அப்படியா?
Sunday, January 31, 2010
ஜென் குருவான ஹகுயின் எல்லோராலும் தூய்மையானவர் என்று புகழப்பட்டு
பெரிதும் மதிக்கப்படுபவர். ஜப்பானிய அழகி ஒருத்தி அவர் வாழும் இடத்திற்கு அருகில் உணவு விடுதி வைத்திருந்த தம்பதிகளுக்கு ஒரே புதல்வி. திடீரென்று ஒரு நாள் அவள் கர்ப்பமுற்றிருப்பதைக் கண்ட பெற்றோர் திகைத்தனர். கோபம் மேலிட இதற்குக் காரணமானவன் யார் என்று பெற்றோர் அவளைக் கேட்டனர். பதில் வரவில்லை. உடனே மிகவும் அவளை வற்புறுத்தவே அவள் ஹகுயின் பெயரைக் கூறினாள். கோபமடைந்த பெற்றோர் ஹகுயினை அணுகிக் கத்தினர்.
"அப்படியா?" என்றார் ஹகுயின்.
குழந்தை பிறந்தவுடன் அதை ஹகுயினிடம் கொண்டு வந்து விட்டனர் பெண்ணின்
பெற்றோர். அவரது நல்ல பெயருக்குக் களங்கம் ஏற்பட்டது. அதைப் பற்றி அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. குழந்தையைச் சீராட்டி நன்கு வளர்க்க ஆரம்பித்தார். அண்டை அயலாரிடம் பால் வாங்கி குழந்தைக்குக் கொடுத்து வரலானார்.
ஒரு வருடம் கழிந்தது. குழந்தையின் தாயான அந்தப் பெண்ணால் பொறுத்துக்
கொள்ள முடியவில்லை. மீன் சந்தையின் மீன் விற்பனை செய்யும் இளைஞன் ஒருவனே குழந்தையின் தகப்பன் என்று அவள் உண்மையைப் பெற்றோரிடம் கூறினாள். உடனே பெண்ணின் பெற்றோர் குழந்தையைத் திரும்பப் பெற வேண்டி ஹகுயினிடம் விரைந்தனர். குழந்தையைத் திருப்பித் தர ஹகுயின் இசைந்தார்.
தங்கள் செயலுக்கு மன்னிப்பு அளிக்குமாறு அவரைப் பெண்ணின் பெற்றோர் மன்றாடிக் கேட்டுக் கொண்டு குழந்தையின் தந்தை யார் என்பதையும் கூறினர்.
ஹகுயின் கூறினார்: "அப்படியா?"
நன்றி: மஞ்சரி அக்டோபர் 2006
நன்றி: http://www.nilacharal.com/tamil/specials/zen_stories_288.asp
0 comments:
Post a Comment