Showing posts with label சமூகம் சேவை. Show all posts
Showing posts with label சமூகம் சேவை. Show all posts

டீம் எவரெஸ்ட்

Friday, February 5, 2010

சமீபத்தில் புதிய தலைமுறையில் டாக்டர். அப்துல் கலாமின் இளைய இந்தியா தொடரில் செயல்வீரர்கள் என்ற வரிசையில் "எவரெஸ்ட் டீம்" பற்றிய கட்டுரையை படித்தேன். மிகவும் அருமையான சேவை செய்கிறார்கள் இவர்கள். படித்துப் பாருங்கள்...

எவரெஸ்ட் என்பது உலகின் உயர்ந்த சிகரம். மலையேறும் வீரன் சிகரத்தைத் தொட்ட மகிழ்ச்சிக்கு இணையான மகிழ்ச்சி, ஏதேனும் சிறு உதவியை மற்றவர்களுக்கு செய்துப் பார்த்தாலும் கிடைக்கும். எனவேதான் உயர்ந்த உள்ளங்களின் சங்கமமான இந்த அமைப்புக்கும் ‘எவரெஸ்ட்’ என்று பெயர்.

சுமார் மூவாயிரத்து ஐநூறு பேர் இவ்வமைப்பில் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டு சமூகத்துக்கு, தங்களால் ஆன பங்களிப்பினை செய்துவருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்.

எவரெஸ்ட்டுக்கு என்று அலுவலகம் கூட கிடையாது. ஒருவரை ஒருவர் இவர்கள் பெரும்பாலும் சந்தித்தது கூட இல்லை. இண்டர்நெட்தான் இவர்களை ஒருங்கிணைக்கிறது. யாருக்காவது உதவி தேவை என்பதை அறிந்தால், உடனடியாக இண்டர்நெட்டில் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அச்சமயத்தில் இயன்றவர்கள் உடனடியாக பங்களிக்கிறார்கள். அவ்வப்போது இவர்களில் சிலர் ஒன்றுகூடி களச்சேவையும் செய்வதுண்டு.
கட்டுரையாசிரியரின் இணையதளத்தில் மேலும் படிக்க இங்கு கிளிக் பண்ணுங்க.
 
மேலும் சில இணைப்புகள் - இணையத்தில் தேடிய போது கிடைத்தவை இவை:

கிழக்கு பதிப்பக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி அவர்களின்  எவரெஸ்ட் டீம் பற்றிய பதிவு
http://thoughtsintamil.blogspot.com/2009/09/blog-post_27.html

எவரெஸ்ட் டீம் நிறுவனர் கார்த்தீபனின் சமூக இணையதள பக்கம்
http://ngogateway.com/ngo-profiles/kartheeban-chandramohan-team-everest/

டீம் எவரெஸ்ட் வலைப்பூ
http://teameverest.wordpress.com

Read more...

ஈரோட்டில் ஓர் புரட்சி அமைப்பு - பசுமை உலகம்

Monday, January 11, 2010

ஈரோடு நகரின் மையப் பகுதிகளில் நீங்கள் பயணம் செய்திருக்கிறீர்களா? அப்படியானால் நடந்து செல்லும் போதோ அல்லது பஸ்ஸில் பயணம் செய்யும் போதோ அல்லது வண்டியை சிக்னலில் நிறுத்தி விட்டு சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் போதோ, பக்கத்தில் சுவர்களில் எழுதியுள்ள இந்த வாசகங்களை பார்க்காமல் நீங்கள் கடந்து சென்றிருக்க முடியாது!
கை ரேகையை நம்பாதே, கைகளை நம்பு.
காடு நகரமானால், நாடு நரகமாகும்.
மனைவியை மட்டும் நேசி, எயிட்ஸ் வருமா யோசி.

இது மாதிரி இன்னும் நிறைய விழிப்புணர்வு வாசகங்களும், பொன் மொழிகளும் அரசுச் சுவர்களை அழகுபடுத்துகின்றன. இவற்றின் பின்னணியில் 'பசுமை உலகம்' என்ற சமூகசேவை அமைப்பும் சில தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் இருக்கிறது.

அரசு மருத்துவமனை, அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, நீதிமன்ற வளாகச் சுவர் ஆகிய இடங்களில் பசுமை உலகத்தால் அழகுபடுத்தப்பட்ட இத்தகைய வாசகங்களை காணமுடியும். மேலும் ஈரோடு பேருந்து நிலையத்திற்குள் சமீபத்தில் சமீபத்தில் அமைக்கப்பட்ட அழகுப்பூங்கா, மினி பஸ் ஸ்டேண்ட் பூங்கா ஆகியவை இவ்வமைப்பின் முயற்சியாலும் தனியார் நிறுவனங்களின் உதவியாலும் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஈரோட்டில் சாதாரணமாகவே நம் கண்ணில் படுகின்ற விசயங்கள். இவை தவிர இன்னும் நிறைய விஷயங்கள் பசுமை உலகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

யார் இந்த பசுமை உலகம்?

