ஒரு வினாடியைக் கூட வீணாக்காதே
Sunday, April 29, 2012
காலத்தை வீணடிக்காதே. நீ எதையாவது விரும்பவில்லையென்றால் அது என்னவாக இருந்தாலும் அதில் இருப்பது ஒரு கணமேயானாலும் அது தற்கொலையே. அதனால் என்ன இழப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து வெளியே வந்துவிடு. அது உனது சக்தியை விடுவிக்கும், நீ வேறெங்காவது இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். ஒரு கதவை நீ மூடினால் வேறொரு கதவு திறக்கும். நீ இந்த கதவை மூடவில்லையென்றால் வேறு எந்த கதவும் திறக்காது – ஏனெனில் வேறொரு கதவை திறப்பது இந்த சக்திதான்.
நீ ஒரே பெண்ணை தொடர்ந்து பிடித்து வைத்துக் கொண்டிருப்பதில் நீ அவளை விரும்பாமல், அவளுடன் இருப்பதில் நன்றாக உணராமல் இருந்தால் அது ஒரு தொடர் பிரச்னையாகத்தான் இருக்கும். அது உனக்கு மட்டும் கெடுதலல்ல, அவளுக்கும் கெடுதல்தான். நீ உன்னிடம் பரிவு காட்டவில்லையென்றால் பரவாயில்லை, அவளிடமாவது பரிவு காட்டு. அவளிடமாவது மனித்தன்மையுடன் நடந்து கொள். நீ அவளை குறுக்குவது மட்டுமல்ல, உன்னையும்தான் குறுக்கிக் கொள்கிறாய். துன்பம் தரும் உறவு எதுவாக இருந்தாலும் அது இருவரையும்தான் பாதிக்கும்.
இந்த உறவு மட்டுமல்ல, நீ இந்த உறவில் தொடர்ந்து இருந்தால் அது வருங்காலத்து உறவையும் பாதிக்கும். இது உனது கடந்தகாலத்தின் பாகமாக மாறி விடுவதால் அது பாதிக்கிறது. அது உன்னைச் சுற்றிக் கொண்டிருக்கும். நீ இதுபோன்ற பெண்ணையே கண்டுபிடித்து, இதுபோன்ற சிக்கலில் மறுபடி மறுபடி மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாகிறது. இது உனது பழக்கமாகிவிடுகிறது.
நீ எந்த தொடர்பாவது நன்றாக இல்லை என்பதை உணர்ந்தால் நான் சொல்வது நீ அதிலிருந்து வெளியே வந்துவிடு, அதிலிருந்து வெளியே குதித்துவிடு. ஒரு வினாடி கூட வீணாக்காதே.
சரியாக செய்தலும் முழுமையாக இருத்தலும்
சரியாக செய்தல் என்ற இந்த மனோபாவமே மக்களை பைத்தியமாக்குகிறது. சரியாக செய்ய வேண்டும் என்பவன் கிறுக்கனாகத்தான் இருக்க வேண்டும். அவன் சரியாக இல்லாதவரை அவனால் வாழ்வை அனுபவிக்க முடியாது. மேலும் சரியாக இருப்பது என்பது ஒருபோதும் நடக்காது. அது இயல்பல்ல. முழுமைதான் சாத்தியம், சரியாக இருத்தல் என்பது சாத்தியமல்ல.
சரியாக இருத்தலுக்கும் முழுமையாக இருப்பதற்க்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. சரியாக செய்தல் என்பது எங்கோ எதிர்காலத்தில் வைக்கும் குறிக்கோள். முழுமை என்பது இப்போது இங்கே உணரப்படும் அனுபவம். முழுமை என்பது வாழ்வின் லட்சியமல்ல. அது வாழ்க்கை வழி. நீ உன் முழு மனதோடு ஒரு செயலில் ஈடுபட்டால் நீ முழுமையாக இருக்கிறாய். முழுமை மொத்தத்தை, ஆரோக்கியத்தை, ஒழுங்கை கொண்டு வரும்.
சரியாக செய்பவன் முழுமையை முற்றிலுமாக மறந்து விடுவான். அவனுக்கு தான் எப்படி இருக்க வேண்டுமென்பதில் சில கருத்துக்கள் இருக்கும், அதை அடைய காலம் தேவைப்படும். அது உடனடியாக நிகழாது, நாளை, அல்லது நாளை மறுநாள், அல்லது இந்த பிறவியில், அல்லது மறு பிறவியில் ஆகவே வாழ்வு தள்ளிப்போடப்படுகிறது.
கடந்த காலத்தில் மனிதன் வாழவே இல்லை. அவனது வாழ்வு தள்ளிப்போடுதலாகவே மாறி விட்டது. நான் எதிர்காலத்தை பற்றிய எந்த கருத்தும் இன்றி இப்போது இங்கே வாழச் சொல்லித்தருகிறேன். எதிர்காலம் நீ இப்போது வாழ்வதிலிருந்து பிறக்க வேண்டும். நிகழ்காலம் முழுமையாக இருந்தால் எதிர்காலம் மேலும் முழுமையானதாக இருக்கும். முழுமையிலிருந்து மேலும் முழுமை பிறக்கும்.
ஆனால் எதிர்காலத்தில் எப்படி இருக்கவேண்டுமென உனக்கு சில கருத்துக்கள் இருப்பதால் நீ நிகழ்காலத்தில் பகுதியாகத்தான் வாழ்கிறாய். ஏனெனில் உனது முழு கவனமும் எதிர்காலம்தான். உனது கண்கள் எதிர்காலத்தை பார்க்கின்றன. நீ உண்மையுடன் நிகழ்காலத்துடன் தொடர்பை இழந்து விட்டாய். நாளை உன்னுடன் தொடர்பில்லாத இந்த நிஜத்திலிருந்துதான் பிறக்கும். நாளை இன்றிலிருந்து பிறக்கிறது, ஆனால் உனக்கு இன்றுடன் தொடர்பில்லை.
டெவில் என்ற ஆங்கில வார்த்தை மிகவும் அழகானது – devil – அதை பின்புறத்திலிருந்து நீ படித்தால் அது வாழ்வது என்றாகும். வாழ்ந்தது இறைமையாகும், வாழாதது டெவிலாகும்.
வாழ்ந்தது தெய்வீகமாகும். வாழாதது விஷமாகும். இன்றை நீ தள்ளிப்போட்டால் வாழாதது உன்னைச் சுற்றி சுமையாக மாறும். நீ அதை வாழ்ந்து விட்டால் அதிலிருந்து நீ விடுபட்டு விடலாம். அது உன்னை வேட்டையாடாது, அது உன்னை இம்சை பண்ணாது.
ஆனால் இன்று வரை மனிதனுக்கு வாழ கற்றுக் கொடுக்கப்பட வில்லை. நம்பிக்கைதான் கொடுக்கப்பட்டுள்ளது. வாழும்வகையில் நாளை விஷயங்கள் நிகழ்ந்து விடும், நாளை நீ வாழலாம், வாழ்க்கை நாளை வந்துவிடும், நாளை நீ கௌதம புத்தராகவோ, ஜீஸஸ் ஆகவோ மாறலாம் என்று நம்பிக்கை மட்டுமே தரப்பட்டுள்ளது.
நீ ஒருக்காலும் ஜீஸஸ் அல்லது கௌதமபுத்தர் என ஆகப் போவதில்லை. நீ நீயாகத்தான் இருக்கப் போகிறாய். நீ யாருடைய நகலாகவும் மாறப்போவதில்லை. மற்றொரு புத்தராகவோ மற்றொரு ஏசுவாகவோ மாறுவது அசிங்கமானது. அது மனித இனத்துக்கு கேவலம். மனிதனுக்கென்று ஒரு மரியாதை உண்டு, ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே உரித்தான தன்மை உள்ளது.
ஒரு குறிப்பிட்ட விதமாக வாழ வேண்டும் என்பது பழைய கருத்து. பழைய முறை தனித்தன்மை கொண்டவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அது குறிப்பிட்ட விதமாக வாழ்வதற்க்கே ஆனது. அது ஒருவிதமான அடிமைத்தனத்தை உருவாக்குகிறது.
நான் தனித்தன்மையை போதிக்கிறேன், தனித்துவமான தனித்தன்மையை சொல்கிறேன். உன்னை நேசி, உனக்கு மரியாதை கொடு. ஏனெனில் உன்னைப் போன்ற ஒருவன் இதுவரை இருந்தது இல்லை, இருக்கப் போவதுமில்லை. பிரபஞ்சம் ஒருபோதும் மறுபடி செய்வது இல்லை. நீ தனித்துவமானவன். ஒப்பிட முடியாத அளவு தனித்துவமானவன். நீ அடுத்தவரைப் போல இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீ காப்பியடிப்பவனாக இருக்க வேண்டிய தேவையில்லை. நீ உன்னைப் போலவே, உனது இருப்பில் இருக்க வேண்டும். நீ உனது விஷயங்களைத்தான் செய்ய வேண்டும்.
நீ உன்னை ஏற்றுக் கொண்டு உன்னை மதிக்க ஆரம்பித்தால் நீ முழுமையடைவாய். பின் அங்கே உன்னை பிரிக்க ஏதுமிருக்காது. அங்கே பிளவை உண்டாக்க எதுவுமில்லை.
Source : The Book of Wisdom
ஆணாதிக்க மனம் சிக்கலானது
ஒரு பெண்ணை நேசித்தால் நேசி. ஆணாதிக்க மனப்பான்மை விளையாட்டை விளையாடாதே. பெண் அருகில் வர இந்த ஆண் விரும்பினால்கூட அது வேண்டாம் என்றே சொல்லும், ஏனெனில் எனக்கு யாரும் தேவையில்லை, எனக்கு நானே போதும். உனக்கு நான் வேண்டும் என்றால் நீ வரலாம். ஆனால் எனக்கு நீ தேவையில்லை என்பது போல நடிக்கும் இந்த ஆணாதிக்க மனம் அத்தகையது.
இது மடத்தனம். நீ ஒரு பெண்ணை ஏமாற்ற முடியாது. அது தேவையில்லாமல் பிரச்னையை உருவாக்கும். வாழ்க்கையே அதனளவில் போதுமான அளவு சிக்கலானது, அதை மேலும் சிக்கலாக்காதே. எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிமையாக்கு. ஆம் என்றால் ஆம் என்று சொல், இல்லை என்றால் இல்லை என்று சொல். குழப்பத்தை உருவாக்காதே.
வேலையில் முழுமையாக இருத்தலும் மற்றும் வேலையில் மூழ்குதலும்
கேள்வி – வேலையிலேயே முழ்கி கிடப்பவனுக்கும் தங்களது வேலையில் முழுமையாக இருப்பவனுக்கும் என்ன வித்தியாசம்
இந்த வேற்றுமை மிகப் பெரிது. வேலையில் முழ்கி இருப்பவன் தனது வேலையில் முழுமையாக இல்லை. வேலை வெறி பிடித்தவன் வேலைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறான். அவனால் மௌனமாக அமைதியாக உட்கார முடியாது. எதையாவது செய்தாக வேண்டும். அது தேவையா இல்லையா அது கேள்வியே கிடையாது.
எப்படி மக்கள் போதைக்கு அடிமையாகி இருக்கிறார்களோ அது போல வேலை வெறி பிடித்தவன் வேலைக்கு அடிமையாகி கிடக்கிறான். வேலைதான் அவர்களது போதை. அது அவர்களை ஆக்ரமித்திருக்கிறது. அது அவர்களது கவலையிலிருந்து அவர்களை நகர்த்தி வைத்திருக்கிறது. அது அவர்களது பதட்டத்திலிருந்து அவர்களை நகர்த்தி வைத்திருக்கிறது. அது மற்ற போதைகளைப் போலவே உனது கவலை, பயம், பதட்டம், வேதனை ஆகியவற்றை முழ்கடித்து விடுகிறது.
அதனால் வேலைவெறி பிடித்தவர்கள் தியானத்திற்கு எதிரானவர்கள். ஒவ்வொரு பழக்கமும் நீ தியானிப்பவனாக மாறுவதை தடுக்கக் கூடியது. எல்லா பழக்கங்களும் விட வேண்டியவையே.
உனது வேலையில் நீ முழுமையாக இருப்பது என்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம். வேலையில் முழுமையாக இருப்பது ஒரு பழக்கமல்ல. அது ஒருவிதமான தியானம். நீ உனது வேலையில் முழுமையாக இருக்கும் போது உனது வேலை நேர்த்தியாக அமையக்கூடிய சாத்தியமுள்ளது. அந்த நேர்த்தியான வேலையின் மூலம் ஒரு சந்தோஷம் உன்னுள் எழும்.
உன்னால் வேலையில் முழுமையாகவும் நேர்த்தியாகவும் இருக்க முடிந்தால், வெறுமனே உட்கார்ந்திருக்கவும் முழுமையான மௌனத்தில் அமரவும் உன்னால் முடியும். எப்படி முழுமையாக இருப்பது என்று உனக்குத் தெரியும். உனது கண்களை மூடிக் கொண்டு முழுமையாக உள்ளே இருப்பாய். முழுமையாக வாழ்வது எப்படி என்பதன் ரகசியம் உனக்குத் தெரியும்.
அதனால் வேலையில் முழுமையாக இருப்பது தியானத்தில் உதவி செய்யும். வேலை வெறி பிடித்தவனால் தியானம் செய்ய முடியாது. அவனால் ஒரு சில நிமிடங்கள் கூட அமைதியாக உட்கார்ந்திருக்க முடியாது. அவன் அமைதியற்று இருப்பான். அவன் தனது நிலையை மாற்றிக் கொண்டேயிருப்பான். அவன் எதையாவது செய்வான். இந்த பாக்கெட்டில் அல்லது அந்த பாக்கெட்டில் பார்ப்பான். அதில் எதுவும் இல்லையென அவனுக்குத் தெரியும். அவன் தனது கண்ணாடியை எடுத்து சுத்தம் செய்து போட்டுக் கொள்வான். அது சுத்தமாகத்தான் இருக்கிறதென்று அவனுக்குத் தெரியும்.
தனது வேலையில் முழுமையாக இருக்கும் மனிதன் வேலை வெறி பிடித்தவனல்ல. அவன் முழுமையாக இருப்பான், எதிலும் முழுமையாக இருப்பான். அவன் காலாற நடந்தாலும் சரி, தூங்கினாலும் சரி, அதில் அவன் முழுமையாக இருப்பான். அவன் நடக்கும் போது வெறுமனே நடப்பது மட்டுமே வெறெதுவும் இல்லை. வேறு நினைப்பு எதுவும் இல்லை. கற்பனை செய்வதில்லை. தூங்கும் போது கனவு காண்பதில்லை. தூங்கும் போது தூக்கம் மட்டுமே. சாப்பிடும்போது சாப்பிடமட்டுமே செய்வான்.
நீ அப்படி செய்வதில்லை. நீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய், உனது மனம் ஆயிரத்தோரு இடங்களுக்கு போய் வருகிறது.
நான் பார்க்கிறேன். ஒரு படுக்கையில் இரண்டு பேர் மட்டும் இருப்பதில்லை. ஒரு கூட்டமே இருக்கிறது. கணவன் மனைவியுடன் கூடிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் சோபியா லாரன்ஸை நினைத்துக் கொண்டிருக்கிறான். மனைவி தனது கணவனுடன் கூடுவதில்லை. அவள் முகம்மது அலியை நினைத்துக் கொள்கிறாள். ஒவ்வொரு படுக்கையிலும் நீ ஒரு கூட்டத்தை காணலாம். ஒருவரும் எந்த செயலிலும் முழுமையாக இருப்பதில்லை. – கூடுவதிலும் கூட.
செய்யும் செயலை முழுமையாக செய். இல்லாவிடில் செய்யாதே. முழுமையாக இரு. – அப்போது உனது வாழ்வு முழுவதுமே தியானமாகி விடும்.
CHIRSTIYANITY : THE DEADLIEST POISON & ZEN : THE ANTIDOTE TO ALL POISONS>
ஒரு கவிதை எழுது
எப்போதெல்லாம் நீ சோர்வாக உணர்கிறாயோ, எப்போதெல்லாம் இந்த உலகத்தினால் விரக்தியடைகிறாயோ – இந்த உலகத்தினால் விரக்தியடைவது எல்லோருக்கும் பல முறை நடக்கக்கூடியதே, அது இயற்கையானது – இந்த உலகம் மிகவும் பளு தருவது,சலிப்பைத் தருவது, திரும்ப திரும்ப முக்கியமில்லாதை செய்வதால் வரும் மனசோர்வைத் தருவது. அதனால் எப்போதெல்லாம் நீ இப்படி உணர்கிறாயோ அப்போதெல்லாம் செய்யக் கூடிய மிக சிறப்பான செயல் என்னவென்றால் எதையாவது படைப்பதுதான். அதில் மூழ்கி விடு. நீ அதிலிருந்து வெளியே வரும் போது புத்துணர்வு பெற்றவனாய், திரும்பவும் சக்தி பெற்றவனாய், ஆக்கபூர்வமுள்ளவனாய் வெளி வருவாய்.
கவிதை எழுதுவது தூங்குவதை விட அதிக சக்தி தரும்..... 5 நிமிடங்கள் கவிதை எழுதுவதில் கவனத்தை செலுத்தினால் அது 8 மணி நேரம் தூங்கி எழும்போது இருப்பதை விட அதிக ஊக்கம் தரும்.
கபீர் - கமால் : ஓஷோ
கபீரைப் பற்றிய ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது. கபீர் ஒரு ஞானி, ஆனால் ஏழை. அவரது வேறுபட்ட நடவடிக்கைகளால் ஒவ்வொரு நாளும் அவரது மனைவியும் மகனும் சங்கடத்துள்ளானார்கள். ஏனெனில் ஒவ்வொரு நாள் காலையும் நூற்றுக்கணக்கான சீடர்கள் வருவார்கள். கபீர் ஆடுவார், தானே எழுதிய பாடலை பாடுவார். அவர் படித்தவரல்ல. அவர் எந்த சொற்பொழிவும் தருவதில்லை. ஆனால் அவர் பாடுவார், ஆடுவார். அவரது பாடல்கள் மிக ஆழ்ந்ததாக, அற்புதமானதாக, எளிமையான பாடல்களாக இருக்கும். பாடிக் கொண்டே அவர் ஆடுவார். கூட்டம் முழுவதும் அவருடன் சேர்ந்து ஆடும், பாடும்.
இது மணிக்கணக்கில் தொடரும். பின் மதிய உணவு நேரம் வந்துவிடும். பின் கபீர் ஒவ்வொருவரிடமும் “போய் விடாதீர்கள், இந்த ஏழையின் வீட்டில் சாப்பிட்டுவிட்டுதான் போக வேண்டும்” என்று கூறுவார். மனைவியும் மகனும் சங்கடத்துள்ளாவார்கள். ஒவ்வொருநாளும் அத்தனை பேருக்கான உணவுக்கு எங்கே போவது ? இவர்கள் மூவருக்கான உணவுக்கு சமாளிப்பதே பெரும்பாடு.
அவரது மகனும் ஒரு தனித்தன்மை வாய்ந்த மனிதன். அவன் அவன் வழியில் ஒரு குருவாகக் கூடியவன். ஆனால் அவன் கபீரிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவன். அவர்கள் இருவரும் ஒரு இடத்தில் கூட ஒத்துப் போனதேயில்லை. கபீர் கமால் மூலமாக மிகவும் சோர்ந்து போய்விட்டார். அவர், கமால் எனக்கு வந்து பிறந்ததால் எனது பாரம்பரியம் முடிந்தது. இவன் நான் அவனுக்கு கொடுக்கும் செல்வங்களை எடுத்துச் செல்ல மாட்டான் என்று எழுதினார். ஏனெனில் கமாலுக்கு என்று ஒரு தனி வழி இருந்தது. அவர்கள் ஒத்துப் போனதேயில்லை.
கமால் இந்த பாடலையும் நடனத்தையும் மடத்தனம் என்பான். அவன், மௌனமாக அமர்ந்து இருந்தால் ஏதாவது நிகழலாம் – எதற்கு தேவையில்லாமல் ஏகப்பட்ட சத்தம் போட்டு அக்கம் பக்கத்தாரை தொந்தரவு செய்ய வேண்டும் வயதான காலத்தில் சும்மாயிருக்காமல்......... உங்களால் மற்றவர்களும் அவர்கள் வயதானவர்களாக இருந்தால் கூட ஆட வேண்டி வருகிறது, அவர்கள் சோர்ந்து போகிறார்கள் என்று கூறுவான். அவன் ஒரு போதும் ஆடலிலும் பாடலிலும் பங்கெடுத்துக் கொண்டதேயில்லை. அவன், “மௌனமாக இருப்பது பாடுவதை விட சிறந்தது. இது தேவையேயில்லை. அமைதியாக உட்கார்ந்து இருக்கும்போது இதைவிட அழகான நடனத்தை நான் உணர்கிறேன்.” என்பான்.
ஒரு கட்டத்தில் மகனும் மனைவியும் கபீரிடம் “நீங்கள் மற்றவர்களை இங்கே சாப்பிட்டுவிட்டு போங்கள் எனக் கூறுவதை நிறுத்துங்கள். நாங்கள் இந்த நகரத்தில் உள்ள எல்லோரிடமும் கடன் வாங்கியாகிவிட்டது. இப்போது யாரும் நமக்கு எதுவும் கடன்தர தயாராக இல்லை. அவர்கள் எப்படி திருப்பித் தரப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். நம்மிடம் இப்போது வீட்டில் எதுவும் இல்லை. நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள் “என்று கூறினார்கள்.
கபீர், “அது இயலாத காரியம். ஆடி பாடி கொண்டாடிய பிறகு எனது வீட்டிற்கு வந்த மக்களுக்கு சாப்பாடு போடாமல் இருக்க முடியாது. என்னால் அப்படி செய்ய முடியாது. வழி கண்டு பிடியுங்கள். என்னடா பையன் ! நீ ஏதாவது ஒரு வழி கண்டு பிடிக்க முடியாதா ?என்று கேட்டார்.
கமால் “ நான் திருடனாவது ஒன்றுதான் வழி!” என்றான்.
கபீர், “அற்புதம்! நீ ஏன் இதை முன்பே யோசிக்கவில்லை.? என்றார்.
இதுதான் பிரபஞ்ச தன்னுணர்வு. திருடுவது கூட தவறில்லை. இந்தியாவில் கபீரை பின்பற்றும் மக்கள் – அவர்கள் மிகக் குறைந்த அளவில் தான் இருக்கிறார்கள். – இந்த கதையைப் பற்றி குறிப்பிடுவதில்லை. நான் அவரை பின்பற்றும் மக்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இந்த கதையை குறிப்பிட்டேன். உடனே தலைமை குரு என் காதில், தயவுசெய்து இந்த கதையை சொல்லாதீர்கள். ஏனெனில் இது எங்களை பிரச்னையில் கொண்டு போய்விடும். கபீர் இதில் திருடுவது சிறந்த ஐடியா என்று சொல்கிறார். என்று கிசுகிசுத்தார்.
ஆனால் கமால் உண்மையிலேயே ஒரு தனித்துவமான மனிதன். அதுதான் கமால் என்ற வார்த்தையின் பொருள். கமால் என்றால் அசாதாரணமான, தனித்துவமான என்று அர்த்தம். அவன் கபீர் அற்புதம் என்று சொன்னதால் அசந்து போய்விடவில்லை.
அவன், “சரி, இன்றிரவு நான் போய் திருடுகிறேன். ஆனால் நீங்களும் என்னுடன் வரவேண்டும். நான் என்னால் முடிந்த அளவு முயற்ச்சிக்கிறேன். எனக்கு உதவுங்கள். நான் திருடி தரும் பொருட்களை வெளியே நின்றவாறே வாங்கி கொண்டு வந்து வீடு சேர்த்துவிடுங்கள். இந்த அளவு நீங்கள் செய்தால் போதும்” என்றான்.
கபீர் “மிகவும் நல்லது” என்றார். அதன்படி அவர்கள் இரவு ஒரு பணக்காரனின் வீட்டிற்கு திருட சென்றனர். பின்புறத்தில் கமால் உள்ளே நுழைவதற்க்காக சுவரில் ஓட்டை போட்டான். கபீர் வெளியே உட்கார்ந்து மெதுவாக அவரது பாடலை பாடிக் கொண்டிருந்தார்.
கமால், “பாடுவதை நிறுத்துங்கள், மடத்தனமாக இருக்காதீர்கள். நாம் இங்கே துறவிகளல்ல. நாம் திருட வந்துள்ளோம்” என்றான்.
கபீர், “நாம் எங்கே இருந்தாலும் நாம் எப்படியோ அப்படிதான். நாம் என்ன செய்கிறோம் என்பது ஒரு பொருட்டல்ல. நீ உன் வேலையை செய்கிறாய். நான் என் வேலையை செய்கிறேன். நீ பொருட்களை கொண்டு வந்து கொடு, நான் எடுத்துச் செல்கிறேன். எனக்கு வயதாகிவிட்டது. இல்லாவிடில் நானும் உன்னுடன் வருவேன். “என்றார்.
கமால் உள்ளே சென்றான். அவன் இந்த விஷயத்தை கடைசி வரை பார்த்துவிடலாம் என முடிவு செய்தான். அவன் பொருட்களை திருடி கொண்டு வந்து துவாரத்தின் வழியே வெளியே போட்டுவிட்டு இவற்றை நீங்கள் எடுத்துச் செல்லுங்கள் என கபீரிடம் கூறிவிட்டு அவனும் அந்த துவாரத்தின் வழியே வெளியே வர முயற்சித்துக் கொண்டிருந்தான்.
அப்போது அந்த வீட்டிலுள்ள வேலையாட்கள் விழித்துக் கொண்டனர். சுவரை உடைக்கும் சத்தம், யாரோ பாடுவது போன்ற சத்தங்கள் மெலிதாக கேட்டன. மேலும் கமால் உள்ளே போனபின் கபீர், தான் எங்கே இருக்கிறோம் என்பதை முற்றிலுமாக மறந்துவிட்டார். அவர் சத்தமாக பாடி ஆட ஆரம்பித்துவிட்டார். எனவே எல்லோரும் விழித்துக் கொண்டு விட்டனர்.
அவர்கள் தேடியபடி வந்து உள்ளே பாதி வழியில் இருந்த கமாலின் கால்களை பிடித்துக் கொண்டனர். இந்த கதை மிகவும் வித்தியாசமானது. இது கற்பனையாக இருக்க முடியாது. கமால், “அப்பா,! என்னை பிடித்து விட்டார்கள். இந்த பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். உள்ளே என் கால்களை பிடித்துக் கொண்டு விட்டனர். போதுமான அளவு சிக்கலில் என்னை சிக்க வைத்து விட்டீர்கள். இதுவே கடைசி – வணக்கம். நான் சிறைக்குப் போகப் போகிறேன்.”என்றான்.
கபீர், “சிறைக்கா? தேவையில்லை. நான் ஒரு கத்தி வைத்திருக்கிறேன்” என்றார்.
கமால் “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டான்.
கபீர், “நான் உனது தலையை வெட்டி என்னுடன் எடுத்து சென்று விடுகிறேன். திருடன் யார் என்று யாருக்கும் தெரியாது.” என்று கூறினார்.
கமாலால் நம்பவே முடியவில்லை. அவன் இந்த விளையாட்டை கடைசி வரை விளையாடி பார்க்கலாம் என்று நினைத்தான். – ஆனால் இந்த கிழவன் அதை முடிவு வரை கொண்டு செல்கிறானே என்று யோசித்தான். ஆனாலும் கமால் ஒரு தீரமுள்ள மனிதன். எனவே அவன் “சரி.!எனது தலையை வெட்டி எடுத்து சென்று விடுங்கள் “என்றான். அவன் இது போல நடக்காது என்று நினைத்தான். ஆனால் கபீர் கமாலின் தலையை வெட்டி அவன் கொண்டு வந்து தந்த பொருட்களுடன் சேர்த்து வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார்.
உள்ளே இருந்தவர்கள் கமாலை உள்ளே இழுத்தனர். தலையில்லா முண்டத்தைக் கண்டு, இப்போது இது ஒரு பிரச்னை. யார் இவன் என்று ஆலோசித்தனர்.
ஒரு வேலையாள், “எனக்குத் தெரிந்த வரை இது கபீரின் மகன் கமால். என்னை தூக்கத்திலிருந்து எழுப்பிய குரல் கபீரினுடையது. அவர் வெளியே இருந்திருக்க வேண்டும். இது போன்ற ஒரு செயலில் அவர் ஈடுபட்டிருப்பது மிகவும் விசித்திரமானது. அவர் ஒரு ஞானி. அவரது சொந்த மகன் இது..... அவர் இவனது தலையை வெட்டி எடுத்து சென்று விட்டார் போல தெரிகிறது.” என்றான்.
அந்த வேலையாள் கபீரின் வீட்டில் ஒவ்வொரு நாள் காலையிலும் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்திற்கு சில நாட்கள் போவான். அவன் அந்த செல்வந்தரிடம், “ஒரு வேலை செய்யலாம். கபீரும் அவரது சீடர்களும் பிரார்த்தனை கூட்டத்திற்கு முன் குளிப்பதற்காக கங்கை கரைக்கு வரும் வழியில் உள்ள நால்ரோட்டில் இந்த உடலை தொங்க விடலாம்”என்று கூறினான்.
அந்த வீட்டின் சொந்தக்காரனான அந்த செல்வந்தன், “அதனால் என்ன நடக்கும்?” என்று கேட்டான். வேலையாள் “இதை மட்டும் செய்யுங்கள் அதில் ஒன்றும் தவறில்லை “என்றான். உடல் நால்ரோட்டில் தொங்க விடப்பட்டது. கபீர் குளித்துவிட்டு ஆடி பாடியபடி வரும்போது கமால் உடனடியாக தனது கரத்தை உயர்த்தி “இந்த மடத்தனத்தை நிறுத்துங்கள்!” என்றான்.
இப்படித்தான் அது கமால் என அடையாளம் காணப்பட்டது. நிச்சயமாக அது கமால்தான். அவர்கள் கபீரிடம் உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா என்று கேட்டனர்.
அவர் “தெரியுமே! ஏனெனில் அவனது தலை எனது வீட்டில் உள்ளது. நான் தான் வெட்டினேன்.” என்றார்.
அநத பணக்காரனால் அதை நம்பவே முடியவில்லை. அவன் “ஆனால் நீங்கள் ஒரு ஞானியாயிற்றே?” என்று கேட்டான்.
கபீர், “நான் ஒரு ஞானிதான். நான் ஞானி போல என்று இருந்திருந்தால் அந்த திருடும் செயலில் ஈடுபட்டிருக்க மாட்டேன். நான் ஒரு ஞானி போல என்று இருந்திருந்தால் நானே எனது மகனை கொன்றிருக்கமாட்டேன். நான் ஒரு ஞானிதான். எனது தன்னுணர்வின் உயர்வுக்கு முன் எதுவுமே ஒரு பொருட்டல்ல.
உனது பணம் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அது உன்னுடைய பணமல்ல. அப்படி இருக்கும்போது அதை எடுத்துச் செல்வதில் என்ன தவறு? எதுவுமே யாருடையதுமல்ல எனும்போது திருடுவதில் என்ன தவறு? மகன் எப்படியும் என்றாவது ஒருநாள் சாகத்தான் போகிறான். எனவே அவனது தலையை வெட்டியதில் தப்பென்ன ? மரணம் நிச்சியம் நிகழத்தான் போகிறது. என்னுடைய தன்னுணர்வின் முன் எதுவுமே தவறல்ல, எதுவுமே சரியல்ல. “ என்றார்.
Source : From Dardness To Light Che # 19 Q : # 1
Labels:
ஓஷோ,
குட்டிக் கதைகள்
மரணம் - ஓஷோ
Friday, April 27, 2012
இந்த ஓஷோ தமிழாக்கம் இங்கிருந்து எடுக்கப்பட்டது.
Read more...
ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டான். அவளுக்கு இளம் வயது, ஒரே ஒரு குழந்தை இருந்தது. அவள் தனது கணவனுடன் சிதையில் குதித்து உடன்கட்டை ஏற விரும்பினாள். ஆனால் இந்த சின்ன குழந்தை அதை தடுத்து நிறுத்தி விட்டது.
அவள் அந்த குழந்தைக்காக வாழ்ந்தாக வேண்டும்.
ஆனால் பின் இந்த சின்ன குழந்தையும் இறந்துவிட்டது. இப்போது பாதிப்பு அதிகமாகி
விட்டது. அவள் கிட்டத்தட்ட பைத்தியமாகி விட்டாள். "என்னுடைய குழந்தையை
திரும்பவும் உயிர்ப்பித்து தரக் கூடிய மருத்துவர் யாரேனும் இங்கு உண்டா"
நான் அவனுக்காகவே வாழ்ந்தேன். ஆனால் இப்போது எனக்கு எனது முழு வாழ்வும்
இருளாகி விட்டது." என்று கேட்டு அலைந்து திரிந்தாள்.
இந்தியாவில் நீ மறுமணம் செய்து கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக அந்த காலத்தில் அது சாத்தியமே இல்லாத ஒன்று. ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ள
முடியாது. ஆணின் ஆளுமை வெறி அத்தகையது. ' நான் இறந்து விட்டாலும்கூட..........
நீ சிரமபட்டாலும் சரி, ஆனால் நீ வேறு யாரையும் மறுமணம் செய்து கொள்ளக்
கூடாது.' அப்படிப்பட்ட பொறாமை.... இதுதான் 'இந்தியாவின் பாரம்பரியம்' என்று
அழைக்கப்படுகிறது.
அப்போது புத்தர் அந்த நகரத்தின் வழியே வந்தார். அதனால் மக்கள் அவளிடம், "எங்களுக்கு எந்த மருத்துவரையும் தெரியாது. ஆனால் புத்தர் வருகிறார். இது
ஒரு சிறந்த தருணம். நீ உனது குழந்தையை தூக்கிக் கொண்டு புத்தரிடம் செல்.
நீ இந்த குழந்தைக்காவே உயிர் வாழ்ந்தாய் என்பதைக் கூறி இப்போது இது
இறந்துவிட்டது என் மேல் கருணை காட்டுங்கள். இவனை உயிர்பித்து தாருங்கள்
நீங்கள் ஞானமடைந்தவர் என்று கேள்."என்றனர்.
ஆகவே அவள் புத்தரிடம் சென்றாள். இறந்த குழந்தையின் உடலை புத்தரின்
காலடியில் கிடத்தி, "இவனை உயிர்பித்து தாருங்கள். உங்களுக்கு வாழ்வின் அனைத்து
மர்மங்களும் தெரியும். நீங்கள் பிரபஞ்சத்தின் உச்சியை தொட்டு விட்டீர்கள். இந்த
ஏழை பெண்ணுக்காக ஒரு சிறிய அற்புதத்தை நீங்கள் செய்யக் கூடாதா?" என்று வேண்டினாள்.
புத்தர், "நான் செய்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை!" என்றார்.
அவள்,"அது எதுவானாலும் நான் செய்கிறேன்" என்றாள்.
புத்தர், "அப்படியென்றால் சரி.! நிபந்தனை இதுதான். இந்த நகரத்தைச் சுற்றி வந்து
யார் வீட்டில் இது வரை சாவு எதுவும் நடக்கவில்லையோ அந்த வீட்டிலிருந்து
கொஞ்சம் கடுகு விதைகள் வாங்கி வா." என்றார். அந்த கிராமத்தில் கடுகு பயிர்
அறுவடை செய்து வந்தனர். எனவே புத்தர் அவளிடம், "இந்த நகரத்தை சுற்றி
வந்து............. என்றார்.
அந்த பெண்ணால் இதை புரிந்து கொள்ள முடிய வில்லை. அவள் ஒரு வீட்டிற்கு சென்று கேட்டாள். அவர்கள், "கொஞ்சம் கடுகென்ன? புத்தரால் உனது குழந்தைக்கு
உயிர் தர முடியுமென்றால் ஒரு மாட்டு வண்டி நிறைய கடுகு வேண்டுமானாலும்
தருகிறோம். ஆனால் எங்களது குடும்பத்தில் ஒருவர் அல்ல, ஏகப்பட்ட பேர் இறந்து
போயிருக்கின்றனர். காலங்காலமாக நாங்கள் இங்கிருக்கிறோம். தாத்தாவுக்கு தாத்தா,
தாத்தாவுக்கு பாட்டி, தாத்தாவின் அப்பா, தாத்தாவின் அம்மா, தாத்தா, பாட்டி என எல்லோரும் இறந்து விட்டிருக்கின்றனர். நாங்கள் பலர் இந்த குடும்பத்தில்
சாவதை பார்த்திருக்கிறோம். ஆதலால் இந்த கடுகினால் பயன் இல்லை. 'எந்த
குடும்பத்தில் இது வரை சாவு விழ வில்லையோ' என்பதுதானே புத்தரின்
நிபந்தனை." என்றனர்.
அது ஒரு சிறிய கிராமம். அவள் ஒவ்வொரு வீட்டிற்க்கும் சென்று கேட்டாள். அந்த
கிராமத்தில் உள்ள எல்லோரும் கடுகு தர தயாராக இருந்தனர். "எவ்வளவு கடுகு வேண்டும் உனக்கு?" ஆனால் அந்த நிபந்தனை அதுதான் சாத்தியமற்றதாக இருந்தது.
எங்களுடைய குடும்பத்தில் பலர் இறந்திருக்கின்றனர்."
மாலையில் அவள் புத்தரின் நடவடிக்கை பற்றி உணர்ந்தாள். மேலும் அவளுக்கு
உண்மையையும் புரிந்தது. பிறக்கும் யாவரும் இறந்தே தீருவர் என்பது அவளுக்கு
புரிந்தது. குழந்தையை திரும்ப உயிர்பித்து என்ன பயன் அவனும் ஒருநாள் இறந்தே தீருவான். அதற்கு பதிலாக எது இறப்பதும் பிறப்பதும் இல்லையோ அந்த அழிவற்றதை
நானே தேட வேண்டியதுதானே. என்பதை உணர்ந்தாள்.
மாலையில் அவள் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். புத்தர், "எங்கே கடுகு?" என்று
கேட்டார். அவள் சிரித்தாள். காலையில் அவள் அழுதவண்ணம் வந்தாள், இப்போது சிரித்தாள். அவள், "நீங்கள் தந்திரம் செய்து விட்டீர்கள், பிறக்கும் யாரும் இறக்கத்தான்
வேண்டும். இந்த கிராமத்தில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே யாரும் இறக்காத
குடும்பமே கிடையாது. அதனால் நான் எனது மகனை உயிர்பித்துத் தர கேட்கப்
போவதில்லை, என்ன பயன்? - சில தினங்களுக்குப் பிறகு, அல்லது சில நாட்களுக்குப் பிறகு, அல்லது சில வருடங்களுக்குப் பிறகு அவன் திரும்பவும் இறந்துவிடுவான். வாழும் அத்தனை வருடங்களும் அவன் துயரத்திலும் துன்பத்திலும் எல்லா விதமான
வேதனைகளிலும் இருப்பான். அவனை திரும்பவும் வாழ்வுக்கு கொண்டு வராத உங்களது கருணை மிகவும் பெரியது.
குழந்தையை மறந்து விடுங்கள். எனக்கு தீட்சை கொடுங்கள். பிறப்பும் இறப்பும் நிகழாத
அழிவற்ற, அந்த உலகத்திற்கு நான் செல்ல எனக்கு தியானமென்னும் வழி காட்டுங்கள்," என்றாள்.
புத்தர், "நீ மிகவும் புத்திசாலியான பெண். நீ அதை உடனே புரிந்து கொண்டு விட்டாய்."
என்றார்.
நான் இதைத்தான் அதிசயம் என்றழைப்பேன், ஜீஸஸ் லசாரஸை உயிர்பித்ததை நான்
அதிசயம் என்று கூற மாட்டேன். அது பார்ப்பதற்கு அதிசயம் போல தோன்றலாம், ஆனால் தோன்றுவதெல்லாம் உண்மை அல்ல. நான் புத்தரின் நடவடிக்கையைத் தான்
அதிசயம் என்று கூறுவேன். எல்லோரும் இறந்து போகத் தான் போகிறார்கள். அதில்
எந்த வித்தியாசமும் இல்லை. பிறப்பிலிருந்தும் இறப்பிலிருந்தும் ஒருவர் வெளியே
வர வேண்டும்.
புத்தர் அந்த பெண்ணிற்கு தீட்சை கொடுத்தார். அவள் புத்தரின் ஞானமடைந்த
சீடர்களில் ஒருவராக விளங்கினாள். அவளது தேடுதல் அத்தகையது..... அவளுக்கு
என்னுடைய கணவன் இறந்து விட்டான், என்னுடைய குழந்தை இறந்து விட்டது, இப்போது என்னுடைய முறை, எந்த கணமும் நான் இறப்புக்கு பலியாகி விடலாம்.
நேரமில்லை, எந்த நேரம் மரணம் வரும் என்று எனக்குத் தெரியாது. எனவே நான்
நேரமில்லை, எந்த நேரம் மரணம் வரும் என்று எனக்குத் தெரியாது. எனவே நான்
முழுமையாக இந்த தேடுதலில் ஈடுபடவேண்டும், புத்தர் என்னிடம், 'உள்ளே செல். உன்னுடைய இருப்பின் மையத்திற்குச் செல், நீ பிறப்பையும் இறப்பையும் தாண்டி செல்வாய்.' என்று கூறியுள்ள படியால் நான் தேடி சென்றடைய வேண்டும் என்பதை அவள் அறிந்திருந்தாள்.
இதைதான் நான் ஆணித்தரமான தேடுதல் என்றழைக்கிறேன். எல்லா பிரச்சனைகளையும் வேரறுத்து விடுவது.
CHRISTIANITY : THE DEADLIEST POISON and ZEN : THE ANTIDOTE to ALL POISONS ch. # 2 475
Labels:
ஓஷோ,
குட்டிக் கதைகள்
உடலின் அடிப்படை - ஓஷோ
Thursday, April 26, 2012
உடலின் அடிப்படை
இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவருக்கு கவனக்குவிப்பு உதவி செய்யும், மற்றவருக்கு தளர்வு உதவி செய்யும். இவர்களின் வழிமுறை வேறானவை.
தளர்வு முறையில் நீ வெறுமனே ஓய்வாக எதன்மீதும் கவனம் செலுத்தாமல் -கவனக்குவிப்புக்கு நேர் எதிர் மாறான முறையில் - தளர்வு கொள்.
எப்போது - இரவு, தூங்கப் போவதற்கு முன்
காலம் - 20 நிமிடங்கள்
ஒளி - ஒளி குறைவாக அல்லது இருட்டு
உடை - இறுக்கி பிடிக்காததாக அப்போதுதான் எந்த தடையும் இருக்காது
முதல் படி - பதட்டத்தை வெளியேற்றுதல்
உனது நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொள். இதில் வசதி மிகவும் முக்கியம்.
தளர்வு பெற ஒருவர் ஓய்வாக, வசதியாக உணர்வது மிகவும் அவசியம். எந்த
நிலையில் அமர பிரியப்படுகிறாயோ அந்த நிலையில் அமர்ந்து கொள். கண்களை மூடி
உடலை தளர்வு கொள்ளச்செய். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உள்ளே
உணர்ந்து பார். எங்கே பதட்டம் இருக்கிறதென்று பார். முழங்காலில் பதட்டத்தை
உணர்ந்தால், அந்த இடத்தை தளர்வு செய். முழங்காலைத் தொட்டு, தயவுசெய்து
தளர்வு கொள் என்று சொல்.
பல இடங்களில் நீ பதட்டத்தை உணர்வாய். அதை முதலில் விடுவிக்க வேண்டும்.
இல்லாவிடில் உடலால் தளர்வை உணர முடியாது. உடலால் தளர்வை உணர முடியா விட்டால் மனதால் தளர்வு கொள்ள முடியாது. ஏதாவது பதட்டம் தோள்பட்டையில்
இருப்பதாக நீ உணர்ந்தால் இந்த இடத்தை தொட்டு, தளர்வு கொள் என்று சொல்.
எங்கெல்லாம் உடலில் பதட்டத்தை உணர்கிறாயோ அந்த இடத்தை கருணையோடும்
அன்போடும் தொட்டு உணரு. உனது உடல் உனது சேவகன்.
இதற்கு உனக்கு 5 நிமிடங்கள் பிடிக்கும், பின் நீ ஓய்வாக, தளர்வாக உணர்வாய்.
இரண்டாவது படி - இப்போது உனது உணர்வை உனது சுவாசத்திற்கு கொண்டு வா.
சுவாசத்தை தளர்வாக செய்.
உடல் நமது வெளிப்பாகம், இருப்பு நமது உள்பகுதி - சுவாசம் இரண்டிற்க்கும் இடையே
பாலம். அதனால்தான் சுவாசம் தளர்வு கொள்ள அனுமதிப்பது மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தது.
ஆகவே உனது உடல் தளர்வு கொண்ட பின் கண்களை மூடி உனது சுவாசத்தைப்
பார். அதையும் தளர்வாகச் செய். சுவாசத்துடன் ஒரு சிறிது தொடர்பு கொண்டு, தளர்வாக இரு, இயல்பாக போய்வா என்று சொல். நீ, தளர்வாக இரு என்று
சொல்லும் கணத்தில் ஒரு சிறிய மெலிதான குலுக்கல் ஏற்படுவதை நீ உணரலாம்.
அதனால் உன்னுடைய சுவாச முறையிடம், 2 அல்லது 3 முறை தளர்வு கொள்
என்று சொல். பின் மௌனமாக அமர்ந்திரு. உனது சுவாசமும் முழுமையாக தளர்வு
கொண்ட பின் அங்கே மெலிதான குலுக்கல் ஒன்று ஏற்படும்.
மூன்றாவது படி - ஒன்று
இப்போது ஒவ்வொரு வெளியேறும் சுவாசத்துடனும் ஒன்று என்று சொல். சுவாசத்தை
உள்ளிழுக்கும் போது எதையும் சொல்ல வேண்டியதில்லை. அடுத்த வெளியேறும்
சுவாசத்தில் ஒன்று என்று கூறு. நீ ஒன்று என்று கூறும் தருணத்தில் இந்த பிரபஞ்சத்தை ஒரே முழுமையாக உணரு.அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒன்று என்று சொல்லுவதே போதுமானது.
ஒரு வாரத்திற்க்குள் உன்னால் உனது உடலுடன் தொடர்பு கொள்ள முடியும். உனது
உடலுடன் உனக்கு தொடர்பு ஏற்பட்டு விட்டால் பின் எல்லாமும் எளிதாகி விடும்.
உடலை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை, சம்மதிக்க வைத்துவிட முடியும்.
ஒருவர் தனது உடலுடன் சண்டையிட வேண்டியதில்லை - அது அசிங்கமானது, வன்முறையானது, ஆக்ரோஷமானது, எந்த வகையான பிரிவினையும் மேலும்
மேலும் அதிக பதட்டத்தைத் தான் கொண்டு வரும். ஆகவே நீ எந்த வகையான
பிரிவினையிலும் இருக்க வேண்டிய தேவையில்லை - வசதியாக இருப்பதுதான்
ஒரே விதிமுறை.
ஆகவே ஏழு நாட்கள்..... ஆரம்பத்தில் இது சிறிது மடத்தனமாகத் தோன்றலாம்.
நமது உடலுடன் பேச, பழக நமக்கு சொல்லித்தரப் படவில்லை. இதன் மூலம்
அற்புதங்கள் நிகழலாம். நாம் அறியாமலேயே அவைகள் நிகழ்ந்துகொண்டுதான்
இருக்கின்றன.
நீ கோபம் கொள்ள விரும்பும் போது, அல்லது கோபம் கொள்ளும்போது உடல்
ஒத்துழைக்க வில்லையென்றால் உன்னால் கோபப் பட முடியாது. ஒரு வகையான
விதிமுறை பின்பற்றப்பட வேண்டும், சில அமிலங்கள் சுரக்கப்பட வேண்டும்,
உனது கண்கள் சிவக்க வேண்டும், முகம் சிவக்க வேண்டும், உனது கைகள்
அடிப்பதற்கோ, கொல்வதற்கோ, குத்துவதற்கோ தயாராக வேண்டும். நீ
கத்துவதற்கோ கீச்சிடுவதற்கோ தயாராக வேண்டும், உனது உடல் ஒத்துழைப்பு தர
வில்லையென்றால் எதுவும் சாத்தியமில்லை. ஆகவே முதல் விஷயம் உடலுடன்
ஒரு ஒத்துழைப்பு உருவாக்கிக் கொள்வதுதான்.
The Great Nothing
Subscribe to:
Posts (Atom)