புதிய தலைமுறை - நட்புடன் ஒரு பகிர்வு
Wednesday, September 30, 2009
நேற்று காலை நண்பர் ஒருவரை வழியனுப்பி வைக்க ஈரோடு ரயில் நிலையம் சென்றிருந்தேன். புத்தகக் கடையில் தொங்கவிடப்பட்டிருந்த நீளமான விளம்பர காகிதத்தில் "இளைஞர்களுக்கு வேண்டும் இட ஒதுக்கீடு, ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகை" என்ற வாசகங்களின் கீழ் "புதிய தலைமுறை" என்னைக் கவரவே, புரட்டிப்பார்க்கலாம் என்று அருகில் சென்றேன். செல்லும் போதே அநேகமாக விலை ரூ.10 ஆவது இருக்கும் நினைத்துக் கொண்டுதான் சென்றேன். ஆனால் புத்தகத்தின் முகப்பில் விலை ரூ.5 எனப் பார்த்ததும் சற்றும் யோசிக்காமல் வாங்கிவிட்டேன்.
'பெருகி வரும் பத்திரிக்கை எண்ணிக்கையின் மத்தியில் "புதிய தலைமுறை"யின் வருகைக்கு காரணம் என்ன? எதைச் சாதிக்க இந்த முயற்சி என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழலாம். பத்திரிக்கையின் பெயர் குறிப்பது போல, தமிழகத்தின் புதிய தலைமுறையின் முன்னேற்றத்திற்கு ஒரு உந்துகோலாகவும், அவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாகவும் விளங்கும் நோக்கத்துடன் இப்பத்திரிக்கை மலர்ந்திருக்கிறது. உலகிலேயே இளைஞர்கள் அதிகம் நிறைந்த நாடு இந்தியா. நம் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் புதிய தலைமுறை இளைஞர்களுக்குச் சமூகம் சார்ந்த செய்திகளை எந்தச் சார்புமின்றி வழங்கவும், வளர்ச்சிக்கு வழிகாட்டவும், மாற்றத்திற்கான மனநிலையை உருவாக்கவும் இப்பத்திரிக்கை விழையும்.' என்ற புத்தக முகவுரை, மிகைப்படுத்தப் பட்டதல்ல நம்மால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதே என்ற உணர்வு சில பக்கங்களை புரட்டியதுமே எனக்கு ஏற்பட்டது.
பொதுவாகவே, ஆக்கபூர்வமான சிந்தனைக் கட்டுரைகள், ஊக்கம் தரும் கதைகள்;செய்திகள், பயனுள்ள தகவல்கள் போன்றவற்றை தேடிப் பிடித்து சேகரித்து வைத்துக் கொள்வது என் வழக்கம். அவற்றையெல்லாம் இங்கு பதிவிட போதுமான நேரம் வாய்க்கவில்லையே என்பது என் ஆதங்கம். ஆனால் அத்தகையதொரு அழகிய தொகுப்பாக இருக்கிறது "புதிய தலைமுறை". முற்றிலும் இளைஞர்களுக்கு தேவையான, அவசியமான செய்திகளை மட்டுமே ஆக்கபூர்வமான மாற்றத்துக்கான விதைகளாக வடிகட்டிக் கொடுத்திருக்கிறது என்றே கருதுகிறேன்.
உதாரணத்துக்கு,
- பஸ் கூடப் போகாத கிராமப் பள்ளியில் கணினி, இணையம், ஒவ்வொரு மாணவனுக்கும் ஈமெயில் ஐ.டி. என "மாங்குடி மாறிய கதை"யும்
- "அரசியலில் வளர முடியுமா?" என்ற கட்டுரையும் "இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு!" என்ற கட்டுரையும் இந்தியாவின் ஜனத்தொகையில் 51 சதவீதம் இருக்கும் 25 வயசுக்குட்பட்ட இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை; சிந்திக்க வேண்டியவை.
- "நான் விரும்பும் மாற்றங்கள்" பெட்டி செய்தி புத்தகம் முழுவதும் இளைஞர்களின் குரல்களை ஒலிக்கிறது.
நான் ஏதோ இந்த நற்செய்தியை பகிர்ந்து கொண்டாக வேண்டும் என்ற உந்துதலில் இட்ட பதிவுதான் இது. ஒரு அஞ்சு ரூபா கொடுத்து நீங்களே புத்தகம் வாங்கிப் படிச்சுப் பாருங்க, இன்னும் நிறைய இருக்கு!
அப்புறம், புதிய தலைமுறை
- இளைஞர்கள் பத்திரிக்கையாளர் திட்டம் 2009,
- மாணவர்களுக்கு சலுகை சந்தா,
- படித்துக் கொண்டே பகுதி நேர வேலைவாய்ப்பு
ஆகியவற்றை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்குகிறது.
விகடன் பத்திரிக்கையாளர் திட்டம் போன்ற வாய்ப்புகளை நழுவ விட்டவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. 18 வயது முதல் 30 வயது வரையிலான மாணவர்கள், இளைஞர்கள் தகுதியானவர்கள்.
மேலும் விபரங்களுக்கு : http://puthiyathalaimurai.com