Showing posts with label ஈரோடு. Show all posts
Showing posts with label ஈரோடு. Show all posts

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் சங்கமம் 2010 - அனுபவம்

Monday, December 27, 2010

நான் நிகழ்ச்சிக்கு பெருமாள் முருகன் சார் பேசிக் கொண்டிருக்கும் போது தான் அரங்கினுள் நுழைந்தேன். நுழைவாயிலில் ரெண்டு குட்டிப் பொண்ணுங்க பேனாவும் குறிப்பு நோட்டும் கூடவே ஊர்ப் பழமைங்கற புத்தகமும் கொடுத்து வரவேற்றனர்.

சிறுகதைகளைப் பற்றி பெருமாள் முருகன் சார் பேசிக் கொண்டிருந்தார். சிறுகதை எழுத நினைப்பவர்களுக்கு என அவர் சொன்னாலும், அவர் பேச்சை நான் உள்வாங்கிக் கொண்டது நம் அனுபவத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றுதான். சிறுகதை என்பது கருத்து சொல்வதாக இல்லாமல் நம் அனுபவத்தினூடே படிப்பவரை பயணிக்க வைக்க வேண்டும், படிப்பவர் தம் பிடித்தமான கருத்துக்களை தேடிப் பொறுக்க முயற்சித்தாலும் கூட. அதுவே காலம் காலத்திற்கும் நிலைக்கும் படைப்பாக அமையும். அதுவே இலக்கியமும் கூட என்பதை மிக அழகாக பிசிறில்லாமல் அவர் பேசிய விதம் அவரின் ஆழ்ந்த அனுபவப் பகிர்வாக இருந்தது. எடுத்துக்காட்டுக்களின் ஊடே அவர் சுட்டிக்காட்டிய நுணுக்கங்களும், அவை பிடிபட வேண்டுமானால் வாசிப்பும், வாசிப்பும் பிடிபட அவர் தந்த ஆவலான கதைகளும் ஒரு தேர்ந்த கலைஞனுக்கே உரித்தானவை. நான் மிகவும் ரசித்தேன்.

அவர் பேச்சினூடே நான் எடுத்த சில குறிப்புகள்:
1. தமிழகம்.இன் - சிறுகதைகள் தொகுப்புத் தளம்
2. கந்தவர்வன் எழுதிய அதிசயம் சிறுகதை - வித்தியாசப்பட்ட கதைக்கள உதாரணம்
3. ஜானகிராமன் எழுதிய காண்டாமணி சிறுகதை
4. உடனடியாக சிறுகதைகள் வாசிக்க 100 சிறுகதைகள் - வலைப்பூ முகவரியை குறிப்பெடுக்க மறந்துவிட்டேன்.

அடுத்து பாமரன் அவர்கள் உலக மொக்கையர்களே ஒன்றுபடுங்கள் என்ற தலைப்பில் சுவாரஸ்யமான பகிர்வை தந்தார். ரசித்தேன்.

அடுத்து குறும்படம் எடுக்கலாம் வாங்கன்னு தமிழ்ஸ்டூடியோ.காம் அருண் பேசினார். ஒரு குறும்படம் எடுக்கும் ஐடியா உங்களுக்கு இருந்தா கண்டிப்பா இவரைத் தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவசமாக பயிற்சியும் ஆலோசனையும் தரோம் வாங்க என்ற அன்பான அழைப்புடன் மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டார். அவர் குறும்படம்னா என்னனு சுட்டிக்காட்ட சொன்ன தொங்கட்டான் சிறுமி கதை நல்லா இருந்த்தது. முடிவாக அது ஒரு கவிதைன்னு சொன்னப்ப குறும்படம் ஓட்ட என்ன வேலை செய்யனும்னு புரிஞ்ச மாதிரி இருந்தது.

அடுத்து உலகத் திரைப்படங்கள் தலைப்பில் சிதம்பரம்.T பேசினார். வணிக மற்றும் முழுமையான பொழுதுபோக்குப் படங்கள் தான் தமிழ் சினிமாவில் மலிந்து கிடக்கின்றன, ஒன்றிரண்டு தவிர்த்து என்றார். நம்மூருக்கு ஹாலிவுட்டில் எடுக்கப்படும் உலகத்தரத்திலான படங்கள் கூட வருவதில்லை. அவற்றிலும் பிரமாண்ட செலவு, பிரமிப்பான காட்சிகள், விறு விறுப்பு, கவர்ச்சி கொண்ட படங்கள் தான் இங்கு வருகின்றன என்று அவர் சொன்ன செய்தி ஒரு இனம் புரியாத ஏக்கத்தை தந்தது. எல்லாரும் உலகத்தரம் உலகத்தரம்ன்னு சொல்றதுனால, இவங்க எதைத்தான் உலகப்படம்ன்னு சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்காகவே அந்தப் படங்களைப் பார்க்க ஒரு ஆவல் ஏற்படுகிறது.

அடுத்து கதிர் சாரின் உரிமையான கண்டிப்புடன் அனைவரும் அரங்கினுள் அமைதி காக்க, ஒவ்வொருவரும் தங்களை நேர்த்தியாக அறிமுகம் செய்து கொண்டோம்.

அடுத்து மதிய விருந்து. சைவம் அசைவம்ன்னு கல்யாணப் பந்தியும் கிடா வெட்டும்  சேர்த்து வச்ச மாதிரி நிறைவான சாப்பாடு.

அடுத்து நிழற்படங்களில் நேர்த்தி என்ற தலைப்பில் ’கருவாயன்’  சுரேஷ்பாபு அழகான புகைப்படங்களோடு மிக எளிமையாக சொல்லிக் கொடுத்தார். மேடையேறி பேசுவது இது தான் முதல் தடவை என்று சொன்னாலும், மேடைக்கு பழகியிருக்கவெல்லாம் அவசியமில்லை, பேசவேண்டிய விசயத்தில் வல்லுனராக இருந்தாலே போதும் என்பது அவரிடம் இருந்து எனக்கு கிடைத்த கூடுதல் டானிக். புகைப்படத்தின் தரம் இரண்டே விசயத்துலதான் இருக்கு. ஒண்ணு கேமிராவுக்குள்ள வருகிற வெளிச்சம், இரண்டாவது  ஸ்பீடு -ன்னு ஆரம்பிக்கும் போதே இவ்வளவுதானாங்கிற மாதிரி உணர்வு ஏற்பட்டது. தொடர்ந்து எந்தக் கேமராவை எப்படிப் புடிக்கணும், படம் எடுக்குறதுக்கு முன்னாடி என்ன முன்னேற்பாடுகளை செய்யனும், படம் எடுக்கும் போது என்னென்ன விசயங்களை கவனிக்கனும், படம் எடுத்த பிறகு எடிட் பண்ணி சரி செய்ய வேண்டியிருந்தா கவனிக்க வேண்டியது என ஒரு நேர்த்தியான செயல் விளக்கம் அதற்குத் தகுந்த உதாரணப் படங்களுடன் தந்தார். கேமராவைப் பொருத்தும், படம் எடுக்குறவங்களப் பொருத்தும் படம் எப்படி அமையும், இப்படி நிறைய டிப்ஸ் கொடுத்தார். இவருடைய அறிமுகத்துல, இவருடைய படங்கள் நிறைய பரிசுகளும் விருதுகளும் வாங்கியிருக்கின்றன என்று சொன்னார்கள். அவற்றின் அடிப்படை ரகசியங்களை அதே நேர்த்தியுடன் பகிர்ந்து கொண்டார்.

அடுத்து இன்றைய இணையமும் வலைப்பூக்களும் என்ற தலைப்பில் ஓசை செல்லா இணையத்தோடு அவரின் ஆரம்ப காலம் முதல் இன்று வரையிலான தொடர்பையும் வளர்ச்சியையும் பகிர்ந்து கொண்டார். இணையத்தின் வலிமையையும் அதில் தமிழ் வலைப்பூவின் ஆரம்ப காலத்தையும், அப்போது தமிழ் பாண்ட்-ல் இருந்த சிரமத்தையும், அவரின் புது முயற்சிகள் எப்படி வெற்றி பெற்றன, வலைபூக்கள் சமூகத்தில் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் என அவர் பகிர்ந்து கொண்ட விசயங்கள், ஒரு வெப் டெவலப்பர் (Web Developer) என்ற அளவில் எனக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தந்தது.

அடுத்து நிழற்படங்களின் வழியே ஆவணப்படுத்துதல் என்ற தலைப்பில் லட்சுமனன் மற்றும் அவர் நண்பர் வினோத் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்பட ஆவணங்கள் (திருமணம் மற்றும் பழங்குடியினர் வாழ்வியல்) காட்டப்பட்டன. அவை எடுக்கப்படும் நோக்கமும் விதமும் லட்சுமணன் அவரால் விளக்கப்பட்டன. படங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக இருந்தன. கூடவே தேநீர் விருந்தும் அளிக்கப்பட்டது.

அடுத்து ஈரோடு கதிர் சார் ஈரோடு வலைப்பதிவு குழும உறுப்பினர்களை மேடைக்கு அழைத்து அறிமுகம் காட்டி, அனைவருக்கும் நன்றி நவின்று சேர்தளம் வசம் ஒப்படைத்தார்.



அடுத்து சேர்தளம், திருப்பூர் வலைப்பதிவு குழும உறுப்பினர்களால் கலந்துரையாடல் ஒருங்கிணைக்கப்பட்டது. சுவாரஸ்யமான கேள்விகள் முன் வைக்கப்பட்டு கருத்துக்களும், அனுபவங்களும் பதிவர்களால் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

வலைப்பதிவு என்பது தனிநபருக்கானது, சுதந்திரமானது என்னும் போது அதை சமூகக்குழுமம் எனும் முடிச்சுக்குள் கொண்டுவரும் போது முரண்பாடு ஏற்படுவது இயல்புதானோ என்றெண்ணுகிறேன். தனிமனித சுதந்திரத்தைக் காப்பாற்றப் பாடுபடும் அளவிற்கு பரஸ்பரம் மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்கும் முயற்சியில் அடிக்கடி சறுக்கல் உண்டாகத்தான் செய்கிறது என்பதை கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் நான் உணர்ந்ததாக கொள்கிறேன். சுதந்திரத்திற்கே உரிய பொறுப்பும், சமூகத்துக்கே உரிய கட்டுப்பாடும் ஒரே அர்த்தத்தில் முரண்பட்டுக் கொள்வதாக நான் நினைத்தேன்.

உண்மையில் ஈரோடு வலைப்பதிவர்கள்  சங்கமம் 2010, எனக்கு மிக நிறைவாக அமைந்தது. நன்றி.

Read more...

சங்கமம் - 2010

Sunday, December 5, 2010

வலைபதிவர்கள், வாசகர்கள் சங்கமம் - 2010 க்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மேலும் விபரங்களுக்கு இங்கு பார்க்கவும்.

Read more...

ஈரோட்டில் ஓர் புரட்சி அமைப்பு - பசுமை உலகம்

Monday, January 11, 2010

ஈரோடு நகரின் மையப் பகுதிகளில் நீங்கள் பயணம் செய்திருக்கிறீர்களா? அப்படியானால் நடந்து செல்லும் போதோ அல்லது பஸ்ஸில் பயணம் செய்யும் போதோ அல்லது வண்டியை சிக்னலில் நிறுத்தி விட்டு சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் போதோ, பக்கத்தில் சுவர்களில் எழுதியுள்ள இந்த வாசகங்களை பார்க்காமல் நீங்கள் கடந்து சென்றிருக்க முடியாது!
கை ரேகையை நம்பாதே, கைகளை நம்பு.
காடு நகரமானால், நாடு நரகமாகும்.
மனைவியை மட்டும் நேசி, எயிட்ஸ் வருமா யோசி.

இது மாதிரி இன்னும் நிறைய விழிப்புணர்வு வாசகங்களும், பொன் மொழிகளும் அரசுச் சுவர்களை அழகுபடுத்துகின்றன. இவற்றின் பின்னணியில் 'பசுமை உலகம்' என்ற சமூகசேவை அமைப்பும் சில தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் இருக்கிறது.

அரசு மருத்துவமனை, அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, நீதிமன்ற வளாகச் சுவர் ஆகிய இடங்களில் பசுமை உலகத்தால் அழகுபடுத்தப்பட்ட இத்தகைய வாசகங்களை காணமுடியும். மேலும் ஈரோடு பேருந்து நிலையத்திற்குள் சமீபத்தில் சமீபத்தில் அமைக்கப்பட்ட அழகுப்பூங்கா, மினி பஸ் ஸ்டேண்ட் பூங்கா ஆகியவை இவ்வமைப்பின் முயற்சியாலும் தனியார் நிறுவனங்களின் உதவியாலும் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஈரோட்டில் சாதாரணமாகவே நம் கண்ணில் படுகின்ற விசயங்கள். இவை தவிர இன்னும் நிறைய விஷயங்கள் பசுமை உலகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

யார் இந்த பசுமை உலகம்?

பசுமை உலகம் அமைப்பானது உலகம் வெப்பமாதலை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கையின் பொருட்டு, மரக்கன்றுகளை ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அதிகமாக நடும் முயற்சியாக ஒரு தன்னார்வ சேவைக் குழுவாக 2001-ல் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டிலேயே 2002-ல் 'பசுமை உலகம்' என்ற தன்னார்வ சமூகசேவை நிறுவன அமைப்பாக முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

காலப் போக்கில் சமூகத்தின் தேவையுணர்ந்து, மரக்கன்றுகளை நட்டு ஈரோட்டை பசுமையாக்குவதோடு மட்டுமல்லாது, மேலும் பல சமூகப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு எல்லா வகையிலும் சமூகத்தை பசுமையாக்கிட முயன்று கொண்டிருக்கிறது இவ்வமைப்பு!

பசுமை உலகத்தின் சேவைகள்:

1. மரக்கன்று உற்பத்தி மற்றும் நடுதல்

தமிழக அரசின் "பசுமை தமிழகம் 2010" திட்டத்துடன் இணைந்து பசுமை உலகமானது, மரக்கன்றுகள் வளர்க்கும் பண்ணை அமைத்து, மரக்கன்று உற்பத்தி மற்றும் மரம் நடுதல் சேவையை செய்து வருகிறது. 2010-ல் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும் மரக்கன்றுகள் தேவைப்படுவோர் பசுமை உலகத்தை தொடர்பு கொள்ளலாம். மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

2. குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்வி

பசுமை உலகம் மூலம் ஆண்டுக்கு குறந்தபட்சம் 200 முதல் 250 ஏழைக் குழந்தைகள் கல்வி உதவி பெற்று வருகிறார்கள். இக்குழந்தைகளுக்குத் தேவையான நோட்டுப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேலும் ஈரோட்டைச் சுற்றிலும் உள்ள குடிசைவாழ் பகுதிகளில், அரசுப் பள்ளிக்கூட மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லுவதை ஊக்குவிக்கும் பொருட்டு அந்தந்தப் பகுதிகளிலேயே தன்னார்வத் தொண்டர்கள் மூலம் மாலை நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவர்களுக்கு மாதம்தோறும் சிறு ஊக்கத் தொகையாக ரூ.300/- இவ்வமைப்பின் மூலம் வழங்கப்படுகிறது. இங்கு ஏட்டுக் கல்வி தவிர வாழ்க்கை கல்வியாக சமூகத்துடன் இணக்கமான இதர விஷயங்களும் கற்றுத்தரப்படுகின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 25 முதல் 30 மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.

3. பெண்கள் முன்னேற்றம்

சமுதாயத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக ஆதரவற்ற பெண்கள், உடல் ஊனமுற்ற பெண்கள், விதவைப் பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக, சமூகத்தில் அவர்களுக்கு சிறப்பான மரியாதைப் பெற்றுத் தரும் வகையில் தன்னம்பிக்கையையும் சுய தொழில் வேலைவாய்ப்பு பயிற்சியையும் பசுமை உலகம் வழங்கி வருகிறது.