பசுமை உலகம் அமைப்பானது உலகம் வெப்பமாதலை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கையின் பொருட்டு, மரக்கன்றுகளை ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அதிகமாக நடும் முயற்சியாக ஒரு தன்னார்வ சேவைக் குழுவாக 2001-ல் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டிலேயே 2002-ல் 'பசுமை உலகம்' என்ற தன்னார்வ சமூகசேவை நிறுவன அமைப்பாக முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

காலப் போக்கில் சமூகத்தின் தேவையுணர்ந்து, மரக்கன்றுகளை நட்டு ஈரோட்டை பசுமையாக்குவதோடு மட்டுமல்லாது, மேலும் பல சமூகப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு எல்லா வகையிலும் சமூகத்தை பசுமையாக்கிட முயன்று கொண்டிருக்கிறது இவ்வமைப்பு!

பசுமை உலகத்தின் சேவைகள்:

1. மரக்கன்று உற்பத்தி மற்றும் நடுதல்

தமிழக அரசின் "பசுமை தமிழகம் 2010" திட்டத்துடன் இணைந்து பசுமை உலகமானது, மரக்கன்றுகள் வளர்க்கும் பண்ணை அமைத்து, மரக்கன்று உற்பத்தி மற்றும் மரம் நடுதல் சேவையை செய்து வருகிறது. 2010-ல் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும் மரக்கன்றுகள் தேவைப்படுவோர் பசுமை உலகத்தை தொடர்பு கொள்ளலாம். மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

2. குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்வி

பசுமை உலகம் மூலம் ஆண்டுக்கு குறந்தபட்சம் 200 முதல் 250 ஏழைக் குழந்தைகள் கல்வி உதவி பெற்று வருகிறார்கள். இக்குழந்தைகளுக்குத் தேவையான நோட்டுப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேலும் ஈரோட்டைச் சுற்றிலும் உள்ள குடிசைவாழ் பகுதிகளில், அரசுப் பள்ளிக்கூட மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லுவதை ஊக்குவிக்கும் பொருட்டு அந்தந்தப் பகுதிகளிலேயே தன்னார்வத் தொண்டர்கள் மூலம் மாலை நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவர்களுக்கு மாதம்தோறும் சிறு ஊக்கத் தொகையாக ரூ.300/- இவ்வமைப்பின் மூலம் வழங்கப்படுகிறது. இங்கு ஏட்டுக் கல்வி தவிர வாழ்க்கை கல்வியாக சமூகத்துடன் இணக்கமான இதர விஷயங்களும் கற்றுத்தரப்படுகின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 25 முதல் 30 மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.

3. பெண்கள் முன்னேற்றம்

சமுதாயத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக ஆதரவற்ற பெண்கள், உடல் ஊனமுற்ற பெண்கள், விதவைப் பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக, சமூகத்தில் அவர்களுக்கு சிறப்பான மரியாதைப் பெற்றுத் தரும் வகையில் தன்னம்பிக்கையையும் சுய தொழில் வேலைவாய்ப்பு பயிற்சியையும் பசுமை உலகம் வழங்கி வருகிறது.

தையல் பயிற்சி, கம்ப்யூட்ட்ர் பயிற்சி, அழகுக் கலை பயிற்சி ஆகிய பயிற்சிகளுக்கு ஒவ்வொரு சுற்றுக்கும் 20 பெண்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு மதிய உணவுடன் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான பயிற்சி, ஒவ்வொன்றும் 70 நாட்களில் நிறைவடையும். இப்பயிற்சி முற்றிலும் இலவசமாகவும், பகுதி உதவித் தொகையுடனும் இரு பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

தையல் பயிற்சி:

சுயதொழில் வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்புடன் கூடிய தையல் பயிற்சியானது, பிரத்யோக பயிற்சிக் கூடத்தில் பெண்களுக்காக வழங்கப்படுகிறது. பயிற்சி பற்றிய விபரங்கள் பயிற்சி ஆரம்பிக்கும் ஒரு வாரம் முன்னதாக நாளிதழ் மற்றும் பசுமை உலக இணையதளத்தில் வெளியிடப்படும் அல்லது பசுமை உலகம் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

2002-லிருந்து 2009 நவம்பர் வரை 300 பெண்கள் இலவச தையல் இயந்திரத்துடன் பயிற்சியும் பெற்றுள்ளார்கள்.

கம்ப்யூட்ட்ர் பயிற்சி:

பசுமை உலகத்தின் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் நேரு யுவ கேந்திரா, நகராட்சி மற்றும் நபார்டு நலத்திட்ட உதவியுடன் பெண்களுக்காக அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சியும், D.T.P, Tally போன்ற படிப்புகளும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் அளிக்கப்படுகிறது. இதுவரை தற்காலிகமாக இதில் 125 பேர் பயனடைந்துள்ளனர்.

அழகுக் கலை பயிற்சி:

நபார்டு உதவியுடன் பெண்கள் தாங்களே சுயமாக அழகுக் கலை நிலையம் வைத்துக் கொள்ளும் வகையில் சிறப்பான அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. அழகுநிலையம் சொந்தமாக வைக்க இவர்களே வங்கிக் கடனுக்கும் பரிந்துரை செய்கிறார்கள்.

தன்னம்பிக்கை மற்றும் யோகா பயிற்சி:

பெண்களுக்கு சமூகத்தில் உண்டாகும் தடைகளை எதிர்த்துப் போராடவும், வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் யோகா மற்றும் தன்னம்பிக்கை  வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
ஒரு தாய் கர்ப்ப காலத்தில் எப்படி இருக்கிறார்ளோ, எதை உணருகிறார்ளோ, எந்த மனநிலையை அதிகம் கொண்டிருக்கிறார்ளோ அதைப் பொறுத்து குழந்தையும் அதன் வளரும் விதமும் இருக்கும். குழந்தையின் இயல்புக்கும் தாயின் மனம் மற்றும் உடல்நிலைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்பது அறிவியல் உண்மை மற்றும் நம் அனுபவ உண்மையும் கூட. இத்தகைய கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவத்திற்கு வழிகோலும் வகையிலும், நாளைய தலைமுறைக்கு நல்ல குழைந்தைப் பேறு உண்டாகிடவும் யோகா பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சி தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

4.இளைஞர்களுக்கு
  • நேரு யுவ கேந்திரா திட்டத்தின் உதவியுடன் இளைஞர் மன்றங்களுக்குத் தேவையான விளையாட்டுக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
  • இளைஞர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் பேணும் விதமாக கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டும் ஊக்குவிக்கப்பட்டும் வரப்படுகிறது.
  • நாட்டுநலப் பணித்திட்ட முகாம்கள், தன்னம்பிக்கை முகாம்கள், உலகப்பொருளாதார விளக்க முகாம்கள், தொழில் முனைவோர் ஆலோசனை முகாம்கள் ஆகியவைகளில் பசுமை உலகம் உற்சாகமாக பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
  • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் வேலைவாய்ப்புக்காக அணுகுவோரையும், வேலை வாய்ப்பு கொடுப்போரையும் பசுமை உலகம் ஒருங்கிணைக்கும் சேவையும் செய்து வருகிறது.

6. மற்ற செயல்பாடுகள் மற்றும் சமீபகால திட்டங்கள்:
  • பிறந்தநாள், திருமணநாள் போன்ற விசேஷங்களை ஆதரவற்றோர், கருணை இல்லங்களோடு ஆத்ம திருப்தியுடன் கொண்டாட ஒருங்கினைப்பு செய்தல்.
  • கண்தானம், இரத்ததானம் செய்ய விருப்பமுடையவர்கள் பசுமை உலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இவை பசுமை உலகத்தால் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கப் படுகின்றன.
  • உலக எயிட்ஸ் தினம், ரேபிஸ் (வெறிநாய்க் கடி) தினம் போன்ற எல்லா உலக விழிப்புணர்வு தினங்கள் பசுமை உலகத்தால் அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • மோளக்கவுண்டம் பாளையம் அரசுப்பள்ளியில் மிகச் சமீபத்தில் கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சின்னச் சின்ன மலைக்குன்றுகள், கரடு ஆகிய இடங்களில் வளமான நீர் ஆதாரத்தை உருவாக்கி, அவற்றின் மேலும், அதனைச் சுற்றிலும் மரக்கன்றுகளை உள்ளூர் நன்கொடையாளர்களின் பெயரில் நட்டு வளர்ப்பதற்கான பணிகள் நடந்துவருகின்றன. நன்கொடை ஆர்வலர்கள் தொடர்பு கொள்ளலாம்.
  • கிராம இந்தியா திட்டத்திற்காக, ஐந்து கிராமங்களை தத்தெடுக்க இருக்கிறது பசுமை உலகம். இதற்கான ஆய்வுப்பணிகள் நடந்து வருகின்றன.
  • தெருக்களில் கேட்பாரற்று சுற்றித் திரியும் வெறிநாய்களின் பிரச்சினைக்காக பசுமை உலகம் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. எயிட்ஸ் போலவே வெறிநாய்க் கடி நோயும் குணப்படுத்த முடியாத நோய் என்பது இன்னும் நம்மில் பலருக்கு தெரிந்திராத விஷயும். இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த, பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஒரு குறும்படமும் தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

பசுமை உலகம் பற்றிய செயல்பாடுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வசதியாக இன்டர்னெட் ஊடக வசதிகளும் (blog, twitter), செல்போன் இலவச SMS வசதிகளும் பசுமை உலகத்தால் வழங்கப்படுகின்றன. உங்களின் வசதிக்கேற்ப ஒன்றையோ எல்லாவற்றையுமோ பயன்படுத்திக்கொள்ளலாம். கீழே இந்த வசதிகள் அனைத்துக்குமான இணைய இணைப்புகள் (Links) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

7. திட்டங்கள் தயார், உதவி தேவை:

சில நல்ல திட்டங்கள் போதிய நிதி ஆதாரமின்மையால் இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வராமல் தேங்கி நிற்கின்றன. அவற்றில் சில
  • பேருந்து நிலையம் மற்றும் நகரில் ஆங்காங்கு இருக்கும் ஆதரவற்ற பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்தல்
  • எயிட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்விற்குத் தேவையான உதவிகளை செய்தல்
இதுபோன்ற இன்னும் ஆரோக்கியமான நல்ல திட்டங்களும் ஆக்கபூர்வமான எண்ணங்களும் என்றும் பசுமையாக 'பசுமை உலகமிடம்' இருக்கிறது.

எல்லா சமூக சேவை அமைப்பிற்கும் இதயத் துடிப்பாக இருபது சேவை மனப்பான்மை கொண்ட தொழிலதிபர்கள், நல்ல இதயம் படைத்த சமூக ஆர்வலர்கள், மக்கள் ஆகியோர்தான். கொடுக்கும் நிதி முழுமையாக, சரியான இலக்குக்காக, சரியான விதத்தில் சென்று சேர வேண்டும் என நினைக்கும் நன்கொடையாளர்கள் நம்பிக்கையோடு பசுமை உலகத்தை அணுகலாம்!

இன்டர்நெட்டில் பசுமை உலகம்:

பசுமை உலகம் இணையதளம் இப்போது புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப் பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பசுமை உலகம் அதன் செயல்பாடுகளை உடனுக்குடன் பதிவு செய்து வருகிறது. இவற்றில் உங்களை பதிவு செய்து கொண்டு மேலும் பசுமை உலகத்தின் சேவையை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பசுமை உலகம் பற்றிய செயல்பாடுகளை உடனுக்குடன் செல்போனிலேயே தெரிந்து கொள்ளமுடியும். அதற்கு இங்கு சென்று பதிவு செய்யலாம் அல்லது  <9870807070> என்ற எண்ணிற்கு <ON GREENWORLD-NGO> என்று செய்தி அனுப்பவும். உங்கள் நெட்வொர்க்கைப் பொறுத்து  ஒருமுறை மட்டும் National SMS-க்கான செலவாகும்.

டிவிட்டரில் பசுமை உலகம்: http://twitter.com/greenworldindia
ஆர்குட்டில் பசுமை உலகம்: http://www.orkut.co.in/Main#Community?cmm=97382765
SMS -ல் பசுமை உலகம்: http://labs.google.co.in/smschannels/channel/greenworld-NGO
பசுமை உலகம் இணையதளம்: http://greenworldindia.org

நீங்கள் உங்களின் இமெயில் கையொப்பம், வலைப்பூ, இணையதளம், சமூக வலைதள புரபைல்(Profile) ஆகியவற்றில் 'பசுமை உலகம்' இணையதளத்தின் முகவரிக்கு இணைப்பு கொடுத்து உதவலாம். இணைப்பு கொடுக்க இங்கு வாருங்கள்.

உங்களின் ஓய்வு நேரத்தை சமூக சேவைக்கு செலவிட விரும்பினால் பசுமை உலகத்தில் தன்னார்வ சேவகராக இணைந்து கொண்டு, வாய்ப்பு கிடைக்கும் போது உடலுழைப்பையோ, கருத்துக்களையோ அல்லது எந்த வகையில் உங்களது பங்களிப்பை தரமுடியுமோ அவ்வாறு தந்து உதவலாம். இணையதளத்திலேயே உங்களை பதிவு செய்து கொள்ள இங்கே சுட்டுங்கள்.

அதேபோல் உதவி தேவைப்படுவோர்களும் தங்களைப் பற்றிய விபரங்களை இங்கே பதிவு செய்ய முடியும்.

மேலும் தொடர்புக்கு பசுமை உலகம் அமைப்பின் தலைவர் மணமோகன் (98421 39831), செயலாளர் பூங்குன்றன் (98426 74110) இவர்களை அணுகலாம்.

Read more...

உலகின் இளம் தலைமையாசிரியர்!

Monday, October 19, 2009

நன்றி: தினமணி

கோல்கத்தா, அக். 18:
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவருக்கு "உலகின் இளம் தலைமையாசிரியர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறது பி.பி.சி.

பி.பி.சி. செய்தி நிறுவனம் "கற்றுக்கொள்ளும் வேட்கை' என்ற பெயரில் புதிய செய்தித் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளது. உலகெங்கும் மிக மோசமான சூழல்களுக்கு இடையிலேயும் கற்றுக்கொள்ளும் வேட்கையோடு செயல்படுபவர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் நோக்கோடு இத்தொடரை பி.பி.சி. வெளியிடுகிறது.

இத் தொடரின் முதல் செய்தியாக மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பள்ளிக்கூடத்தைப் பற்றி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. உலகெங்கும் இன்னமும் கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வி ஒரு பெருங்கனவாகத்தான் இருக்கிறது.

பள்ளிக்கூடங்கள், மதிய உணவு, சீருடைகள், கல்வி உதவித்தொகை என்று பல்வேறு சலுகைகளை அரசுகள் அளித்தாலும்கூட மோசமான வறுமை கோடிக்கணக்கான குழந்தைகளை இன்னமும் இளம் தொழிலாளர்களாகவே வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஒரு சூழலிலிருந்து வெளிவந்திருப்பவர்தான் பாபர் அலி (16).

குடும்பத்தின் முதல் மாணவரான பாபர் அலி தன்னுடைய வீட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள ராஜ் கோவிந்தா பள்ளியில் படித்துவருகிறார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதால், பாபர் அலிக்குப் பெரிய அளவில் செலவுகள் ஏதுமில்லை. ஆனால், பிறரைப்போல குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ளாததோடு, குடும்பத்தினருக்கு மேலும் ஒரு சுமையைத் தரும் வகையில், தான் படிக்க வந்திருப்பதே ஒரு பெரிய காரியம்தான் என்கிறார் பாபர் அலி.

அவர் சொல்வது உண்மைதான். பாபர் அலி பகுதியைச் சேர்ந்த - அவர் வயதை ஒத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கிடைக்கும் வேலையைச் செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கும் துர்பாக்கியமான நிலையிலேயே இருக்கின்றனர். ஆகையால், தனக்கு தன் குடும்பம் அளித்த மிகப் பெரிய கொடையாக பள்ளிக்கூட வாய்ப்பைக் கருதிய பாபர் அலி கல்வியில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்கிறார்.

ஆனால், பாபர் அலிக்கு பி.பி.சி. புகழாரம் சூட்ட காரணம் ராஜ் கோவிந்தா பள்ளியின் சிறந்த மாணவராக அவர் திகழ்வதற்காக அல்ல. பாபர் அலி விளையாட்டாகத் தொடங்கிய இன்னொரு காரியத்துக்காக. அதாவது, அவர் விளையாட்டாகத் தொடங்கிய பள்ளிக்கூடத்துக்காக. அப்போது பாபர் அலிக்கு வயது 9. நம் வீட்டுப் பிள்ளைகள் விடுமுறை நாள்களில் "டீச்சர் விளையாட்டு' விளையாடுவதுபோல தன் வீட்டில் ஒரு நாள் "டீச்சர் விளையா'ட்டைத் தொடங்கினார் பாபர் அலி.

டீச்சர் - பாபர் அலி. மாணவர்கள் யார் என்றால், அங்குள்ள பிள்ளைகள். அதாவது, முன்னெப்போதும் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத ஏழைப் பிள்ளைகள். விளையாட்டு எல்லோருக்கும் பிடித்துப்போனது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளையாடத் தொடங்கினார்கள். விளையாட்டு ஒரு கட்டத்தைத் தாண்டியபோதுதான் தெரிந்தது பாபர் அலிக்கு, தன் சக நண்பர்களின் ஆர்வம் விளையாட்டின் மீதானது மட்டுமல்ல, கல்வியின் மீதானதும் என்று.

பாபர் அலி தன்னுடைய விளையாட்டுப் பள்ளிக்கூடத்தை உண்மையான பள்ளிக்கூடமாக மாற்றினார். ஒரு புதிய வரலாறு அங்கு உருவாகத் தொடங்கியது. சொன்னால், பிரமித்துப்போவீர்கள். இப்போது பாபர் அலியின் பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் தெரியுமா? 800 பேர்!

பாபர் அலி நடத்தும் இந்தப் பள்ளிக்கூடம் முற்றிலும் வித்தியாசமானது. பாபர் அலியின் வீட்டு முற்றம், வீட்டைச் சுற்றியுள்ள கொட்டகைகள், மரத்தடிகளே இந்தப் பள்ளிக்கூடம். களிமண்ணில், கட்டாந்தரையில் என்று கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பாடம் கற்கிறார்கள் மாணவர்கள். ஆசிரியர்கள்? பாபர் அலியும் அவருடன் படிக்கும் சில நண்பர்களும்தான்.

ஒவ்வொரு நாளும் தான் பள்ளிக்கூடம் சென்று வந்த பின்னர், இந்தப் பள்ளிக்கூடத்துக்கு மணியடிக்கிறார் பாபர் அலி. மணியோசை கேட்டதும் ஓடி வருகின்றனர் பிள்ளைகள். பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையிலுள்ள மூர்ஷிதாபாத் பகுதியில் மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது பாபர் அலியின் இந்தப் பள்ளிக்கூடம்.

மாற்றங்களுக்கு ஓர் உதாரணம் சம்கி ஹஜ்ரா (14). இந்தச் சிறுமி தன் தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். சம்கியின் தந்தை ஊனமுற்றவர். எந்த வேலைக்கும் செல்ல இயலாத நிலையில் இருக்கிறார். பாட்டியும் அப்படியே. சம்கி அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து ஈட்டும் சொற்பத் தொகையிலேயே இந்தக் குடும்பம் வாழ்கிறது.

பள்ளிக்கூடத்தை ஒருபோதும் அறிந்திராத சம்கி ஒரு நாள் விளையாட்டாக பாபர் அலியின் பள்ளிக்கூடத்துக்குச் சென்றார். இன்றோ முறையான பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கே சவால் விடும் வகையில் இவர் படித்து வருகிறார். பாபர் அலி தனக்கு கல்வி கொடுத்த கடவுள் என்று குறிப்பிடுகிறார் சம்கி.

சரி. பாபர் அலி அப்படி என்னதான் பாடம் நடத்துகிறார்? ""நான் என் ஆசிரியர்களிடம் கேட்பதை இவர்களுக்கு அப்படியே சொல்கிறேன்; அவ்வளவுதான்'' என்கிறார் பாபர் அலி. தான் விரும்பும் சமூக மாற்றத்தை தன்னிலிருந்து தொடங்கிய பாபர் அலி மகத்தான மனிதன் என்று கொண்டாடுகிறது பி.பி.சி.

உலகின் இளம் தலைமையாசிரியர் இவரே என்றும் பிரகடனப்படுத்துகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மூர்ஷிதாபாத்தின் இந்த இளம் தலைமையாசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பொருத்தமானதுதானே!

Read more...

புதிய தலைமுறை - நட்புடன் ஒரு பகிர்வு

Wednesday, September 30, 2009

நேற்று காலை நண்பர் ஒருவரை வழியனுப்பி வைக்க ஈரோடு ரயில் நிலையம் சென்றிருந்தேன். புத்தகக் கடையில் தொங்கவிடப்பட்டிருந்த நீளமான விளம்பர காகிதத்தில் "இளைஞர்களுக்கு வேண்டும் இட ஒதுக்கீடு, ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகை" என்ற வாசகங்களின் கீழ் "புதிய தலைமுறை" என்னைக் கவரவே, புரட்டிப்பார்க்கலாம் என்று அருகில் சென்றேன். செல்லும் போதே அநேகமாக விலை ரூ.10 ஆவது இருக்கும் நினைத்துக் கொண்டுதான் சென்றேன். ஆனால் புத்தகத்தின் முகப்பில் விலை ரூ.5 எனப் பார்த்ததும் சற்றும் யோசிக்காமல் வாங்கிவிட்டேன்.

'பெருகி வரும் பத்திரிக்கை எண்ணிக்கையின் மத்தியில் "புதிய தலைமுறை"யின் வருகைக்கு காரணம் என்ன? எதைச் சாதிக்க இந்த முயற்சி என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழலாம். பத்திரிக்கையின் பெயர் குறிப்பது போல, தமிழகத்தின் புதிய தலைமுறையின் முன்னேற்றத்திற்கு ஒரு உந்துகோலாகவும், அவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாகவும் விளங்கும் நோக்கத்துடன் இப்பத்திரிக்கை மலர்ந்திருக்கிறது. உலகிலேயே இளைஞர்கள் அதிகம் நிறைந்த நாடு இந்தியா. நம் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் புதிய தலைமுறை இளைஞர்களுக்குச் சமூகம் சார்ந்த செய்திகளை எந்தச் சார்புமின்றி வழங்கவும், வளர்ச்சிக்கு வழிகாட்டவும், மாற்றத்திற்கான மனநிலையை உருவாக்கவும் இப்பத்திரிக்கை விழையும்.' என்ற புத்தக முகவுரை, மிகைப்படுத்தப் பட்டதல்ல நம்மால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதே என்ற உணர்வு சில பக்கங்களை புரட்டியதுமே எனக்கு ஏற்பட்டது.
பொதுவாகவே, ஆக்கபூர்வமான சிந்தனைக் கட்டுரைகள், ஊக்கம் தரும் கதைகள்;செய்திகள், பயனுள்ள தகவல்கள் போன்றவற்றை தேடிப் பிடித்து சேகரித்து வைத்துக் கொள்வது என் வழக்கம். அவற்றையெல்லாம் இங்கு பதிவிட போதுமான நேரம் வாய்க்கவில்லையே என்பது என் ஆதங்கம். ஆனால் அத்தகையதொரு அழகிய தொகுப்பாக இருக்கிறது "புதிய தலைமுறை". முற்றிலும் இளைஞர்களுக்கு தேவையான, அவசியமான செய்திகளை மட்டுமே ஆக்கபூர்வமான மாற்றத்துக்கான விதைகளாக வடிகட்டிக் கொடுத்திருக்கிறது என்றே கருதுகிறேன்.

உதாரணத்துக்கு,
  • பஸ் கூடப் போகாத கிராமப் பள்ளியில் கணினி, இணையம், ஒவ்வொரு மாணவனுக்கும் ஈமெயில் ஐ.டி. என "மாங்குடி மாறிய கதை"யும்
  • "அரசியலில் வளர முடியுமா?" என்ற கட்டுரையும் "இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு!" என்ற கட்டுரையும் இந்தியாவின் ஜனத்தொகையில் 51 சதவீதம் இருக்கும் 25 வயசுக்குட்பட்ட இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை; சிந்திக்க வேண்டியவை.
  • "நான் விரும்பும் மாற்றங்கள்" பெட்டி செய்தி புத்தகம் முழுவதும் இளைஞர்களின் குரல்களை ஒலிக்கிறது.
நான் ஏதோ இந்த நற்செய்தியை பகிர்ந்து கொண்டாக வேண்டும் என்ற உந்துதலில் இட்ட பதிவுதான் இது. ஒரு அஞ்சு ரூபா கொடுத்து நீங்களே புத்தகம் வாங்கிப் படிச்சுப் பாருங்க, இன்னும் நிறைய இருக்கு!

அப்புறம், புதிய தலைமுறை
  • இளைஞர்கள் பத்திரிக்கையாளர் திட்டம் 2009,
  • மாணவர்களுக்கு சலுகை சந்தா,
  • படித்துக் கொண்டே பகுதி நேர வேலைவாய்ப்பு
ஆகியவற்றை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்குகிறது.

விகடன் பத்திரிக்கையாளர் திட்டம் போன்ற வாய்ப்புகளை நழுவ விட்டவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. 18 வயது முதல் 30 வயது வரையிலான மாணவர்கள், இளைஞர்கள் தகுதியானவர்கள்.

மேலும் விபரங்களுக்கு : http://puthiyathalaimurai.com

Read more...

அரசு பள்ளிகளை தத்தெடுக்க பலத்த ஆதரவு : குவிகிறது விண்ணப்பம்

Wednesday, May 6, 2009

அரசுப் பள்ளிகளின் நிலை உண்மையில் மிகவும் வருந்தத்தக்க நிலையில்தான் இருக்கிறது. இதை நான் 12வது முடித்து விட்டு பிறகென்ன செய்வது என்று விழித்து விட்டு, பிறகு மீண்டும் படித்ததையே ஒருவருடம் டியூசன் உதவியோடு SELF IMPROVEMENT(இப்பொது இல்லை)போட்டு, ஒரு நல்ல அரசுப் பொறியியற்கல்லூரியில் சேர்ந்தபோது தான்... நாம் எவ்வளவு ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணரமுடிந்தது. நான் எங்கள் கிராமத்தில் உள்ள அரசு நடுனிலைப் பள்ளியிலும் மற்றும் அருகாமையில் உள்ள அரசு மேல்னிலைப்பள்ளியியிலும் படித்தேன்.

இப்பவும் என்னைப் போன்றவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க ஏதாவது வழிவகை உருவாகாதா என்ற ஏக்கமும் அதைப் பற்றிய தேடலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அப்படி தேடியதில் கிடைத்த ஒரு ஆறுதல் செய்தியை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

சுட்டி: http://www.dinamalar.in/pothunewsdetail.asp?News_id=11323&cls=&ncat=TN

செய்தி:

கோவை : தமிழக அரசு திட்டத்தின்படி, பள்ளிகளைத் தத்தெடுக்க தொழிலதிபர்கள் பலர் முன் வந்துள்ளனர். தமிழக கிராமங்களில் உள்ள பல அரசுப் பள்ளிகள் குடிநீர், கழிப்பறை, வகுப்பறை வசதிகள் இல்லாமல் உள்ளன. அரசுப் பள்ளிகளை ஒரு குறிப்பிட்ட காலம் வரை, தனியாருக்கு தத்து கொடுத்து, மேம்படுத்தும் திட்டத்தை, கோவையில் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்த கார்மேகம் அறிமுகம் செய்தார். தற்போது, மேல்நிலைக் கல்விக்கான இணை இயக்குனராக சென்றபின், மாநிலம் முழுவதும் அத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, தொழிலதிபர்கள் அதிகமாக உள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இத்திட்டத்துக்கு வரவேற்பு பெருகி வருகிறது. கோவை கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் காந்திமாநகர் அரசு உயர்நிலைப் பள்ளிகளை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பிலும், கீரணத்தம், சின்னவேடம்பட்டி, குரும்பபாளையம், குன்னத்தூர், ஒரக்கால்பாளையம், சரவணம்பட்டி பகுதிகளில் உள்ள ஆறு அரசுப் பள்ளிகள் "சி.ஆர்.ஐ., பம்ப்ஸ்' நிறுவனம் சார்பிலும் தத்தெடுக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில பள்ளிகளைத் தத்தெடுக்க விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. பள்ளிகளைத் தத்தெடுக்க விரும்புபவர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம், ஐந்து ஆண்டுகளுக்கு செயல்திறன் உள்ளதாக இருக்கும். ஆய்வுக்குப் பின் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடியும்.

இத்திட்டத்தின் மாநில அளவிலான துவக்க விழா, மார்ச் 3ம் தேதி, கோவை ஜி.டி.நாயுடு அரங்கில் நடைபெற உள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் குற்றாலிங்கம், இயக்குனர் பெருமாள்சாமி, எஸ்.எஸ்.ஏ., கவுரவ ஆலோசகர் விஜயக்குமார் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

நன்றி: தினமலர் (பிப்ரவரி 28,2009)
சுட்டி: http://www.dinamalar.in/pothunewsdetail.asp?News_id=11323&cls=&ncat=TN

Read more...

The Banyan Movie | Background theme by ARR

Thursday, April 23, 2009

Read more...

சாரல் | தன்னார்வத் தொண்டு அமைப்பு

Wednesday, April 22, 2009

நன்றி: ராம்மோகன்

ஜாலி, கேலி, அரட்டை, டேட்டிங் இத்யாதிகளுக்கான இணைய ஸ்பாட் ஆர்குட். ஆனால், இந்த சோஷியல் நெட் வொர்க்கிங் வெப்சைட்டை சமூக நலனுக்காகப் பயன்படுத்தி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் அலேக்யா.

ஆர்குட்டில் ‘ஒபாமா’வில் ஆரம்பித்து ‘ஓசி டீ’ வரைக்கும் பலப் பல விஷயங்களுக்கு ‘கம்யூனிட்டி’கள் எனப்படும் ரசிகர் வட்டங்கள் இருக்கும். அதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுக்குள் விவாதித்துக்கொண்டு இருப்பார்கள். அதுபோன்ற அரட்டை கம்யூனிட்டிகளுக்கு மத்தியில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக அலேக்யா உருவாக்கிய சாரல் கம்யூனிட்டியில் இப்போ 5,865 (22.04.2009 அன்று) உறுப்பினர்கள்!

”எங்க குடும்பத்தில் பிறந்த நாள், திருமண நாள் மாதிரி சந்தோஷங்களை ஆதரவற்றோர் இல்லங்களில்தான் கொண்டாடுவோம். ஆர்குட்டில் யார் வேண்டுமானாலும் கம்யூனிட்டி ஆரம்பிக்கலாம்னு வாய்ப்பு கிடைச்சப்போ, என் சின்னக் கனவான சாரலை ஆரம்பிச்சேன். இது போன்ற கம்யூனிட்டியில் சேர ஆர்வம் காட்டுவாங்களான்னு ஒரு சந்தேகம் இருந்தது. ஆனா, ஆரம்பிச்சதுமே ஆயிரக்கணக்கில் ஹிட் அடிச்சிருச்சு சாரல். இப்போ அதில் இருந்து 60 உறுப்பினர்கள் சேர்ந்து, ‘சாரல்’ என்கிற ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பைத் தொடங்கியிருக்கோம். ஒன்றரை வருஷங்களா ஈரமான இதயங்களின் இணைய இல்லமா இருக்கு சாரல்!” என்று பூரிக்கும் அலேக்யாவின் வயது இருபத்து நாலு. இன்ஜினீயரிங் முடித்துவிட்டு எம்.பி.ஏ., படிப்பதற்காககக் காத்திருக்கிறார்.

மேலும் படிக்க:

ராம்மோகன் பதிவு

சாரல் ஆர்குட் குழுமம்

சாரல் வலைதளம்


Read more...

அரவாணிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டம்: மனசு

Monday, March 30, 2009

அரவாணிகளின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விஆகியவற்றை வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் அரவாணிகளைப் பற்றியதகவல்களை அறிந்து, அவர்களுக்கு உதவ "மனசு' என்ற பெயரில் புதிய தொலைபேசி (044-25990505) சேவையைதமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்த தொலைபேசி மூலம் அரவாணிகள் தொடர்பான தகவல்களை அனைவரும் கேட்டுப் பெறலாம். அவர்களுக்குசேவை செய்ய விரும்புவோரும் இதில் தொடர்பு கொள்ளலாம். அரவாணிகள் குறித்த பிரச்னைகளைக் கையாள்வதுகுறித்து பொதுமக்கள் ஆலோசனைகளைப் பெறலாம். அவர்கள் தொடர்பான தவறான தகவல்களைக் களையஇச்சேவை உதவும். அரவாணிகளுக்கு வாடகைக்கு வீடு தர விரும்புவோர், அவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள முன்வருவோர் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை போக்கிக் கொள்ளலாம். வாடகைவீடு, வேலை தொடர்பான விவரங்களையும் பதிவு செய்து வைக்கலாம். அரவாணிகளுடன் நன்கு பழகி, அவர்களைத்தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள் இந்த சேவை மையங்களில் ஆலோசகர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆலோசனை கூறும் வகையில், இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இலவச மருத்துவசேவை, நேரடி ஆலோசனை, அரவாணிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான வக்கீல்கள் உதவி, வேலைவாய்ப்புக்கேற்ற மென்திறன் பயிற்சி ஆகியவையும் இதில் அடங்கும்.

நன்றி: தினமலர்

Read more...

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP