளையாட்டு ஒரு கட்டத்தைத் தாண்டியபோதுதான் தெரிந்தது பாபர் அலிக்கு, தன் சக நண்பர்களின் ஆர்வம் விளையாட்டின் மீதானது மட்டுமல்ல, கல்வியின் மீதானதும் என்று.
பாபர் அலி தன்னுடைய விளையாட்டுப் பள்ளிக்கூடத்தை உண்மையான பள்ளிக்கூடமாக மாற்றினார். ஒரு புதிய வரலாறு அங்கு உருவாகத் தொடங்கியது. சொன்னால், பிரமித்துப்போவீர்கள். இப்போது பாபர் அலியின் பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் தெரியுமா? 800 பேர்!
பாபர் அலி நடத்தும் இந்தப் பள்ளிக்கூடம் முற்றிலும் வித்தியாசமானது. பாபர் அலியின் வீட்டு முற்றம், வீட்டைச் சுற்றியுள்ள கொட்டகைகள், மரத்தடிகளே இந்தப் பள்ளிக்கூடம். களிமண்ணில், கட்டாந்தரையில் என்று கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பாடம் கற்கிறார்கள் மாணவர்கள். ஆசிரியர்கள்? பாபர் அலியும் அவருடன் படிக்கும் சில நண்பர்களும்தான்.
ஒவ்வொரு நாளும் தான் பள்ளிக்கூடம் சென்று வந்த பின்னர், இந்தப் பள்ளிக்கூடத்துக்கு மணியடிக்கிறார் பாபர் அலி. மணியோசை கேட்டதும் ஓடி வருகின்றனர் பிள்ளைகள். பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையிலுள்ள மூர்ஷிதாபாத் பகுதியில் மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது பாபர் அலியின் இந்தப் பள்ளிக்கூடம்.
மாற்றங்களுக்கு ஓர் உதாரணம் சம்கி ஹஜ்ரா (14). இந்தச் சிறுமி தன் தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். சம்கியின் தந்தை ஊனமுற்றவர். எந்த வேலைக்கும் செல்ல இயலாத நிலையில் இருக்கிறார். பாட்டியும் அப்படியே. சம்கி அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து ஈட்டும் சொற்பத் தொகையிலேயே இந்தக் குடும்பம் வாழ்கிறது.
பள்ளிக்கூடத்தை ஒருபோதும் அறிந்திராத சம்கி ஒரு நாள் விளையாட்டாக பாபர் அலியின் பள்ளிக்கூடத்துக்குச் சென்றார். இன்றோ முறையான பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கே சவால் விடும் வகையில் இவர் படித்து வருகிறார். பாபர் அலி தனக்கு கல்வி கொடுத்த கடவுள் என்று குறிப்பிடுகிறார் சம்கி.
சரி. பாபர் அலி அப்படி என்னதான் பாடம் நடத்துகிறார்? ""நான் என் ஆசிரியர்களிடம் கேட்பதை இவர்களுக்கு அப்படியே சொல்கிறேன்; அவ்வளவுதான்'' என்கிறார் பாபர் அலி. தான் விரும்பும் சமூக மாற்றத்தை தன்னிலிருந்து தொடங்கிய பாபர் அலி மகத்தான மனிதன் என்று கொண்டாடுகிறது பி.பி.சி.
உலகின் இளம் தலைமையாசிரியர் இவரே என்றும் பிரகடனப்படுத்துகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மூர்ஷிதாபாத்தின் இந்த இளம் தலைமையாசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பொருத்தமானதுதானே!
சமச்சீர் கல்வி மெட்ரிக் பள்ளிகளுக்கு எதிரானது அல்ல: தங்கம் தென்னரசு
Wednesday, October 14, 2009
நன்றி: தினமணி
சென்னை, அக். 13: "சமச்சீர் கல்வி முறை மெட்ரிக் பள்ளிகளுக்கு எதிரானது அல்ல' என்று பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் "சமச்சீர் கல்வித் திட்டத்தின் சிறப்புகள்' குறித்த விளக்கக் கூட்டம் சென்னை பழஞ்சூரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பன்னாட்டு உறைவிடப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
இதில் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது:
சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இது மெட்ரிக் பள்ளிகளுக்கு எதிரான முடிவு அல்ல. சுதந்திரத்திற்கு முன்பு குறிப்பிட்ட சாரர் மட்டுமே கல்வி பெற்று வந்தனர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி உரிமை சில காரணங்களால் மறுக்கப்பட்டது.
அடித்தட்டு மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்று காமராஜர் பல முயற்சிகளை எடுத்தார்.
இன்று தமிழகத்தில் 1 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு உயர்நிலைப் பள்ளியும், 7 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு மேல்நிலைப் பள்ளியும் உள்ளது.
தென் மாவட்டத்தில் உள்ளவர்கள் கல்வியில் வளர்ச்சி காண அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கிறிஸ்தவ பள்ளிகளின் பங்கு மிக முக்கியமானது.
மனித வள மேம்பாட்டு குறியீட்டில் நாட்டிலேயே தமிழகம் 3-ம் இடம் பிடித்துள்ளது. இந்த மேம்பாட்டுக்கு அடிப்படையாக இருப்பது கல்வி தான். மெட்ரிக் பள்ளிகளை ஒதுக்கிவிட்டு சமச்சீர் கல்வியைக் கொண்டு வரவில்லை.
சமூக நீதி மற்றும் ஏற்றத்தாழ்வை நீக்க வேண்டுமெனில் கல்விதான் முக்கியப் பங்காற்றுகிறது. ஏற்றத்தாழ்வுகளை நீக்கக்கூடிய ஆயுதமாகக் கல்வி விளங்குகிறது. கல்வி முறையிலும் ஏற்றத்தாழ்வு உண்டு.
சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும், நமது எதிர்கால சந்ததியினரை முன்னேற்றவும் ஒரேவகையான கல்வித்திட்டத்தைக் கொண்டு வருவது அவசியமாகும்.
ஆங்கிலம் தொடரும்...: மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலம் அப்படியே தொடரும். மொழி சிறுபான்மை பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வரும் தெலுங்கு, உருது ஆகிய மொழிகளை அவரவர் மொழிகளிலேயே படிக்கலாம். அனைத்து குழந்தைகளுக்கும் எவ்வித மன உளைச்சல் இல்லாத வகையிலும், சிந்தனை திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலும், பாடச்சுமையைக் குறைக்கும் வகையிலும் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளியில் உள்ள நல்ல அம்சங்கள், கருத்துக்களை உள்ளடக்கிய வகையில் சமச்சீர் கல்வி திட்டம் அமைய வேண்டும். மெட்ரிக் பள்ளிகளும் அரசுக்கு, ஆலோசனைகளை வழங்க முன்வர வேண்டும்.
மெட்ரிக் பள்ளி இயக்குநரகம்: தமிழகத்தில் சுமார் 3,600 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகள் நிர்வாகம், கட்டமைப்பைக் கண்காணிக்க வேண்டி இருப்பதால் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அப்படியே தொடரும்.
அக்.15-ல் வரைவுப் பாடத்திட்டம் வெளியீடு: வரும் அக்டோபர் 15-ம் தேதி வரைவுப் பொதுப் பாடத்திட்டம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு பாடநூல் கழக நிறுவனத்தின் மூலமே அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும். மெட்ரிக் பள்ளிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். தமிழ்நாடு மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகரன், செயலாளர் என்.விஜயன், செயின்ட் ஜான்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் கிஷோர்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.