உலகின் இளம் தலைமையாசிரியர்!

Monday, October 19, 2009

நன்றி: தினமணி

கோல்கத்தா, அக். 18:
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவருக்கு "உலகின் இளம் தலைமையாசிரியர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறது பி.பி.சி.

பி.பி.சி. செய்தி நிறுவனம் "கற்றுக்கொள்ளும் வேட்கை' என்ற பெயரில் புதிய செய்தித் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளது. உலகெங்கும் மிக மோசமான சூழல்களுக்கு இடையிலேயும் கற்றுக்கொள்ளும் வேட்கையோடு செயல்படுபவர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் நோக்கோடு இத்தொடரை பி.பி.சி. வெளியிடுகிறது.

இத் தொடரின் முதல் செய்தியாக மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பள்ளிக்கூடத்தைப் பற்றி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. உலகெங்கும் இன்னமும் கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வி ஒரு பெருங்கனவாகத்தான் இருக்கிறது.

பள்ளிக்கூடங்கள், மதிய உணவு, சீருடைகள், கல்வி உதவித்தொகை என்று பல்வேறு சலுகைகளை அரசுகள் அளித்தாலும்கூட மோசமான வறுமை கோடிக்கணக்கான குழந்தைகளை இன்னமும் இளம் தொழிலாளர்களாகவே வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஒரு சூழலிலிருந்து வெளிவந்திருப்பவர்தான் பாபர் அலி (16).

குடும்பத்தின் முதல் மாணவரான பாபர் அலி தன்னுடைய வீட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள ராஜ் கோவிந்தா பள்ளியில் படித்துவருகிறார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதால், பாபர் அலிக்குப் பெரிய அளவில் செலவுகள் ஏதுமில்லை. ஆனால், பிறரைப்போல குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ளாததோடு, குடும்பத்தினருக்கு மேலும் ஒரு சுமையைத் தரும் வகையில், தான் படிக்க வந்திருப்பதே ஒரு பெரிய காரியம்தான் என்கிறார் பாபர் அலி.

அவர் சொல்வது உண்மைதான். பாபர் அலி பகுதியைச் சேர்ந்த - அவர் வயதை ஒத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கிடைக்கும் வேலையைச் செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கும் துர்பாக்கியமான நிலையிலேயே இருக்கின்றனர். ஆகையால், தனக்கு தன் குடும்பம் அளித்த மிகப் பெரிய கொடையாக பள்ளிக்கூட வாய்ப்பைக் கருதிய பாபர் அலி கல்வியில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்கிறார்.

ஆனால், பாபர் அலிக்கு பி.பி.சி. புகழாரம் சூட்ட காரணம் ராஜ் கோவிந்தா பள்ளியின் சிறந்த மாணவராக அவர் திகழ்வதற்காக அல்ல. பாபர் அலி விளையாட்டாகத் தொடங்கிய இன்னொரு காரியத்துக்காக. அதாவது, அவர் விளையாட்டாகத் தொடங்கிய பள்ளிக்கூடத்துக்காக. அப்போது பாபர் அலிக்கு வயது 9. நம் வீட்டுப் பிள்ளைகள் விடுமுறை நாள்களில் "டீச்சர் விளையாட்டு' விளையாடுவதுபோல தன் வீட்டில் ஒரு நாள் "டீச்சர் விளையா'ட்டைத் தொடங்கினார் பாபர் அலி.

டீச்சர் - பாபர் அலி. மாணவர்கள் யார் என்றால், அங்குள்ள பிள்ளைகள். அதாவது, முன்னெப்போதும் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத ஏழைப் பிள்ளைகள். விளையாட்டு எல்லோருக்கும் பிடித்துப்போனது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளையாடத் தொடங்கினார்கள். விளையாட்டு ஒரு கட்டத்தைத் தாண்டியபோதுதான் தெரிந்தது பாபர் அலிக்கு, தன் சக நண்பர்களின் ஆர்வம் விளையாட்டின் மீதானது மட்டுமல்ல, கல்வியின் மீதானதும் என்று.

பாபர் அலி தன்னுடைய விளையாட்டுப் பள்ளிக்கூடத்தை உண்மையான பள்ளிக்கூடமாக மாற்றினார். ஒரு புதிய வரலாறு அங்கு உருவாகத் தொடங்கியது. சொன்னால், பிரமித்துப்போவீர்கள். இப்போது பாபர் அலியின் பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் தெரியுமா? 800 பேர்!

பாபர் அலி நடத்தும் இந்தப் பள்ளிக்கூடம் முற்றிலும் வித்தியாசமானது. பாபர் அலியின் வீட்டு முற்றம், வீட்டைச் சுற்றியுள்ள கொட்டகைகள், மரத்தடிகளே இந்தப் பள்ளிக்கூடம். களிமண்ணில், கட்டாந்தரையில் என்று கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பாடம் கற்கிறார்கள் மாணவர்கள். ஆசிரியர்கள்? பாபர் அலியும் அவருடன் படிக்கும் சில நண்பர்களும்தான்.

ஒவ்வொரு நாளும் தான் பள்ளிக்கூடம் சென்று வந்த பின்னர், இந்தப் பள்ளிக்கூடத்துக்கு மணியடிக்கிறார் பாபர் அலி. மணியோசை கேட்டதும் ஓடி வருகின்றனர் பிள்ளைகள். பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையிலுள்ள மூர்ஷிதாபாத் பகுதியில் மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது பாபர் அலியின் இந்தப் பள்ளிக்கூடம்.

மாற்றங்களுக்கு ஓர் உதாரணம் சம்கி ஹஜ்ரா (14). இந்தச் சிறுமி தன் தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். சம்கியின் தந்தை ஊனமுற்றவர். எந்த வேலைக்கும் செல்ல இயலாத நிலையில் இருக்கிறார். பாட்டியும் அப்படியே. சம்கி அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து ஈட்டும் சொற்பத் தொகையிலேயே இந்தக் குடும்பம் வாழ்கிறது.

பள்ளிக்கூடத்தை ஒருபோதும் அறிந்திராத சம்கி ஒரு நாள் விளையாட்டாக பாபர் அலியின் பள்ளிக்கூடத்துக்குச் சென்றார். இன்றோ முறையான பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கே சவால் விடும் வகையில் இவர் படித்து வருகிறார். பாபர் அலி தனக்கு கல்வி கொடுத்த கடவுள் என்று குறிப்பிடுகிறார் சம்கி.

சரி. பாபர் அலி அப்படி என்னதான் பாடம் நடத்துகிறார்? ""நான் என் ஆசிரியர்களிடம் கேட்பதை இவர்களுக்கு அப்படியே சொல்கிறேன்; அவ்வளவுதான்'' என்கிறார் பாபர் அலி. தான் விரும்பும் சமூக மாற்றத்தை தன்னிலிருந்து தொடங்கிய பாபர் அலி மகத்தான மனிதன் என்று கொண்டாடுகிறது பி.பி.சி.

உலகின் இளம் தலைமையாசிரியர் இவரே என்றும் பிரகடனப்படுத்துகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மூர்ஷிதாபாத்தின் இந்த இளம் தலைமையாசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பொருத்தமானதுதானே!

Read more...

சமச்சீர் கல்வி மெட்ரிக் பள்ளிகளுக்கு எதிரானது அல்ல: தங்கம் தென்னரசு

Wednesday, October 14, 2009

நன்றி: தினமணி

சென்னை, அக். 13:
"சமச்சீர் கல்வி முறை மெட்ரிக் பள்ளிகளுக்கு எதிரானது அல்ல' என்று பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் "சமச்சீர் கல்வித் திட்டத்தின் சிறப்புகள்' குறித்த விளக்கக் கூட்டம் சென்னை பழஞ்சூரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பன்னாட்டு உறைவிடப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

இதில் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது:

சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இது மெட்ரிக் பள்ளிகளுக்கு எதிரான முடிவு அல்ல. சுதந்திரத்திற்கு முன்பு குறிப்பிட்ட சாரர் மட்டுமே கல்வி பெற்று வந்தனர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி உரிமை சில காரணங்களால் மறுக்கப்பட்டது.

அடித்தட்டு மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்று காமராஜர் பல முயற்சிகளை எடுத்தார்.

இன்று தமிழகத்தில் 1 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு உயர்நிலைப் பள்ளியும், 7 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு மேல்நிலைப் பள்ளியும் உள்ளது.

தென் மாவட்டத்தில் உள்ளவர்கள் கல்வியில் வளர்ச்சி காண அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கிறிஸ்தவ பள்ளிகளின் பங்கு மிக முக்கியமானது.

மனித வள மேம்பாட்டு குறியீட்டில் நாட்டிலேயே தமிழகம் 3-ம் இடம் பிடித்துள்ளது. இந்த மேம்பாட்டுக்கு அடிப்படையாக இருப்பது கல்வி தான். மெட்ரிக் பள்ளிகளை ஒதுக்கிவிட்டு சமச்சீர் கல்வியைக் கொண்டு வரவில்லை.

சமூக நீதி மற்றும் ஏற்றத்தாழ்வை நீக்க வேண்டுமெனில் கல்விதான் முக்கியப் பங்காற்றுகிறது. ஏற்றத்தாழ்வுகளை நீக்கக்கூடிய ஆயுதமாகக் கல்வி விளங்குகிறது. கல்வி முறையிலும் ஏற்றத்தாழ்வு உண்டு.

சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும், நமது எதிர்கால சந்ததியினரை முன்னேற்றவும் ஒரேவகையான கல்வித்திட்டத்தைக் கொண்டு வருவது அவசியமாகும்.

ஆங்கிலம் தொடரும்...: மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலம் அப்படியே தொடரும். மொழி சிறுபான்மை பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வரும் தெலுங்கு, உருது ஆகிய மொழிகளை அவரவர் மொழிகளிலேயே படிக்கலாம். அனைத்து குழந்தைகளுக்கும் எவ்வித மன உளைச்சல் இல்லாத வகையிலும், சிந்தனை திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலும், பாடச்சுமையைக் குறைக்கும் வகையிலும் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளியில் உள்ள நல்ல அம்சங்கள், கருத்துக்களை உள்ளடக்கிய வகையில் சமச்சீர் கல்வி திட்டம் அமைய வேண்டும். மெட்ரிக் பள்ளிகளும் அரசுக்கு, ஆலோசனைகளை வழங்க முன்வர வேண்டும்.

மெட்ரிக் பள்ளி இயக்குநரகம்: தமிழகத்தில் சுமார் 3,600 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகள் நிர்வாகம், கட்டமைப்பைக் கண்காணிக்க வேண்டி இருப்பதால் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அப்படியே தொடரும்.

அக்.15-ல் வரைவுப் பாடத்திட்டம் வெளியீடு: வரும் அக்டோபர் 15-ம் தேதி வரைவுப் பொதுப் பாடத்திட்டம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு பாடநூல் கழக நிறுவனத்தின் மூலமே அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும். மெட்ரிக் பள்ளிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். தமிழ்நாடு மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகரன், செயலாளர் என்.விஜயன், செயின்ட் ஜான்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் கிஷோர்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more...

ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., பயிற்சி்

நன்றி: தினமலர்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை இளைஞர் நலத்துறை சார்பில் நடக்க உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வு பயிற்சிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தேர்வு அக்., 26ம் தேதி நடைபெறும். விருப்பமுள்ளோர் பெயர், கல்வித் தகுதி, வயது, பிறந்த தேதி, முகவரி மற்றும் தற்காலிக பட்டச் சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். ரூ. ஐந்து மதிப்பில் ஸ்டாம்ப் ஒட்டிய 2 தபால் உறைகளை இணைத்து அனுப்ப வேண்டும். இயக்குனர்/ஒருங்கிணைப்பாளர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு பயிற்சி, இளைஞர் நலத்துறை, மதுரை காமராஜ் பல்கலை, பல்கலைநகர், மதுரை-21 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மேல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சிக்கான விண்ணப்பம் என எழுதி அக்.,21க்குள் அனுப்ப வேண்டும் என இயக்குனர் பி.செல்லதுரை தெரிவித்துள்ளார்.

Read more...

ஐ.பி.எஸ்., அதிகாரியான ஏழை விவசாயி மகன்

நன்றி: தினமலர்

ரயிலில் குடும்பத்துடன் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் எளிமையான ஐ.பி.எஸ்., அதிகாரி டி.கே.ராஜேந்திரன்.

சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்த தனது அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டதாவது: திருவண்ணாமலை அருகில் இருக்கும் ஓலைப்பாடி கிராமத்தில் பிறந்தேன். மொத்தமே நூறு குடும்பம்தான் இருக்கும். அப்பா விவசாயி. அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. தமிழ் மீடியம் ஸ்கூல்ல தான் படித்தேன்.

காலையிலேயே எழுந்து மாடுகளை மேய விடணும். அப்புறம், அப்பா பால் கறந்து கொடுப்பார். அதை வாடிக்கையாளர்கள் வீட்டில் ஊற்றிவிட்டு, ஸ்கூலுக்குப் போவேன். எங்க ஊரில், மழை பெய்ஞ்சு கிணறு நிறைஞ்சா தான் விவசாயம். இல்லாட்டி, கஷ்ட ஜீவனம் தான். ஸ்கூல்ல, ஹரிகிருஷ்ணன்னு ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் தான் ரொம்ப ஊக்கப்படுத்துவார். நல்ல புத்தகங்களைப் படித்து, அதிலுள்ள கருத்துக்களைச் சொல்வார். அவரால்தான், நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

பட்ட மேற்படிப்பிற்காக, சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். கோடம்பாக்கத்தில் இருந்த பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கிப் படிச்சேன். அப்பா கஷ்டப்பட்டு உழைத்து அனுப்புற பணத்தை, கொஞ்சம் கூட வீணாக்கக் கூடாதுன்னு, ரொம்ப சிக்கனமா இருப்பேன்.
கல்லூரிப் படிப்புடன், மத்திய அரசுப் பணிக்கான தேர்வையும் எழுதினேன். அதில் தேர்வாகி, குருப் டி அதிகாரியாக எனக்கு வேலை கிடைத்தது. ஆனால், அதில் சேர எனக்கு விருப்பமில்லை. ஐ.பி.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்பது தான் என் லட்சியம். இன்னும் அதிகமாக படித்தேன். ஒரு நாளுக்கு 14 மணி நேரம் படிப்பேன்.

ஐ.பி.எஸ்., தேர்வு எழுதி அதில் தேர்ச்சி அடைந்து டில்லிக்கு நேர்முகத் தேர்வுக்கு சென்றேன். டில்லியில் இன்டர்வியூ முடிந்து எங்க கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டேன். ரிசல்ட் வந்ததே தெரியாது. ஒரு நாள், வயலில் நின்னுக்கிட்டு இருந்தபோது, எங்கப்பா ஒரு கடிதம் கொண்டு வந்தார். உடனே சைக்கிளை எடுத்துக்கொண்டு, வேட்டவலம் லைப்ரரிக்குச் சென்று, ஒரு வார ஆங்கில நாளிதழ்களைப் பார்த்து, நான் ஐ.பி.எஸ்., அதிகாரியா தேர்வானதை உறுதிப்படுத்திக்கிட்டேன். இதை முதல்ல யார்கிட்ட சொல்றதுன்னு தெரியல. எங்கப்பா, அம்மாகிட்ட சொன்னா அவங்களுக்கு புரியல. எனக்கு படிப்பு சொல்லிக் கொடுத்த ஹரிகிருஷ்ணன் சார் வீட்டுக்கு ஓடிப்போய் சொன்னேன். என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் அது.

Read more...

பள்ளி ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆங்கில பயிற்சி

நன்றி: தினமலர்

கோவை: பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள் தாங்கள் சார்ந்துள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

மதுக்கரை ஒன்றியப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடந்த பயிற்சி முகாமில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துவது தொடர்பாக, பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ‘யுனிசெப்’ நிதியுதவியுடன் பிரிட்டிஷ் கவுன்சில் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் பயிற்சி அளித்து வருகின்றனர்.

கோவையில் இரு கட்டங்களாக நடைபெற்று வந்த இப்பயிற்சி கடந்த மாதம் நிறைவு பெற்றது. பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்களும் கண்காணிப்பாளர்களும், தாங்கள் சார்ந்துள்ள பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி அளித்து வருகின்றனர்.

மதுக்கரை ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மலுமிச்சம்பட்டி வட்டார வளமையத்தில் பயிற்சி நடைபெற்றது. ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களின் கற்றல் திறன் வளர்ச்சி அடைய ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய கற்பித்தல் முறைகள் பற்றி இதில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பங்கேற்ற ஆசிரியர்கள் தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு, கற்றல் திறன் மேம்படுத்துவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்ததும் ஆசிரியர்கள் வட்டமாக அமர்ந்து ஆங்கிலத்தில் விவாதித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரோஜினி தலைமையில் ஆசிரியர் பயிற்றுனர்கள் வனிதா, சுமதி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Read more...

சமச்சீர் கல்வி திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம்

நன்றி: தினமலர்

தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் தமிழ் பாடங்கள் எளிமைப்படுத்தப்படவுள்ளன.

பிற பாடங்களைப் போல் தமிழ் பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற வைத்து, மொத்த மதிப்பெண்களை எளிதில் உயர்த்தவே இந்த நடவடிக்கை என சமச்சீர் கல்வி கமிட்டியில் இடம் பெற்றுள்ள சிலர் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது நான்கு கல்வி முறைகள் உள்ளன. நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த வேறுபாட்டை நீக்கி, பொதுவான கல்வி முறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி தற்போது ஒவ்வொரு பாடத்திலும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அடங்கிய குழுவினர் பாடத்திட்ட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். புதிய பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்தை எளிமையாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது பல மெட்ரிக் பள்ளிகளில் பிரெஞ்சு, சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் முதல் பாடமாக கற்பிக்கப்படுகிறது. இந்த பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவது எளிது என்பதால், இதன் மூலம் அதிக மாணவர்களை நூறு சதவீத மதிப்பெண் பெற வைக்க பள்ளிகளும் பெற்றோரும் இம்மொழிகளை படிக்க வலியுறுத்தி வருகின்றன.

இதற்கு நேர்மாறாக தமிழ் பாடத்தில் இலக்கணம் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் கடினமாகவும், படிக்கும் மாணவனுக்கு பாடத்தில் பிடிப்பு ஏற்படாமலும் செய்கிறது. இதனால் தமிழ்நாட்டில் படிக்கும் தமிழ் மாணவர்களால் தமிழில் கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடியாத அவலநிலை உள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள சமச்சீர் கல்வி மூலம் இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் தமிழ் பாடத்தை மிகவும் எளிமையானதாக மாற்ற பாடநூல் வல்லுனர்களுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இனி வரும் ஆண்டுகளில் மாணவர்களை தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த முக்கிய மாற்றம் காரணமாக தமிழக மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிரெஞ்சு, சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளை படிப்பதை விட்டு தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் நிலை உருவாகும். இதே போல் வரலாற்றுப் பாடங்களும் எளிமைப்படுத்தப்படவுள்ளன.

பிற புதிய மாற்றங்கள்: புதிய பாடத் திட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் சீர்கேடுகளை தடுப்பது, குறைந்து வரும் மழை, உணவு கலப்படம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது. உடல் நலம், சுகாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பகுதிகள் கூடுதலாக சேர்க்கப்படவுள்ளன. பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை மாற்றப்பட்டு, செயல்பாட்டு முறையில் பாடங்கள் அமைக்கப்படவுள்ளன.

புதிய பாடத்திட்டம், என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டம் போல், தேசிய அளவில் மாணவர்களின் போட்டியிடும் திறனை மேம்படுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கான கேள்விகளை டில்லியில் உள்ள வல்லுனர்களே வடிவமைக்கின்றனர்.

என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தை தழுவிய இந்த கேள்விகளுக்கு, தமிழக மாணவர்களால் எளிதில் பதில் அளிக்க முடிவதில்லை. என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டம் போல் சமச்சீர் கல்வி முறை வடிவமைக்கப்படவுள்ளதால், இனி வருங்காலங்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற முக்கிய தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறும் அருமையான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து பாடத்திட்ட குழுவினர் சிலர் கூறுகையில், “தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசமானதாக மாற்றும் சமச்சீர் கல்வித் திட்டத்தை, பெற்றோர்களும் ஆசிரியர்களும் மனதார ஆதரிக்க வேண்டும். இத்திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்துவதில் ஆசிரியரின் பங்கு முக்கியம். ஆசிரியர்கள் நிறைய விஷயங்களை படித்து கற்றுக் கொள்வது முக்கியம்,” என்றார்.

Read more...

ஆசிரியர்களே வராத பள்ளிகள்: ஆத்தூரில் அதிகாரிகள் அதிர்ச்சி

Monday, October 12, 2009

நன்றி: தினமலர்

ஆத்தூர்: ஆத்தூரில் அரசு உறைவிடப் பள்ளிகளில் ஆய்வு நடத்திய வருவாய்த்துறையினர், ஆசிரியரே இல்லாத நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சத்துணவு சமையலறையில் மளிகைப் பொருட்களும் இல்லை. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பெரிய கல்வராயன் மலையில் கீழ்நாடு கிராமம் உள்ளது. இங்குள்ள நாகலூர் அரசு உறைவிடப் பள்ளியில், தாசில்தார் ஜெயபால் உட்பட அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர். 55 மாணவர்களுக்கு பதிலாக, ஏழு மாணவர்கள் மட்டுமே இருந்தனர். தலைமை ஆசிரியர் பிரபுதாஸ், சமையலர் பெருமாள் உள்ளிட்டோர் யாரும் பணியில் இல்லை. மாணவர்களே தங்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தனர்.

குன்னூர் மலைக் கிராமத்திலுள்ள அரசு உறைவிட பள்ளியில் 100 மாணவர்களுக்கு, 75 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். தலைமை ஆசிரியர் செல்வராஜ், 15 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது. ஒரு ஆசிரியர், சமையலர் மட்டுமே இருந்துள்ளனர். சத்துணவு மையத்தில், தக்காளி, காய்கறி தவிர, மளிகைப் பொருட்கள் எதுவும் இல்லை.

இது தொடர்பாக வருவாய்த்துறையினர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமையலர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர். தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரிய மாநில கமிட்டி உறுப்பினர் பழனிசாமி கூறியதாவது: மலைகிராம பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மாதத்தில் இரண்டு முறை மட்டுமே வருகின்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ள மலைவாழ் சமுதாயத்தினருக்கு மாதம் 1,000 ரூபாய் சம்பளம் கொடுத்துவிட்டு, பள்ளிக்கு ஆசிரியர்கள் வருவதில்லை. பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து விடுகின்றனர். ஆசிரியர்களது வருகை பதிவேட்டிலும் கையெழுத்து இல்லை. இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு மாவட்ட நிர்வாகத்தை ஏமாற்றி, சம்பளம் பெற்று வரும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.


Read more...

அரசு பள்ளி தத்தெடுப்பு திட்டத்தில் தொய்வு


நன்றி: தினமலர்

உள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கும் திட்டம், தற்போது தொய்வடைந்துள்ளது.

இதற்கு, அதிகாரிகளின் போதிய ஒத்துழைப்பின்மை மற்றும் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தால், பள்ளிக்கு தாங்கள் விரும்பும் பெயர்களை சூட்டலாம் என்றிருந்த அரசாணை ரத்து போன்றவை, முக்கிய காரணங்களாக உள்ளன. தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில், பெரும்பான்மையாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் தான் உள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, முழுமையான உள் கட்டமைப்பு வசதிகளை அரசே செய்து கொடுப்பது என்பது சிரமம் தான்.

இதை அறிந்து தான், அரசுப் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உள்ளூர் வி.ஐ.பி.,க்கள் செய்து தரவும், அதற்காக பள்ளியில் நன்கொடையாளர்கள் விரும்பும் பெயரை வைத்துக் கொள்ளவும் அரசு அனுமதித்தது. இதனால், பலர் அரசுப் பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்தினர். கடந்த சில ஆண்டுகளாக இந்த திட்டத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மை முக்கியக் காரணமாக இருக்கிறது.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முன்வரும் நன்கொடையாளர்களை, உரிய முறையில் அணுகாமல் அலைய விடுவதாலும், திட்டத்தில் போதிய ஆர்வம் காட்டாததாலும் இந்த திட்டம் தற்போது முடங்கிப் போயுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு, ஐந்து லட்ச ரூபாய் நன்கொடை அளித்தால், அந்தப் பள்ளிக்கு நன்கொடையாளர் விரும்பும் பெயரை சூட்டலாம் என்று அரசாணை இருந்தது. இந்த அரசாணை ரத்து செய்யப்பட்டு விட்டதாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்கொடை திட்டம் குறைந்துபோனதற்கு, இது ஒரு முக்கியக் காரணம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போதைய திட்டத்தின்படி, பள்ளிக்குத் தேவையான வகுப்பறைகள் அல்லது ஆய்வகங்கள் போன்ற வசதிகளை, நன்கொடையாளர்கள் செய்து தரலாம் என்றும், அந்த குறிப்பிட்ட அறைக்கு மட்டும் நன்கொடையாளர்கள் விரும்பிய பெயரை சூட்டலாம் என்றும் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில், அரசுப் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில், நன்கொடையாளர்களின் பங்கு சொல்லும்படியாக இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அடுத்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வரும் நிலையில், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஆய்வு செய்த முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன், "சமச்சீர் கல்வி என்பது வெறும் பாடத் திட்டம் மட்டும் கிடையாது;

அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில், சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றிலும், இந்தக் கருத்தை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் உள்ளிட்ட கல்வியாளர்கள் வலியுறுத்தினர். பள்ளிகளில் எந்தவித வசதிகளும் இல்லாமல், பாடத் திட்டத்தை மட்டும் பொதுவாக வழங்கி விட்டால், அதனால் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது.

அரசுப் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் செல்வந்தர்களையும், தொழிலதிபர்களையும் பங்கேற்குமாறு அரசு வேண்டுகோள் விடுக்க வேண்டும். நன்கொடையாளர்கள் விரும்பும் பெயர்களை பள்ளிக்கு சூட்டவும், கூடுதல் கட்டடங்களுக்கு பெயர் சூட்டிக் கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும். நன்கொடையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நினைத்தால், இந்த திட்டத்தை பெரிய அளவில் மக்களிடம் எடுத்துச் சென்று, அதன் மூலம் அரசுப் பள்ளிகளின் வசதிகளை கண்டிப்பாக மேம்படுத்த முடியும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

Read more...

உழைப்பிற்கு வயது தடையல்ல : 55 வயதில் சாதிக்கும் பெண்மணி

Sunday, October 11, 2009

நன்றி: தினமலர்

கோவை : பெண்களும் ஆண்களுக்கு நிகராக வருவாய் ஈட்ட முடியும் என்பதை இன்றைக்கு பல பெண்கள் நிரூபித்து வருகின்றனர். இந்த வகையில் உழைப்பிற்கும், வருவாய் ஈட்டுவதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதை ஆணித்தரமாக உணர்த்தி வருகிறார் பொள்ளாச்சியை சேர்ந்த 55 வயது பெண் வெள்ளையம்மாள். தினமும் 20 கி.மீ., சைக்கிள் மிதித்து, 60 லிட்டர் பால் விற்கும் இவருக்கு கிடைக்கும் வருவாய் தினசரி 100 ரூபாய். கடந்த 30 ஆண்டுகளாக பால் வியாபாரம் செய்யும் இவருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயர் உண்டு. "வெள்ளையம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலும் குறித்த நேரத்திற்கு பால் வீடு தேடி வந்துவிடும்' என்கின்றனர் அவரது வாடிக்கையாளர்கள்.

Read more...

ஊராட்சி தலைவரானார் உ.பி., பிச்சைக்காரர்

நன்றி: தினமலர்

மீரட் : சிறுவயதிலிருந்து பிச்சை எடுத்துத் திரிந்தவர், ஊராட்சி தலைவராக ஆகியிருக்கிறார். உ.பி., மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்திலுள்ள கைகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தரம்வீர். "நாட்' என்ற நாடோடி இனத்தைச் சேர்ந்த இவர், தனது பத்தாவது வயதில் பள்ளிக்குச் செல்வதை விடுத்து பிச்சை எடுக்க ஆரம்பித்தார். இவரது வருமானத்தில்தான் குடும்பம் நாட்களைக் கடத்தி வந்தது. இவர் தனது பிச்சையில் ஒரு பகுதியைச் சேமித்து ,தன் தம்பியைப் படிக்க வைத்தார். இவரது தம்பி இப்போது மாநிலப் பொதுப்பணித்துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.

கடந்த 2005ல் இவரது கிராமத்தில் ஊராட்சி தேர்தல் நடந்தது. பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர்குடியினர் இவரைத் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்கவைத்தனர். தரம்வீரை எதிர்த்து ஜாதவ் இனத்தைச் சேர்ந்தவர் போட்டியிட்டார். தரம்வீர் வெற்றி பெற்றார். தனது கிராமத்தின் நலனுக்காக உழைத்து வரும் தரம்வீர்," முன்பு எனக்காகப் பிச்சை எடுத்தேன். இப்போது எனது கிராம மக்களுக்காகப் பிச்சை எடுக்கிறேன். இதுவரை 25 லட்ச ரூபாய் வரை கிராம வளர்ச்சிப் பணிகளுக்காக செலவழித்திருக்கிறேன். கிராமத்தின் சாலைகளை சிமென்ட் சாலைகளாக மாற்றுவதுதான் எனது இப்போதைய கனவு' என்று நெகிழ்கிறார். தரம்வீரின் நேர்மை, அர்ப்பணிப்பு குறித்து கிராம மக்களும் மாவட்ட அதிகாரிகளும் பெருமிதம் கொள்கின்றனர்.

Read more...

மனதை நெறிப்படுத்தும் வழிகள்

Saturday, October 10, 2009

நன்றி: தினத்தந்தி

சமுதாயத்தின் விடிவெள்ளிகளான இளைஞர்களின் மேம்பாட்டுக்கு தேவையான விஷயங்களின் கடந்த வார தொடர்ச்சியை விளக்குகிறார் திருச்சி மண்டல வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குனர் ப.சுரேஷ்குமார்.

இளைஞர்களுக்கு சிந்தனை ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம். சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். மனதை நெறிப்படுத்தி திறன்களை பெறுவது எப்படி? அதற்கான வழிகள் இதோ...

* ஒரு பிரச்சினையை அறிமுகப்படுத்தி அதை எதிர்கொண்டு திறம்பட தீர்வு காண பழகிக் கொண்டால் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும்போதும் சுமூகமாக தீர்வு காண்பது சாத்தியமாகிவிடும்.

* தகவல்களைப் பெற்று அனுபவ ரீதியாக பல்வேறு கோணங்களில் ஆராயப் பழகிக் கொள்ள வேண்டும்.

* பல்வேறு காரணிகளை ஆராய்ந்து ஆரோக்கியமான பயனளிக்கும் முடிவை எடுக்க மனதை பழக்க வேண்டும்.

* நிர்ணயித்துக் கொண்ட இலக்கை குறுகிய காலத்தில் அடைய முடிவது, நீண்ட காலத்தில் அடைய முடிவது என்று வகைப்படுத்தி அதற்கேற்ப முயற்சி மேற்கொள்ள எண்ணத்தை நெறிப்படுத்த வேண்டும்.

சமூகத் திறன்களாவன:

* நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து நட்புறவுடன் நடந்து கொள்ளுதல், குடும்பத்திலுள்ள பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள், உறவினர்களுடன் சுமூகமாக நடந்து கொள்ளுதல், சமுதாயத்திலுள்ள அனைவரிடமும் இசைவுடன் பழகுதல், ஒவ்வொரு தனி மனிதனை அவரவர்களின் குறை, நிறைகளுடன் நட்பு பாராட்ட பழகுதல் போன்றவை உறவுகளை மேம்படுத்தும் திறன் களாகும்.

* கவனமாக கேட்கும் ஆற்றல், கேட்கும்போது உணர்வை வெளிப்படுத்துதல், உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும் திறன், கருத்துக்களை கூறுதல் போன்றவை தொடர்பு கொள்ளும் திறன்களாகும்.

* இடர்பாடுகளை எதிர்கொள்ளுதல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன், தன்னுடைய நிலைப்பாட்டை வலியுறுத்தும் திறன் போன்ற சமாளிக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அகப்பண்புகள்:

இளைஞர்கள் அவரவர்களைப் பற்றி ஆரோக்கியமாக எண்ண வேண்டும் என்று க்ளென் மற்றும் ஆல்பர்ட் பன்டூரா என்ற உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். தங்களால் முடியும் என்று கருதும் இளைஞர்களே தலைவர் களாக முடியும். அவர்களது முக்கியத்துவத்தை அவர்களே அறிந்தவர்களாக இருப்பார்கள். சூழ்நிலைகளை மாற்றும் ஆற்றலும், தங்களது புலன்களை அடக்கி ஆளும் திறன் கொண்டவர்களாகவும் செயல்பட பயிற்சி அளிக்க வேண்டும்.

தூண்டுதல் உணர்வு:

இளைஞர்கள் மேம்பாட்டிற்கான பயிற்சி இளைஞர் களின் திறன் தேவை, அவர்களது வயது, கல்வி, அவர் களது ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

நினைவாற்றல், புரிந்துகொள்ளும் திறன், பகுத்தறியும் திறன் இவை கற்பதற்கு தேவையான மூன்று முக்கியமான திறன்கள் ஆகும். வாழும் சமூகத்தையும் புரிந்துகொள்ளும் திறனும் முக்கியம்.

ஆக்கப்பூர்வமான சமூகப் பழக்கங்கள்:

இது நான்கு வகைப்படும். அவையாவன: சுய கட்டுப்பாடு, தன்னைத்தானே மதிப்பது, விடாமுயற்சியுடன் இலக்கை அடைய முயலுதல், விருப்பத்தை தள்ளிப் போடுதல், உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்துதல் முதல் வகையாகும்.

பொறுப்பு: வாக்குறுதியை நிறைவேற்றும் பண்பு, நேர்மையாக நடந்து கொள்ளுதல், சவால்களை சந்தர்ப்பமாக மாற்றுதல், எடுத்த காரியத்தை குறித்த காலத்தில் முடிக்கும் பண்பு, தாங்கள் செய்த தவறுக்கு முன்வந்து பொறுப்பேற்றுக் கொள்ளுதல் போன்றவை இரண்டாவது வகையாகும்.

மதிப்பீடு செய்யும் திறன்: ஆராய்ந்து அறிந்து எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை தவிர்த்து, சரியாக மதிப்பீடு செய்து முடிவு எடுத்து செயல்படும் திறன் மூன்றாவது வகையாகும்.

மற்றவர்களுடன் இணைந்து செயல்படுதல்: உதவும் குணம், பகிர்ந்து கொள்ளும் ஆற்றல், கேட்டு மதிப்பீடு செய்து கருத்தை தெரிவித்தல், குழு மனப்பான்மையில் செயல்படுதல் போன்றவை நான்காவது வகையாகும்.

பிணைப்பு: இளைஞர்களது மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது அவரவருடைய குடும்ப சூழ்நிலையாகும். அதன் அடிப்படையிலேயே பள்ளி மற்றும் சமுதாயத்தில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளும் பெரும்பாலும் அமையும். உறவுகள் ஆரோக்கியமானதாக அமையும்போது இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். பெற்றோர்களுக்கு கூட்டம் நடத்தி குழந்தைகள் மேம்பாட்டிற்கு ஆலோசனை வழங்கலாம்.

தொடர்ந்து பள்ளிச் சூழலை மேம்படுத்துதல் நண்பர் களுடன் நல்ல புரிதலுடன் நடந்து கொள்ளுதல் போன்ற பழக்கத்தை ஏற்படுத்தலாம். சமூக செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்து சமூக மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் விதத்தில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.

ஒவ்வொரு இளைஞரும் உடல் ஆரோக்கியம் பேணுதல், அறிவாற்றலை வளர்த்தல், சமூக மேம்பாட்டில் அக்கறை செலுத்துதல், நெறிப்படுத்தப்பட்ட உணர்வுகளுடன் செயல்படுதல் போன்ற பண்புகளை கொண்டு விளங்கினால்தான் இளைஞர் மேம்பாட்டிற்கு மேற்கொள்ளும் முயற்சி, பயிற்சி போன்றவை முழுமையான பலனை அளிக்கும்.

Read more...

வெற்றிக்கு வழி அமைதி

நன்றி: தினத்தந்தி

மகிழ்ச்சியும், நிம்மதியுமே வாழ்க்கையின் லட்சியம். நாம் செய்யும் எல்லா செயல்களும் இதை நோக்கியே அமைந்திருக்கின்றன. இந்த இரு பண்புகளுக்கும் அமைதியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனெனில் நீங்கள் அமைதியை இழந்தால் இவை இரண்டுமே உங்களைவிட்டு தூரத்துக்கு சென்று விடும்.

உங்கள் அனுபவத்தில் இது நிகழ்ந்திருக்கலாம். பிறர் உங்களை காரணமின்றி திட்டுவதாகவும், குறை கூறுவதாகவும் உங்களுக்கு தோன்றி இருக்கலாம். அது உண்மையாகவோ அல்லது மாறாகவோ இருக்கலாம். எப்படி இருந்தாலும் சிக்கலான காலக்கட்டத்தில் அமைதியுடன் இருந்து பொறுமையாக சமாளியுங்கள். அப்போது அமைதியின் சக்தியை நீங்கள் உணருவீர்கள். பிறகு அதன் பலனை அனுபவிப்பீர்கள்.

ஆனால் எல்லா நேரத்திலும் அப்படி இருக்க முடியுமா? பேச வேண்டிய தருணத்தில் பேசாமல் இருப்பதுதான் மிகப்பெரிய பலவீனம். தமிழில் ஒரு பழமொழி உண்டு. `கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு' என்பது அந்தப் பழமொழி. இதில் வரும் கொக்குபோல காத்திருப்பது அமைதிக்கு எடுத்துக்காட்டு அல்ல. அறிவீனத்தின் வெளிப்பாடு.

அமைதியை இழப்பதே கோபம். துன்பத்தின் ஆரம்பம். பலவீனமானவர்களுக்கே சீக்கிரம் கோபம் வரும் என்பது உண்மைதான். உங்கள் கருத்தை சாந்தமாகவே வெளியிடுங்கள். அப்படியும் மற்றவர், உங்களின் மீது கோபத்தை கொட்டுவதையே குறியாக இருக்கிறார் என்பதை உணர்ந்தால் அங்கே நீங்கள் கண்டிப்பாக அமைதியாகத்தான் இருக்க வேண்டும்.

எங்கே சரியான புரிதல் இருக்கிறதோ, அங்கே கோபம் குறைந்துவிடும். அமைதி சூழ்ந்து கொள்ளும். அமைதி கலையும் இடத்தை நன்றாக கவனித்துப் பாருங்கள். அங்கே எதிரெதிர் கருத்துக்கள் தோன்றியதாலேயே ஆட்சேபணை உருவாகி கோபம் கொப்பளிக்கும். அமைதி கெடும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் கருத்து சரியாகவே இருந்தாலும் அதை வலியுறுத்த வேறு தருணத்தை எதிர்பார்த்து நீங்கள் அமைதி காப்பதே அறிவுடைமை. "அறிவற்றம் காக்கும் கருவி" என்பார் தமிழ்ப்புலவன் வள்ளுவர்.

உங்களுக்கு கோபமூட்டும் தருணங்களில் நீங்கள் சரியான புரிதலோடு அமைதி அடைவீர்களானால், அந்த அறிவுடைமையானது உங்களது நெருங்கிய சுற்றத்தாரான மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நிலைத்திருக்க வைக்கும் என்று இங்கு பொருள் கொள்ளலாம்.

எனவே எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள். எந்த நிலைமையிலும் அடக்கமாக இருங்கள். அனைவரிடமும் அன்பு செலுத்தவும், அன்பைப் பெறவும் கற்றுக் கொள்ளுங்கள். பிறர் உங்களை குறை கூறும்போது மவுனமாக இருங்கள். அவர்கள் மீது எந்த விதமான பகைமை உணர்ச்சியும் கொள்ளாதீர்கள். வெளிப்படையாக கோபத்தை காட்டுவதைவிட இது மிகவும் மோசமானது. இது ஒரு மானசீகப் புற்றுநோய் எனலாம்.

மறப்போம், மன்னிப்போம். இது வெறும் லட்சியவாத மொழி அல்ல. கோழைச் செயலுமல்ல. உங்கள் அமைதியைப் பாதுகாக்கும் ஒரு வழிதான். அந்த வீண் பழிச்சொற்கள் பொய்யானவை என்பதை நீங்களே அறிவீர்கள். பிறகு ஏன் அதையே மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டும்? குழப்பிக் கொண்டால் உங்களுக்குத் தூக்கம் கெடும். படபடப்பு அதிகரிக்கும். நிம்மதி பறிபோகும். மகிழ்ச்சி மறைந்துவிடும். அமைதி காக்க கற்றுக் கொண்டால் அடக்கத்திலும், தூய்மையிலும் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள்.

வாழ்வில் உங்களை தடுமாற வைக்கும் இத்தகைய சம்பவங்கள் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிடலாம். அப்போது உங்களுக்கு விருப்பமான செயலில் மனதை லயிக்கச் செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதியும், திருப்தியும் கிடைக்கும்.

எந்த செல்வத்தை காட்டிலும் மன அமைதியே பெரிது. அதை நீங்கள் உணர்ந்தால் அமைதியை கெடுக்கும் கோபத்தை கைவிடுங்கள். இக்கட்டான நிலையில் சரியான புரிதலுடன் அமைதி காத்திடுங்கள். சாதகமான நேரத்தில் உங்களின் கருத்தை வெளியிடுங்கள். அமைதியின் சக்தியை உணருங்கள். உறுதி பலமடங்கு கூடும். எளிதில் வெற்றி காண்பீர்கள்.

Read more...

தமிழ்நாட்டில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ஈரோட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

நன்றி: தினத்தந்தி (ஈரோடு, அக். 10-)

தமிழ்நாட்டில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் அரசு தேர்வாணையம் மூலம் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று காலை ஈரோடு வந்தார். ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்துக்கு சென்று பார்வையிட்டார். பள்ளிக்கூடத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் டாக்டர் அப்துல் கலாம் நூலகத்தை அமைச்சர் சுற்றிப்பார்த்தார். பின்னர் மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்:

தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். 12 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் ஆதி திராவிடர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அரசு அனுமதித்துள்ளது. அதற்கான தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்ததும் ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.

ஆசிரியர்கள் பற்றாக்குக்குறை:

இந்த 12 ஆயிரம் ஆசிரியர்களில் 1,000 ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்கள் ஆவார்கள். இவர்கள் நியமிக்கப்படும் வரை பிளஸ்-2 மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் உதவியுடன் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் 5 ஆசிரியர்கள் வீதம் அரசு நியமித்து வருகிறது. இதனால் அந்த பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை வர வாய்ப்பு இல்லை.

சமச்சீர் கல்வி:

தமிழகத்தில் சமச்சீர் கல்விக்கான வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஒரு வார காலத்திற்குள் முடிவடையும். பின்னர் அது இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொது மக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியவர்களின் கருத்து கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடத்தப்படும்.

தற்போது 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படுகிறது. அடுத்த ஆண்டு மற்ற வகுப்புகளுக்கு பாடத்திட்டம் தயாரிக்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் கூறியபடிதான் சமச்சீர் கல்வி முறை அமலாக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்க வாழ்க்கை கல்வி முறையை சமச்சீர்கல்வியில் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆ.மு.காசிவிஸ்வநாதன், ஈரோடு மாவட்ட கலெக்டர் சுடலை கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் என்.கே.கே.பி.ராஜா, எஸ்.குருசாமி, மற்றும் மேயர் குமார் முருகேஸ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொன்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நூலகம் திறப்பு:

முன்னதாக பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 3 வகுப்பறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். மேலும் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அப்துல்கலாம் நூலகத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

Read more...

சிலேட்டை ஏந்தும் பிஞ்சுகள்.. பிளேட்டை ஏந்தி பிச்சை எடுக்குதே

Read more...

கல்வி உரிமை சட்டம் அமல்படுத்த ரூ.1.78 லட்சம் கோடி

Tuesday, October 6, 2009

அடுத்த ஐந்தாண்டுகளில், கல்வி பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு 1.78 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு செலவிட வேண்டியுள்ளது.

இந்த புதிய சட்டம், அடுத்த கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி பெறுவது என்பது அனைவரின் அடிப்படை உரிமை என்றாலும், அதை உத்தரவாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
கல்வி பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த, மொத்தம் 1.78 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதில், 50 ஆயிரம் கோடி ரூபாய், சர்வ சிக்ச அபியான் திட்டத்தில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்க உள்ளன. இதனால், மொத்த தேவை 1.28 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில், சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி ஒதுக்கப்பட்டாலும், இன்னும் 68 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. எனவே, இது தொடர்பான அறிக்கையை நிதி அமைச்சகத்துக்கும், 13வது நிதி ஆணையத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற வீதத்தில் நிதி ஒதுக்குகின்றன. இது 12வது திட்டத்தில், 50:50 என்ற வீதத்தில் மாறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்

Read more...

ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள்

'என்.பி.டி.இ.எல்., திட்டத்தில், இரண்டாவது கட்டமாக, 2011ம் ஆண்டு டிசம்பருக்குள், 600 பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்கள், வெப் மற்றும் வீடியோ வடிவில் உருவாக்கப்பட்டு, ஆன்-லைனில் இலவசமாக வழங்கப்படும்' என, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் ஆனந்த் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க, மத்திய அரசு, என்.பி.டி.இ.எல்., திட்டத்தின் கீழ், பொறியியல் பாடங்களை ஆன்-லைனில் வழங்கி வருகிறது. ஏழு ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., ஆகியவை இணைந்து, பொறியியல் பாடங்களை வெப் மற்றும் வீடியோ வடிவில் உருவாக்கியுள்ளன. முதற்கட்டமாக, 21 கோடி ரூபாய் செலவில், சிவில், மெக்கானிக்கல், இ.சி.இ., எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கோர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், பயோடெக்னாலஜி ஆகிய பிரிவுகளில், 129 வெப் பாடங்கள், 110 வீடியோ பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை, "www.youtube.com/iit', "http://nptel.iitm.ac.in' ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இவற்றை இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம். இப்பாடங்களை, "டிவிடி' வடிவிலும் பெற்றுக் கொள்ளலாம். "டிடி' - ஏக்லவியா சேனலிலும் இப்பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இணையதளத்தில், தினமும் 5,400 பேர் வீதம், இதுவரை 15 லட்சம் பேர் இப்பாடங்களைப் பார்த்துள்ளனர். என்.பி.டி.இ.எல்., திட்டத்தில், இரண்டாவது கட்டமாக, ஏரோஸ்பேஸ், கெமிக்கல் ஆகிய பொறியியல் மற்றும் வேதியியல், இயற்பியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், குறைந்தபட்சம் 600 பாடங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதுநிலை மற்றும் சில பிஎச்.டி., பாடங்களும் உருவாக்கப்படுகின்றன. இதற்காக, மத்திய அரசு 96 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 2011ம் ஆண்டு டிசம்பருக்குள் இப்பாடங்கள் உருவாக்கப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்படும். தேசிய ஐ.சி.டி., மிஷன் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 18 ஆயிரம் கல்லூரிகள் ஆன்-லைன் மூலம் இணைக்கப்பட உள்ளன. இப்பாடங்களைக் கற்பவர்களில் 40 சதவீதம் பேர் மாணவர்கள், எட்டு சதவீதம் பேர் ஆசிரியர்கள், 50 சதவீதம் பேர் ஏற்கனவே பட்டம் பெற்றவர்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில், தேசிய விர்ச்சுவல் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்பல்கலைக் கழகத்தில் என்.பி.டி.இ.எல்., பாடங்கள் பயன்படுத்தி, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படும்.

நன்றி: தினமலர்

Read more...

தமிழாசிரியர் இல்லாத பள்ளிகள் தமிழில் தோற்கும் மாணவர்கள்

Sunday, October 4, 2009

தரம் உயர்த்திய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்காததால், பொது தேர்வில் தமிழில் தோல்வியடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக அரசு தரம் உயர்த்தி வருகிறது. 1998 முதல் 2002 வரை தரம் உயர்வு செய்யப் பட்ட பள்ளிகளில் மொழிப்பாடம், அறிவியல் பாடப்பிரிவுகளில் ஐந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.கடந்த 2002 முதல் தரம் உயர்த்தியுள்ள 740க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் ஆசியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி தமிழாசிரியர் இல்லாததால் உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கின்றனர்.

இதனால் ஆறு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் பாதிக்கிறது.தரம் உயர்வு செய்யப்படும் பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்க, அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யாததால், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து வருகிறது.தமிழாசிரியர்கள் இல்லாமல், தாமாக தமிழ் கற்கும் மாணவர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறுகின்றனர். தமிழக பள்ளிகளில் தமிழ் பாடத்தில் தோல்வியடையும் மாணவர்கள் விகிதத்தை குறைக்க, தரம் உயர்த்திய மேல்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

தரம் உயர்த்திய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்காததால், பொது தேர்வில் தமிழில் தோல்வியடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நன்றி: தினமலர்

Read more...

மாங்குடி அரசுப் பள்ளி மாறிய கதை!

ஜோதிமணிக்கு வயது பத்தொன்பது. அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். விரும்பி சேர்ந்த வேலை இது. அவருக்கு ஒரு கனவு இருந்தது. அடிப்படையில் இருந்து எல்லாமே மாறவேண்டும். மாணவர்களின் தலையெழுத்து மாற்றி எழுதப்பட வேண்டும். ஆசிரியப் பணியில் மட்டுமே இது சாத்தியம்.

மாணவர்கள் சோர்வின்றி கல்வி கற்கவேண்டும். இதற்கு வாகான வகுப்பறைகள் வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு தொலைக்காட்சி பெட்டி, சுவர்க் கடிகாரம், காலண்டர், குடிதண்ணீர் குழாய், முகம் பார்க்கும் கண்ணாடி, நகம் வெட்டும் நெயில் கட்டர், குப்பைக்கூடை, மாணவர்கள் தங்களுக்குள் கடிதப் பரிமாற்றம் செய்துகொள்ள அஞ்சல்பெட்டி, கம்ப்யூட்டர், சுகாதாரமான கழிப்பறை, விளையாட்டுப் பொருட்கள், பூங்கா... இப்படியெல்லாம் நீண்டுக்கொண்டே போனது ஜோதிமணியின் கனவு. மனது வைத்தால் இவை சாத்தியப்படக் கூடிய மிக எளிய விஷயங்களே என்று நம்பினார்.

மேலும் தொடர்ந்து படிக்க:

யுவகிருஷ்ணா: மாங்குடி மாறிய கதை!

http://www.thehindu.com/2009/07/11/stories/2009071150510200.htm

Read more...

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP