மரணம் - ஓஷோ

Friday, April 27, 2012

இந்த ஓஷோ தமிழாக்கம் இங்கிருந்து எடுக்கப்பட்டது. 


ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டான். அவளுக்கு இளம் வயது, ஒரே ஒரு குழந்தை இருந்தது. அவள் தனது கணவனுடன் சிதையில் குதித்து உடன்கட்டை ஏற விரும்பினாள். ஆனால் இந்த சின்ன குழந்தை அதை தடுத்து நிறுத்தி விட்டது.
அவள் அந்த குழந்தைக்காக வாழ்ந்தாக வேண்டும்.

ஆனால் பின் இந்த சின்ன குழந்தையும் இறந்துவிட்டது. இப்போது பாதிப்பு அதிகமாகி
விட்டது. அவள் கிட்டத்தட்ட பைத்தியமாகி விட்டாள். "என்னுடைய குழந்தையை
திரும்பவும் உயிர்ப்பித்து தரக் கூடிய மருத்துவர் யாரேனும் இங்கு உண்டா"
நான் அவனுக்காகவே வாழ்ந்தேன். ஆனால் இப்போது எனக்கு எனது முழு வாழ்வும்
இருளாகி விட்டது." என்று கேட்டு அலைந்து திரிந்தாள்.

இந்தியாவில் நீ மறுமணம் செய்து கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக அந்த காலத்தில் அது சாத்தியமே இல்லாத ஒன்று. ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ள
முடியாது. ஆணின் ஆளுமை வெறி அத்தகையது. ' நான் இறந்து விட்டாலும்கூட..........
நீ சிரமபட்டாலும் சரி, ஆனால் நீ வேறு யாரையும் மறுமணம் செய்து கொள்ளக்
கூடாது.' அப்படிப்பட்ட பொறாமை.... இதுதான் 'இந்தியாவின் பாரம்பரியம்' என்று
அழைக்கப்படுகிறது.

அப்போது புத்தர் அந்த நகரத்தின் வழியே வந்தார். அதனால் மக்கள் அவளிடம், "எங்களுக்கு எந்த மருத்துவரையும் தெரியாது. ஆனால் புத்தர் வருகிறார். இது
ஒரு சிறந்த தருணம். நீ உனது குழந்தையை தூக்கிக் கொண்டு புத்தரிடம் செல்.
நீ இந்த குழந்தைக்காவே உயிர் வாழ்ந்தாய் என்பதைக் கூறி இப்போது இது
இறந்துவிட்டது என் மேல் கருணை காட்டுங்கள். இவனை உயிர்பித்து தாருங்கள்
நீங்கள் ஞானமடைந்தவர் என்று கேள்."என்றனர்.

ஆகவே அவள் புத்தரிடம் சென்றாள். இறந்த குழந்தையின் உடலை புத்தரின்
காலடியில் கிடத்தி, "இவனை உயிர்பித்து தாருங்கள். உங்களுக்கு வாழ்வின் அனைத்து
மர்மங்களும் தெரியும். நீங்கள் பிரபஞ்சத்தின் உச்சியை தொட்டு விட்டீர்கள். இந்த
ஏழை பெண்ணுக்காக ஒரு சிறிய அற்புதத்தை நீங்கள் செய்யக் கூடாதா?" என்று வேண்டினாள்.

புத்தர், "நான் செய்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை!" என்றார்.

அவள்,"அது எதுவானாலும் நான் செய்கிறேன்" என்றாள்.

புத்தர், "அப்படியென்றால் சரி.! நிபந்தனை இதுதான். இந்த நகரத்தைச் சுற்றி வந்து
யார் வீட்டில் இது வரை சாவு எதுவும் நடக்கவில்லையோ அந்த வீட்டிலிருந்து
கொஞ்சம் கடுகு விதைகள் வாங்கி வா." என்றார். அந்த கிராமத்தில் கடுகு பயிர்
அறுவடை செய்து வந்தனர். எனவே புத்தர் அவளிடம், "இந்த நகரத்தை சுற்றி
வந்து............. என்றார்.

அந்த பெண்ணால் இதை புரிந்து கொள்ள முடிய வில்லை. அவள் ஒரு வீட்டிற்கு சென்று கேட்டாள். அவர்கள், "கொஞ்சம் கடுகென்ன? புத்தரால் உனது குழந்தைக்கு
உயிர் தர முடியுமென்றால் ஒரு மாட்டு வண்டி நிறைய கடுகு வேண்டுமானாலும்
தருகிறோம். ஆனால் எங்களது குடும்பத்தில் ஒருவர் அல்ல, ஏகப்பட்ட பேர் இறந்து
போயிருக்கின்றனர். காலங்காலமாக நாங்கள் இங்கிருக்கிறோம். தாத்தாவுக்கு தாத்தா,
தாத்தாவுக்கு பாட்டி, தாத்தாவின் அப்பா, தாத்தாவின் அம்மா, தாத்தா, பாட்டி என எல்லோரும் இறந்து விட்டிருக்கின்றனர். நாங்கள் பலர் இந்த குடும்பத்தில்
சாவதை பார்த்திருக்கிறோம். ஆதலால் இந்த கடுகினால் பயன் இல்லை. 'எந்த
குடும்பத்தில் இது வரை சாவு விழ வில்லையோ' என்பதுதானே புத்தரின்
நிபந்தனை." என்றனர்.

அது ஒரு சிறிய கிராமம். அவள் ஒவ்வொரு வீட்டிற்க்கும் சென்று கேட்டாள். அந்த
கிராமத்தில் உள்ள எல்லோரும் கடுகு தர தயாராக இருந்தனர். "எவ்வளவு கடுகு வேண்டும் உனக்கு?" ஆனால் அந்த நிபந்தனை அதுதான் சாத்தியமற்றதாக இருந்தது.
எங்களுடைய குடும்பத்தில் பலர் இறந்திருக்கின்றனர்."

மாலையில் அவள் புத்தரின் நடவடிக்கை பற்றி உணர்ந்தாள். மேலும் அவளுக்கு
உண்மையையும் புரிந்தது. பிறக்கும் யாவரும் இறந்தே தீருவர் என்பது அவளுக்கு
புரிந்தது. குழந்தையை திரும்ப உயிர்பித்து என்ன பயன் அவனும் ஒருநாள் இறந்தே தீருவான். அதற்கு பதிலாக எது இறப்பதும் பிறப்பதும் இல்லையோ அந்த அழிவற்றதை
நானே தேட வேண்டியதுதானே. என்பதை உணர்ந்தாள்.

மாலையில் அவள் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். புத்தர், "எங்கே கடுகு?" என்று
கேட்டார். அவள் சிரித்தாள். காலையில் அவள் அழுதவண்ணம் வந்தாள், இப்போது சிரித்தாள். அவள், "நீங்கள் தந்திரம் செய்து விட்டீர்கள், பிறக்கும் யாரும் இறக்கத்தான்
வேண்டும். இந்த கிராமத்தில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே யாரும் இறக்காத
குடும்பமே கிடையாது. அதனால் நான் எனது மகனை உயிர்பித்துத் தர கேட்கப்
போவதில்லை, என்ன பயன்? - சில தினங்களுக்குப் பிறகு, அல்லது சில நாட்களுக்குப் பிறகு, அல்லது சில வருடங்களுக்குப் பிறகு அவன் திரும்பவும் இறந்துவிடுவான். வாழும் அத்தனை வருடங்களும் அவன் துயரத்திலும் துன்பத்திலும் எல்லா விதமான
வேதனைகளிலும் இருப்பான். அவனை திரும்பவும் வாழ்வுக்கு கொண்டு வராத உங்களது கருணை மிகவும் பெரியது.

குழந்தையை மறந்து விடுங்கள். எனக்கு தீட்சை கொடுங்கள். பிறப்பும் இறப்பும் நிகழாத
அழிவற்ற, அந்த உலகத்திற்கு நான் செல்ல எனக்கு தியானமென்னும் வழி காட்டுங்கள்,"   என்றாள்.

புத்தர், "நீ மிகவும் புத்திசாலியான பெண். நீ அதை உடனே புரிந்து கொண்டு விட்டாய்."
என்றார்.

நான் இதைத்தான் அதிசயம் என்றழைப்பேன், ஜீஸஸ் லசாரஸை உயிர்பித்ததை நான்
அதிசயம் என்று கூற மாட்டேன். அது பார்ப்பதற்கு அதிசயம் போல தோன்றலாம், ஆனால் தோன்றுவதெல்லாம் உண்மை அல்ல. நான் புத்தரின் நடவடிக்கையைத் தான்
அதிசயம் என்று கூறுவேன். எல்லோரும் இறந்து போகத் தான் போகிறார்கள். அதில்
எந்த வித்தியாசமும் இல்லை. பிறப்பிலிருந்தும் இறப்பிலிருந்தும் ஒருவர் வெளியே
வர வேண்டும்.

புத்தர் அந்த பெண்ணிற்கு தீட்சை கொடுத்தார். அவள் புத்தரின் ஞானமடைந்த
சீடர்களில் ஒருவராக விளங்கினாள். அவளது தேடுதல் அத்தகையது..... அவளுக்கு
என்னுடைய கணவன் இறந்து விட்டான், என்னுடைய குழந்தை இறந்து விட்டது, இப்போது என்னுடைய முறை, எந்த கணமும் நான் இறப்புக்கு பலியாகி விடலாம்.
நேரமில்லை, எந்த நேரம் மரணம் வரும் என்று எனக்குத் தெரியாது. எனவே நான்
முழுமையாக இந்த தேடுதலில் ஈடுபடவேண்டும், புத்தர் என்னிடம், 'உள்ளே செல். உன்னுடைய இருப்பின் மையத்திற்குச் செல், நீ பிறப்பையும் இறப்பையும் தாண்டி செல்வாய்.' என்று கூறியுள்ள படியால் நான் தேடி சென்றடைய வேண்டும் என்பதை அவள் அறிந்திருந்தாள்.

இதைதான் நான் ஆணித்தரமான தேடுதல் என்றழைக்கிறேன். எல்லா பிரச்சனைகளையும் வேரறுத்து விடுவது. 
CHRISTIANITY : THE DEADLIEST POISON and ZEN : THE ANTIDOTE to ALL POISONS ch. # 2  475  

0 comments:

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP