ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் சங்கமம் 2010 - அனுபவம்

Monday, December 27, 2010

நான் நிகழ்ச்சிக்கு பெருமாள் முருகன் சார் பேசிக் கொண்டிருக்கும் போது தான் அரங்கினுள் நுழைந்தேன். நுழைவாயிலில் ரெண்டு குட்டிப் பொண்ணுங்க பேனாவும் குறிப்பு நோட்டும் கூடவே ஊர்ப் பழமைங்கற புத்தகமும் கொடுத்து வரவேற்றனர்.

சிறுகதைகளைப் பற்றி பெருமாள் முருகன் சார் பேசிக் கொண்டிருந்தார். சிறுகதை எழுத நினைப்பவர்களுக்கு என அவர் சொன்னாலும், அவர் பேச்சை நான் உள்வாங்கிக் கொண்டது நம் அனுபவத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றுதான். சிறுகதை என்பது கருத்து சொல்வதாக இல்லாமல் நம் அனுபவத்தினூடே படிப்பவரை பயணிக்க வைக்க வேண்டும், படிப்பவர் தம் பிடித்தமான கருத்துக்களை தேடிப் பொறுக்க முயற்சித்தாலும் கூட. அதுவே காலம் காலத்திற்கும் நிலைக்கும் படைப்பாக அமையும். அதுவே இலக்கியமும் கூட என்பதை மிக அழகாக பிசிறில்லாமல் அவர் பேசிய விதம் அவரின் ஆழ்ந்த அனுபவப் பகிர்வாக இருந்தது. எடுத்துக்காட்டுக்களின் ஊடே அவர் சுட்டிக்காட்டிய நுணுக்கங்களும், அவை பிடிபட வேண்டுமானால் வாசிப்பும், வாசிப்பும் பிடிபட அவர் தந்த ஆவலான கதைகளும் ஒரு தேர்ந்த கலைஞனுக்கே உரித்தானவை. நான் மிகவும் ரசித்தேன்.

அவர் பேச்சினூடே நான் எடுத்த சில குறிப்புகள்:
1. தமிழகம்.இன் - சிறுகதைகள் தொகுப்புத் தளம்
2. கந்தவர்வன் எழுதிய அதிசயம் சிறுகதை - வித்தியாசப்பட்ட கதைக்கள உதாரணம்
3. ஜானகிராமன் எழுதிய காண்டாமணி சிறுகதை
4. உடனடியாக சிறுகதைகள் வாசிக்க 100 சிறுகதைகள் - வலைப்பூ முகவரியை குறிப்பெடுக்க மறந்துவிட்டேன்.

அடுத்து பாமரன் அவர்கள் உலக மொக்கையர்களே ஒன்றுபடுங்கள் என்ற தலைப்பில் சுவாரஸ்யமான பகிர்வை தந்தார். ரசித்தேன்.

அடுத்து குறும்படம் எடுக்கலாம் வாங்கன்னு தமிழ்ஸ்டூடியோ.காம் அருண் பேசினார். ஒரு குறும்படம் எடுக்கும் ஐடியா உங்களுக்கு இருந்தா கண்டிப்பா இவரைத் தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவசமாக பயிற்சியும் ஆலோசனையும் தரோம் வாங்க என்ற அன்பான அழைப்புடன் மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டார். அவர் குறும்படம்னா என்னனு சுட்டிக்காட்ட சொன்ன தொங்கட்டான் சிறுமி கதை நல்லா இருந்த்தது. முடிவாக அது ஒரு கவிதைன்னு சொன்னப்ப குறும்படம் ஓட்ட என்ன வேலை செய்யனும்னு புரிஞ்ச மாதிரி இருந்தது.

அடுத்து உலகத் திரைப்படங்கள் தலைப்பில் சிதம்பரம்.T பேசினார். வணிக மற்றும் முழுமையான பொழுதுபோக்குப் படங்கள் தான் தமிழ் சினிமாவில் மலிந்து கிடக்கின்றன, ஒன்றிரண்டு தவிர்த்து என்றார். நம்மூருக்கு ஹாலிவுட்டில் எடுக்கப்படும் உலகத்தரத்திலான படங்கள் கூட வருவதில்லை. அவற்றிலும் பிரமாண்ட செலவு, பிரமிப்பான காட்சிகள், விறு விறுப்பு, கவர்ச்சி கொண்ட படங்கள் தான் இங்கு வருகின்றன என்று அவர் சொன்ன செய்தி ஒரு இனம் புரியாத ஏக்கத்தை தந்தது. எல்லாரும் உலகத்தரம் உலகத்தரம்ன்னு சொல்றதுனால, இவங்க எதைத்தான் உலகப்படம்ன்னு சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்காகவே அந்தப் படங்களைப் பார்க்க ஒரு ஆவல் ஏற்படுகிறது.

அடுத்து கதிர் சாரின் உரிமையான கண்டிப்புடன் அனைவரும் அரங்கினுள் அமைதி காக்க, ஒவ்வொருவரும் தங்களை நேர்த்தியாக அறிமுகம் செய்து கொண்டோம்.

அடுத்து மதிய விருந்து. சைவம் அசைவம்ன்னு கல்யாணப் பந்தியும் கிடா வெட்டும்  சேர்த்து வச்ச மாதிரி நிறைவான சாப்பாடு.

அடுத்து நிழற்படங்களில் நேர்த்தி என்ற தலைப்பில் ’கருவாயன்’  சுரேஷ்பாபு அழகான புகைப்படங்களோடு மிக எளிமையாக சொல்லிக் கொடுத்தார். மேடையேறி பேசுவது இது தான் முதல் தடவை என்று சொன்னாலும், மேடைக்கு பழகியிருக்கவெல்லாம் அவசியமில்லை, பேசவேண்டிய விசயத்தில் வல்லுனராக இருந்தாலே போதும் என்பது அவரிடம் இருந்து எனக்கு கிடைத்த கூடுதல் டானிக். புகைப்படத்தின் தரம் இரண்டே விசயத்துலதான் இருக்கு. ஒண்ணு கேமிராவுக்குள்ள வருகிற வெளிச்சம், இரண்டாவது  ஸ்பீடு -ன்னு ஆரம்பிக்கும் போதே இவ்வளவுதானாங்கிற மாதிரி உணர்வு ஏற்பட்டது. தொடர்ந்து எந்தக் கேமராவை எப்படிப் புடிக்கணும், படம் எடுக்குறதுக்கு முன்னாடி என்ன முன்னேற்பாடுகளை செய்யனும், படம் எடுக்கும் போது என்னென்ன விசயங்களை கவனிக்கனும், படம் எடுத்த பிறகு எடிட் பண்ணி சரி செய்ய வேண்டியிருந்தா கவனிக்க வேண்டியது என ஒரு நேர்த்தியான செயல் விளக்கம் அதற்குத் தகுந்த உதாரணப் படங்களுடன் தந்தார். கேமராவைப் பொருத்தும், படம் எடுக்குறவங்களப் பொருத்தும் படம் எப்படி அமையும், இப்படி நிறைய டிப்ஸ் கொடுத்தார். இவருடைய அறிமுகத்துல, இவருடைய படங்கள் நிறைய பரிசுகளும் விருதுகளும் வாங்கியிருக்கின்றன என்று சொன்னார்கள். அவற்றின் அடிப்படை ரகசியங்களை அதே நேர்த்தியுடன் பகிர்ந்து கொண்டார்.

அடுத்து இன்றைய இணையமும் வலைப்பூக்களும் என்ற தலைப்பில் ஓசை செல்லா இணையத்தோடு அவரின் ஆரம்ப காலம் முதல் இன்று வரையிலான தொடர்பையும் வளர்ச்சியையும் பகிர்ந்து கொண்டார். இணையத்தின் வலிமையையும் அதில் தமிழ் வலைப்பூவின் ஆரம்ப காலத்தையும், அப்போது தமிழ் பாண்ட்-ல் இருந்த சிரமத்தையும், அவரின் புது முயற்சிகள் எப்படி வெற்றி பெற்றன, வலைபூக்கள் சமூகத்தில் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் என அவர் பகிர்ந்து கொண்ட விசயங்கள், ஒரு வெப் டெவலப்பர் (Web Developer) என்ற அளவில் எனக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தந்தது.

அடுத்து நிழற்படங்களின் வழியே ஆவணப்படுத்துதல் என்ற தலைப்பில் லட்சுமனன் மற்றும் அவர் நண்பர் வினோத் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்பட ஆவணங்கள் (திருமணம் மற்றும் பழங்குடியினர் வாழ்வியல்) காட்டப்பட்டன. அவை எடுக்கப்படும் நோக்கமும் விதமும் லட்சுமணன் அவரால் விளக்கப்பட்டன. படங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக இருந்தன. கூடவே தேநீர் விருந்தும் அளிக்கப்பட்டது.

அடுத்து ஈரோடு கதிர் சார் ஈரோடு வலைப்பதிவு குழும உறுப்பினர்களை மேடைக்கு அழைத்து அறிமுகம் காட்டி, அனைவருக்கும் நன்றி நவின்று சேர்தளம் வசம் ஒப்படைத்தார்.அடுத்து சேர்தளம், திருப்பூர் வலைப்பதிவு குழும உறுப்பினர்களால் கலந்துரையாடல் ஒருங்கிணைக்கப்பட்டது. சுவாரஸ்யமான கேள்விகள் முன் வைக்கப்பட்டு கருத்துக்களும், அனுபவங்களும் பதிவர்களால் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

வலைப்பதிவு என்பது தனிநபருக்கானது, சுதந்திரமானது என்னும் போது அதை சமூகக்குழுமம் எனும் முடிச்சுக்குள் கொண்டுவரும் போது முரண்பாடு ஏற்படுவது இயல்புதானோ என்றெண்ணுகிறேன். தனிமனித சுதந்திரத்தைக் காப்பாற்றப் பாடுபடும் அளவிற்கு பரஸ்பரம் மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்கும் முயற்சியில் அடிக்கடி சறுக்கல் உண்டாகத்தான் செய்கிறது என்பதை கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் நான் உணர்ந்ததாக கொள்கிறேன். சுதந்திரத்திற்கே உரிய பொறுப்பும், சமூகத்துக்கே உரிய கட்டுப்பாடும் ஒரே அர்த்தத்தில் முரண்பட்டுக் கொள்வதாக நான் நினைத்தேன்.

உண்மையில் ஈரோடு வலைப்பதிவர்கள்  சங்கமம் 2010, எனக்கு மிக நிறைவாக அமைந்தது. நன்றி.

Read more...

சங்கமம் - 2010

Sunday, December 5, 2010

வலைபதிவர்கள், வாசகர்கள் சங்கமம் - 2010 க்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மேலும் விபரங்களுக்கு இங்கு பார்க்கவும்.

Read more...

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP