கபீர் - கமால் : ஓஷோ

Sunday, April 29, 2012


இந்த ஓஷோ தமிழாக்கம் இங்கிருந்து எடுக்கப்பட்டது.  

கபீரைப் பற்றிய ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது. கபீர் ஒரு ஞானி, ஆனால் ஏழை. அவரது வேறுபட்ட நடவடிக்கைகளால் ஒவ்வொரு நாளும் அவரது மனைவியும் மகனும் சங்கடத்துள்ளானார்கள். ஏனெனில் ஒவ்வொரு நாள் காலையும் நூற்றுக்கணக்கான சீடர்கள் வருவார்கள். கபீர் ஆடுவார், தானே எழுதிய பாடலை பாடுவார். அவர் படித்தவரல்ல. அவர் எந்த சொற்பொழிவும் தருவதில்லை. ஆனால் அவர் பாடுவார், ஆடுவார். அவரது பாடல்கள் மிக ஆழ்ந்ததாக, அற்புதமானதாக, எளிமையான பாடல்களாக இருக்கும். பாடிக் கொண்டே அவர் ஆடுவார். கூட்டம் முழுவதும் அவருடன் சேர்ந்து ஆடும், பாடும்.
 
இது மணிக்கணக்கில் தொடரும். பின் மதிய உணவு நேரம் வந்துவிடும். பின் கபீர் ஒவ்வொருவரிடமும் போய் விடாதீர்கள், இந்த ஏழையின் வீட்டில் சாப்பிட்டுவிட்டுதான் போக வேண்டும் என்று கூறுவார். மனைவியும் மகனும் சங்கடத்துள்ளாவார்கள். ஒவ்வொருநாளும் அத்தனை பேருக்கான உணவுக்கு எங்கே போவது ? இவர்கள் மூவருக்கான உணவுக்கு சமாளிப்பதே பெரும்பாடு.
அவரது மகனும் ஒரு தனித்தன்மை வாய்ந்த மனிதன். அவன் அவன் வழியில் ஒரு குருவாகக் கூடியவன். ஆனால் அவன் கபீரிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவன். அவர்கள் இருவரும் ஒரு இடத்தில் கூட ஒத்துப் போனதேயில்லை. கபீர் கமால் மூலமாக மிகவும் சோர்ந்து போய்விட்டார். அவர், கமால் எனக்கு வந்து பிறந்ததால் எனது பாரம்பரியம் முடிந்தது. இவன் நான் அவனுக்கு கொடுக்கும் செல்வங்களை எடுத்துச் செல்ல மாட்டான் என்று எழுதினார். ஏனெனில் கமாலுக்கு என்று ஒரு தனி வழி இருந்தது. அவர்கள் ஒத்துப் போனதேயில்லை.
 
கமால் இந்த பாடலையும் நடனத்தையும் மடத்தனம் என்பான். அவன், மௌனமாக அமர்ந்து இருந்தால் ஏதாவது நிகழலாம் – எதற்கு தேவையில்லாமல் ஏகப்பட்ட சத்தம் போட்டு அக்கம் பக்கத்தாரை தொந்தரவு செய்ய வேண்டும் வயதான காலத்தில் சும்மாயிருக்காமல்......... உங்களால் மற்றவர்களும் அவர்கள் வயதானவர்களாக இருந்தால் கூட ஆட வேண்டி வருகிறது, அவர்கள் சோர்ந்து போகிறார்கள் என்று கூறுவான். அவன் ஒரு போதும் ஆடலிலும் பாடலிலும் பங்கெடுத்துக் கொண்டதேயில்லை. அவன், மௌனமாக இருப்பது பாடுவதை விட சிறந்தது. இது தேவையேயில்லை. அமைதியாக உட்கார்ந்து இருக்கும்போது இதைவிட அழகான நடனத்தை நான் உணர்கிறேன். என்பான்.
 
ஒரு கட்டத்தில் மகனும் மனைவியும் கபீரிடம் நீங்கள் மற்றவர்களை இங்கே சாப்பிட்டுவிட்டு போங்கள் எனக் கூறுவதை நிறுத்துங்கள். நாங்கள் இந்த நகரத்தில் உள்ள எல்லோரிடமும் கடன் வாங்கியாகிவிட்டது. இப்போது யாரும் நமக்கு எதுவும் கடன்தர தயாராக இல்லை. அவர்கள் எப்படி திருப்பித் தரப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். நம்மிடம் இப்போது வீட்டில் எதுவும் இல்லை. நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
 
கபீர், அது இயலாத காரியம். ஆடி பாடி கொண்டாடிய பிறகு எனது வீட்டிற்கு வந்த மக்களுக்கு சாப்பாடு போடாமல் இருக்க முடியாது. என்னால் அப்படி செய்ய முடியாது. வழி கண்டு பிடியுங்கள். என்னடா பையன் நீ ஏதாவது ஒரு வழி கண்டு பிடிக்க முடியாதா ?என்று கேட்டார்.
 
கமால் “ நான் திருடனாவது ஒன்றுதான் வழி!” என்றான்.
 
கபீர், அற்புதம்! நீ ஏன் இதை முன்பே யோசிக்கவில்லை.? என்றார்.
 
இதுதான் பிரபஞ்ச தன்னுணர்வு. திருடுவது கூட தவறில்லை. இந்தியாவில் கபீரை பின்பற்றும் மக்கள் – அவர்கள் மிகக் குறைந்த அளவில் தான் இருக்கிறார்கள். – இந்த கதையைப் பற்றி குறிப்பிடுவதில்லை. நான் அவரை பின்பற்றும் மக்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இந்த கதையை குறிப்பிட்டேன். உடனே தலைமை குரு என் காதில், தயவுசெய்து இந்த கதையை சொல்லாதீர்கள். ஏனெனில் இது எங்களை பிரச்னையில் கொண்டு போய்விடும். கபீர் இதில் திருடுவது சிறந்த ஐடியா என்று சொல்கிறார். என்று கிசுகிசுத்தார்.
 
ஆனால் கமால் உண்மையிலேயே ஒரு தனித்துவமான மனிதன். அதுதான் கமால் என்ற வார்த்தையின் பொருள். கமால் என்றால் அசாதாரணமான, தனித்துவமான என்று அர்த்தம். அவன் கபீர் அற்புதம் என்று சொன்னதால் அசந்து போய்விடவில்லை.
அவன், சரி, இன்றிரவு நான் போய் திருடுகிறேன். ஆனால் நீங்களும் என்னுடன் வரவேண்டும். நான் என்னால் முடிந்த அளவு முயற்ச்சிக்கிறேன். எனக்கு உதவுங்கள். நான் திருடி தரும் பொருட்களை வெளியே நின்றவாறே வாங்கி கொண்டு வந்து வீடு சேர்த்துவிடுங்கள். இந்த அளவு நீங்கள் செய்தால் போதும் என்றான்.
 
கபீர் மிகவும் நல்லது என்றார். அதன்படி அவர்கள் இரவு ஒரு பணக்காரனின் வீட்டிற்கு திருட சென்றனர். பின்புறத்தில் கமால் உள்ளே நுழைவதற்க்காக சுவரில் ஓட்டை போட்டான். கபீர் வெளியே உட்கார்ந்து மெதுவாக அவரது பாடலை பாடிக் கொண்டிருந்தார்.
 
கமால், பாடுவதை நிறுத்துங்கள், மடத்தனமாக இருக்காதீர்கள். நாம் இங்கே துறவிகளல்ல. நாம் திருட வந்துள்ளோம் என்றான்.
 
கபீர், நாம் எங்கே இருந்தாலும் நாம் எப்படியோ அப்படிதான். நாம் என்ன செய்கிறோம் என்பது ஒரு பொருட்டல்ல. நீ உன் வேலையை செய்கிறாய். நான் என் வேலையை செய்கிறேன். நீ பொருட்களை கொண்டு வந்து கொடு, நான் எடுத்துச் செல்கிறேன். எனக்கு வயதாகிவிட்டது. இல்லாவிடில் நானும் உன்னுடன் வருவேன். என்றார்.
 
கமால் உள்ளே சென்றான். அவன் இந்த விஷயத்தை கடைசி வரை பார்த்துவிடலாம் என முடிவு செய்தான். அவன் பொருட்களை திருடி கொண்டு வந்து துவாரத்தின் வழியே வெளியே போட்டுவிட்டு இவற்றை நீங்கள் எடுத்துச் செல்லுங்கள் என கபீரிடம் கூறிவிட்டு அவனும் அந்த துவாரத்தின் வழியே வெளியே வர முயற்சித்துக் கொண்டிருந்தான்.
 
அப்போது அந்த வீட்டிலுள்ள வேலையாட்கள் விழித்துக் கொண்டனர். சுவரை உடைக்கும் சத்தம், யாரோ பாடுவது போன்ற சத்தங்கள் மெலிதாக கேட்டன. மேலும் கமால் உள்ளே போனபின் கபீர், தான் எங்கே இருக்கிறோம் என்பதை முற்றிலுமாக மறந்துவிட்டார். அவர் சத்தமாக பாடி ஆட ஆரம்பித்துவிட்டார். எனவே எல்லோரும் விழித்துக் கொண்டு விட்டனர்.
 
அவர்கள் தேடியபடி வந்து உள்ளே பாதி வழியில் இருந்த கமாலின் கால்களை பிடித்துக் கொண்டனர். இந்த கதை மிகவும் வித்தியாசமானது. இது கற்பனையாக இருக்க முடியாது. கமால், அப்பா,! என்னை பிடித்து விட்டார்கள். இந்த பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். உள்ளே என் கால்களை பிடித்துக் கொண்டு விட்டனர். போதுமான அளவு சிக்கலில் என்னை சிக்க வைத்து விட்டீர்கள். இதுவே கடைசி – வணக்கம். நான் சிறைக்குப் போகப் போகிறேன்.என்றான்.
 
கபீர், சிறைக்கா? தேவையில்லை. நான் ஒரு கத்தி வைத்திருக்கிறேன் என்றார்.
 
கமால் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டான்.
 
கபீர், நான் உனது தலையை வெட்டி என்னுடன் எடுத்து சென்று விடுகிறேன். திருடன் யார் என்று யாருக்கும் தெரியாது. என்று கூறினார்.
 
கமாலால் நம்பவே முடியவில்லை. அவன் இந்த விளையாட்டை கடைசி வரை விளையாடி பார்க்கலாம் என்று நினைத்தான். – ஆனால் இந்த கிழவன் அதை முடிவு வரை கொண்டு செல்கிறானே என்று யோசித்தான். ஆனாலும் கமால் ஒரு தீரமுள்ள மனிதன். எனவே அவன் சரி.!எனது தலையை வெட்டி எடுத்து சென்று விடுங்கள் என்றான். அவன் இது போல நடக்காது என்று நினைத்தான். ஆனால் கபீர் கமாலின் தலையை வெட்டி அவன் கொண்டு வந்து தந்த பொருட்களுடன் சேர்த்து வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார்.
 
உள்ளே இருந்தவர்கள் கமாலை உள்ளே இழுத்தனர். தலையில்லா முண்டத்தைக் கண்டு, இப்போது இது ஒரு பிரச்னை. யார் இவன் என்று ஆலோசித்தனர்.
ஒரு வேலையாள், எனக்குத் தெரிந்த வரை இது கபீரின் மகன் கமால். என்னை தூக்கத்திலிருந்து எழுப்பிய குரல் கபீரினுடையது. அவர் வெளியே இருந்திருக்க வேண்டும். இது போன்ற ஒரு செயலில் அவர் ஈடுபட்டிருப்பது மிகவும் விசித்திரமானது. அவர் ஒரு ஞானி. அவரது சொந்த மகன் இது..... அவர் இவனது தலையை வெட்டி எடுத்து சென்று விட்டார் போல தெரிகிறது. என்றான்.
அந்த வேலையாள் கபீரின் வீட்டில் ஒவ்வொரு நாள் காலையிலும் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்திற்கு சில நாட்கள் போவான். அவன் அந்த செல்வந்தரிடம், ஒரு வேலை செய்யலாம். கபீரும் அவரது சீடர்களும் பிரார்த்தனை கூட்டத்திற்கு முன் குளிப்பதற்காக கங்கை கரைக்கு வரும் வழியில் உள்ள நால்ரோட்டில் இந்த உடலை தொங்க விடலாம்என்று கூறினான்.
 
அந்த வீட்டின் சொந்தக்காரனான அந்த செல்வந்தன், அதனால் என்ன நடக்கும்?” என்று கேட்டான். வேலையாள் இதை மட்டும் செய்யுங்கள் அதில் ஒன்றும் தவறில்லை என்றான். உடல் நால்ரோட்டில் தொங்க விடப்பட்டது. கபீர் குளித்துவிட்டு ஆடி பாடியபடி வரும்போது கமால் உடனடியாக தனது கரத்தை உயர்த்தி இந்த மடத்தனத்தை நிறுத்துங்கள்!” என்றான்.
 
இப்படித்தான் அது கமால் என அடையாளம் காணப்பட்டது. நிச்சயமாக அது கமால்தான். அவர்கள் கபீரிடம் உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா என்று கேட்டனர்.
அவர் தெரியுமே! ஏனெனில் அவனது தலை எனது வீட்டில் உள்ளது. நான் தான் வெட்டினேன். என்றார்.
 
அநத பணக்காரனால் அதை நம்பவே முடியவில்லை. அவன் ஆனால் நீங்கள் ஒரு ஞானியாயிற்றே?” என்று கேட்டான்.
 
கபீர், நான் ஒரு ஞானிதான். நான் ஞானி போல என்று இருந்திருந்தால் அந்த திருடும் செயலில் ஈடுபட்டிருக்க மாட்டேன். நான் ஒரு ஞானி போல என்று இருந்திருந்தால் நானே எனது மகனை கொன்றிருக்கமாட்டேன். நான் ஒரு ஞானிதான். எனது தன்னுணர்வின் உயர்வுக்கு முன் எதுவுமே ஒரு பொருட்டல்ல.
 
உனது பணம் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அது உன்னுடைய பணமல்ல. அப்படி இருக்கும்போது அதை எடுத்துச் செல்வதில் என்ன தவறு? எதுவுமே யாருடையதுமல்ல எனும்போது திருடுவதில் என்ன தவறு? மகன் எப்படியும் என்றாவது ஒருநாள் சாகத்தான் போகிறான். எனவே அவனது தலையை வெட்டியதில் தப்பென்ன மரணம் நிச்சியம் நிகழத்தான் போகிறது. என்னுடைய தன்னுணர்வின் முன் எதுவுமே தவறல்ல, எதுவுமே சரியல்ல.  என்றார்.
 
Source : From Dardness To Light Che # 19 Q : # 1

2 comments:

Anonymous said...

எங்கு போனாலும் வெட்டுவது என்பது வந்துவிடுகிறதே

சிவாஜி said...

//எங்கு போனாலும் வெட்டுவது என்பது வந்துவிடுகிறதே//

அடடா... இந்த பதிவும் வெட்டியது தான்!!!

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP