விழிப்புணர்வு | பள்ளி வராத கிராமப்புற மாணவர்கள்
Sunday, June 14, 2009
பொள்ளாச்சி: பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டும் மாணவர்களின் சேர்க்கை குறைவாகவே உள்ளது. சேர்க்கை விகிதம் குறித்த பட்டியலை அளிக்க தலைமையாசிரியர்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர்.அரசுப் பள்ளிகளில் நாளுக்கு நாள் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் போன்ற புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. "கலர் டிவி', "டிவிடி பிளேயர்' மற்றும் "லேப்டாப்' வசதிகள் அளிக்கப்பட்டு, "இங்கிலீஷ் அரவுண்டு அஸ்', "ஹலோ இங்கிலீஷ்' போன்ற பயிற்சிகள் மூலமாக ஆங்கில மொழித்திறனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் உள்ள சலுகைகள், புதிய பாடத்திட்டம் குறித்து சேர்க்கைப் பேரணி, துண்டுப்பிரசுரம் வினியோகித்தல் உட்பட பல்வேறு வழிகளில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நேரிடையாக ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பெற்றோரிடம் விளக்கம் அளித்ததால், நடப்பாண்டில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரிக்கக்கூடும் என ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்டது.இருப்பினும், வழக்கம்போல் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை இந்த ஆண்டும் குறைவாகவே உள்ளது. இதுவரை எவ்வளவு மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்ற தகவலைக் கூற தலைமையாசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வோர் ஆண்டும் புதிதாக எவ்வளவு மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர் என்று ஒன்றியந்தோறும் பட்டியல் தயாரித்து மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்படுகிறது. நடப்புக் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு 10 நாட்களான நிலையில், மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், யாரும் பள்ளியில் சேர முன்வரவில்லை. குறைந்த மாணவர்கள் மட்டுமே பள்ளியில் சேர்ந்துள்ளதால், பட்டியலை அளிக்க தலைமையாசிரியர்கள் தயக்கமடைகின்றனர். இன்னமும் ஒரு வாரம் கால அவகாசம் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவ்வாறு, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி: தினமலர் ஜூன் 12,2009
0 comments:
Post a Comment