தையல் பயிற்சி, கம்ப்யூட்ட்ர் பயிற்சி, அழகுக் கலை பயிற்சி ஆகிய பயிற்சிகளுக்கு ஒவ்வொரு சுற்றுக்கும் 20 பெண்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு மதிய உணவுடன் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான பயிற்சி, ஒவ்வொன்றும் 70 நாட்களில் நிறைவடையும். இப்பயிற்சி முற்றிலும் இலவசமாகவும், பகுதி உதவித் தொகையுடனும் இரு பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

தையல் பயிற்சி:

சுயதொழில் வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்புடன் கூடிய தையல் பயிற்சியானது, பிரத்யோக பயிற்சிக் கூடத்தில் பெண்களுக்காக வழங்கப்படுகிறது. பயிற்சி பற்றிய விபரங்கள் பயிற்சி ஆரம்பிக்கும் ஒரு வாரம் முன்னதாக நாளிதழ் மற்றும் பசுமை உலக இணையதளத்தில் வெளியிடப்படும் அல்லது பசுமை உலகம் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

2002-லிருந்து 2009 நவம்பர் வரை 300 பெண்கள் இலவச தையல் இயந்திரத்துடன் பயிற்சியும் பெற்றுள்ளார்கள்.

கம்ப்யூட்ட்ர் பயிற்சி:

பசுமை உலகத்தின் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் நேரு யுவ கேந்திரா, நகராட்சி மற்றும் நபார்டு நலத்திட்ட உதவியுடன் பெண்களுக்காக அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சியும், D.T.P, Tally போன்ற படிப்புகளும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் அளிக்கப்படுகிறது. இதுவரை தற்காலிகமாக இதில் 125 பேர் பயனடைந்துள்ளனர்.

அழகுக் கலை பயிற்சி:

நபார்டு உதவியுடன் பெண்கள் தாங்களே சுயமாக அழகுக் கலை நிலையம் வைத்துக் கொள்ளும் வகையில் சிறப்பான அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. அழகுநிலையம் சொந்தமாக வைக்க இவர்களே வங்கிக் கடனுக்கும் பரிந்துரை செய்கிறார்கள்.

தன்னம்பிக்கை மற்றும் யோகா பயிற்சி:

பெண்களுக்கு சமூகத்தில் உண்டாகும் தடைகளை எதிர்த்துப் போராடவும், வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் யோகா மற்றும் தன்னம்பிக்கை  வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
ஒரு தாய் கர்ப்ப காலத்தில் எப்படி இருக்கிறார்ளோ, எதை உணருகிறார்ளோ, எந்த மனநிலையை அதிகம் கொண்டிருக்கிறார்ளோ அதைப் பொறுத்து குழந்தையும் அதன் வளரும் விதமும் இருக்கும். குழந்தையின் இயல்புக்கும் தாயின் மனம் மற்றும் உடல்நிலைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்பது அறிவியல் உண்மை மற்றும் நம் அனுபவ உண்மையும் கூட. இத்தகைய கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவத்திற்கு வழிகோலும் வகையிலும், நாளைய தலைமுறைக்கு நல்ல குழைந்தைப் பேறு உண்டாகிடவும் யோகா பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சி தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

4.இளைஞர்களுக்கு
  • நேரு யுவ கேந்திரா திட்டத்தின் உதவியுடன் இளைஞர் மன்றங்களுக்குத் தேவையான விளையாட்டுக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
  • இளைஞர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் பேணும் விதமாக கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டும் ஊக்குவிக்கப்பட்டும் வரப்படுகிறது.
  • நாட்டுநலப் பணித்திட்ட முகாம்கள், தன்னம்பிக்கை முகாம்கள், உலகப்பொருளாதார விளக்க முகாம்கள், தொழில் முனைவோர் ஆலோசனை முகாம்கள் ஆகியவைகளில் பசுமை உலகம் உற்சாகமாக பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
  • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வேலைவாய்ப்புக்காக அணுகுவோரையும், வேலை வாய்ப்பு கொடுப்போரையும் பசுமை உலகம் ஒருங்கிணைக்கும் சேவையும் செய்து வருகிறது.

6. மற்ற செயல்பாடுகள் மற்றும் சமீபகால திட்டங்கள்:
  • பிறந்தநாள், திருமணநாள் போன்ற விசேஷங்களை ஆதரவற்றோர், கருணை இல்லங்களோடு ஆத்ம திருப்தியுடன் கொண்டாட ஒருங்கினைப்பு செய்தல்.
  • கண்தானம், இரத்ததானம் செய்ய விருப்பமுடையவர்கள் பசுமை உலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இவை பசுமை உலகத்தால் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கப் படுகின்றன.
  • உலக எயிட்ஸ் தினம், ரேபிஸ் (வெறிநாய்க் கடி) தினம் போன்ற எல்லா உலக விழிப்புணர்வு தினங்கள் பசுமை உலகத்தால் அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • மோளக்கவுண்டம் பாளையம் அரசுப்பள்ளியில் மிகச் சமீபத்தில் கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சின்னச் சின்ன மலைக்குன்றுகள், கரடு ஆகிய இடங்களில் வளமான நீர் ஆதாரத்தை உருவாக்கி, அவற்றின் மேலும், அதனைச் சுற்றிலும் மரக்கன்றுகளை உள்ளூர் நன்கொடையாளர்களின் பெயரில் நட்டு வளர்ப்பதற்கான பணிகள் நடந்துவருகின்றன. நன்கொடை ஆர்வலர்கள் தொடர்பு கொள்ளலாம்.
  • கிராம இந்தியா திட்டத்திற்காக, ஐந்து கிராமங்களை தத்தெடுக்க இருக்கிறது பசுமை உலகம். இதற்கான ஆய்வுப்பணிகள் நடந்து வருகின்றன.
  • தெருக்களில் கேட்பாரற்று சுற்றித் திரியும் வெறிநாய்களின் பிரச்சினைக்காக பசுமை உலகம் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. எயிட்ஸ் போலவே வெறிநாய்க் கடி நோயும் குணப்படுத்த முடியாத நோய் என்பது இன்னும் நம்மில் பலருக்கு தெரிந்திராத விஷயும். இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த, பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஒரு குறும்படமும் தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

பசுமை உலகம் பற்றிய செயல்பாடுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வசதியாக இன்டர்னெட் ஊடக வசதிகளும் (blog, twitter), செல்போன் இலவச SMS வசதிகளும் பசுமை உலகத்தால் வழங்கப்படுகின்றன. உங்களின் வசதிக்கேற்ப ஒன்றையோ எல்லாவற்றையுமோ பயன்படுத்திக்கொள்ளலாம். கீழே இந்த வசதிகள் அனைத்துக்குமான இணைய இணைப்புகள் (Links) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

7. திட்டங்கள் தயார், உதவி தேவை:

சில நல்ல திட்டங்கள் போதிய நிதி ஆதாரமின்மையால் இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வராமல் தேங்கி நிற்கின்றன. அவற்றில் சில
  • பேருந்து நிலையம் மற்றும் நகரில் ஆங்காங்கு இருக்கும் ஆதரவற்ற பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்தல்
  • எயிட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்விற்குத் தேவையான உதவிகளை செய்தல்
இதுபோன்ற இன்னும் ஆரோக்கியமான நல்ல திட்டங்களும் ஆக்கபூர்வமான எண்ணங்களும் என்றும் பசுமையாக 'பசுமை உலகமிடம்' இருக்கிறது.

எல்லா சமூக சேவை அமைப்பிற்கும் இதயத் துடிப்பாக இருபது சேவை மனப்பான்மை கொண்ட தொழிலதிபர்கள், நல்ல இதயம் படைத்த சமூக ஆர்வலர்கள், மக்கள் ஆகியோர்தான். கொடுக்கும் நிதி முழுமையாக, சரியான இலக்குக்காக, சரியான விதத்தில் சென்று சேர வேண்டும் என நினைக்கும் நன்கொடையாளர்கள் நம்பிக்கையோடு பசுமை உலகத்தை அணுகலாம்!

இன்டர்நெட்டில் பசுமை உலகம்:

பசுமை உலகம் இணையதளம் இப்போது புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப் பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பசுமை உலகம் அதன் செயல்பாடுகளை உடனுக்குடன் பதிவு செய்து வருகிறது. இவற்றில் உங்களை பதிவு செய்து கொண்டு மேலும் பசுமை உலகத்தின் சேவையை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பசுமை உலகம் பற்றிய செயல்பாடுகளை உடனுக்குடன் செல்போனிலேயே தெரிந்து கொள்ளமுடியும். அதற்கு இங்கு சென்று பதிவு செய்யலாம் அல்லது  <9870807070> என்ற எண்ணிற்கு <ON GREENWORLD-NGO> என்று செய்தி அனுப்பவும். உங்கள் நெட்வொர்க்கைப் பொறுத்து  ஒருமுறை மட்டும் National SMS-க்கான செலவாகும்.

டிவிட்டரில் பசுமை உலகம்: http://twitter.com/greenworldindia
ஆர்குட்டில் பசுமை உலகம்: http://www.orkut.co.in/Main#Community?cmm=97382765
SMS -ல் பசுமை உலகம்: http://labs.google.co.in/smschannels/channel/greenworld-NGO
பசுமை உலகம் இணையதளம்: http://greenworldindia.org

நீங்கள் உங்களின் இமெயில் கையொப்பம், வலைப்பூ, இணையதளம், சமூக வலைதள புரபைல்(Profile) ஆகியவற்றில் 'பசுமை உலகம்' இணையதளத்தின் முகவரிக்கு இணைப்பு கொடுத்து உதவலாம். இணைப்பு கொடுக்க இங்கு வாருங்கள்.

உங்களின் ஓய்வு நேரத்தை சமூக சேவைக்கு செலவிட விரும்பினால் பசுமை உலகத்தில் தன்னார்வ சேவகராக இணைந்து கொண்டு, வாய்ப்பு கிடைக்கும் போது உடலுழைப்பையோ, கருத்துக்களையோ அல்லது எந்த வகையில் உங்களது பங்களிப்பை தரமுடியுமோ அவ்வாறு தந்து உதவலாம். இணையதளத்திலேயே உங்களை பதிவு செய்து கொள்ள இங்கே சுட்டுங்கள்.

அதேபோல் உதவி தேவைப்படுவோர்களும் தங்களைப் பற்றிய விபரங்களை இங்கே பதிவு செய்ய முடியும்.

மேலும் தொடர்புக்கு பசுமை உலகம் அமைப்பின் தலைவர் மணமோகன் (98421 39831), செயலாளர் பூங்குன்றன் (98426 74110) இவர்களை அணுகலாம்.

Read more...

ஈரோட்டில் பதிவர்கள், வாசகர்கள் சங்கமம் | 20.12.2009

Sunday, December 6, 2009

மேலும் தகவல்களுக்கு படத்தின் மீது ஒரு கிளிக் பண்ணுங்க...


Read more...

தமிழ்நாட்டில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ஈரோட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

Saturday, October 10, 2009

நன்றி: தினத்தந்தி (ஈரோடு, அக். 10-)

தமிழ்நாட்டில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் அரசு தேர்வாணையம் மூலம் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று காலை ஈரோடு வந்தார். ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்துக்கு சென்று பார்வையிட்டார். பள்ளிக்கூடத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் டாக்டர் அப்துல் கலாம் நூலகத்தை அமைச்சர் சுற்றிப்பார்த்தார். பின்னர் மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்:

தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். 12 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் ஆதி திராவிடர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அரசு அனுமதித்துள்ளது. அதற்கான தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்ததும் ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.

ஆசிரியர்கள் பற்றாக்குக்குறை:

இந்த 12 ஆயிரம் ஆசிரியர்களில் 1,000 ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்கள் ஆவார்கள். இவர்கள் நியமிக்கப்படும் வரை பிளஸ்-2 மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் உதவியுடன் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் 5 ஆசிரியர்கள் வீதம் அரசு நியமித்து வருகிறது. இதனால் அந்த பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை வர வாய்ப்பு இல்லை.

சமச்சீர் கல்வி:

தமிழகத்தில் சமச்சீர் கல்விக்கான வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஒரு வார காலத்திற்குள் முடிவடையும். பின்னர் அது இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொது மக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியவர்களின் கருத்து கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடத்தப்படும்.

தற்போது 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படுகிறது. அடுத்த ஆண்டு மற்ற வகுப்புகளுக்கு பாடத்திட்டம் தயாரிக்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் கூறியபடிதான் சமச்சீர் கல்வி முறை அமலாக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்க வாழ்க்கை கல்வி முறையை சமச்சீர்கல்வியில் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆ.மு.காசிவிஸ்வநாதன், ஈரோடு மாவட்ட கலெக்டர் சுடலை கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் என்.கே.கே.பி.ராஜா, எஸ்.குருசாமி, மற்றும் மேயர் குமார் முருகேஸ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொன்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நூலகம் திறப்பு:

முன்னதாக பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 3 வகுப்பறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். மேலும் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அப்துல்கலாம் நூலகத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

Read more...

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP