சரியாக செய்தலும் முழுமையாக இருத்தலும்
Sunday, April 29, 2012
சரியாக செய்தல் என்ற இந்த மனோபாவமே மக்களை பைத்தியமாக்குகிறது. சரியாக செய்ய வேண்டும் என்பவன் கிறுக்கனாகத்தான் இருக்க வேண்டும். அவன் சரியாக இல்லாதவரை அவனால் வாழ்வை அனுபவிக்க முடியாது. மேலும் சரியாக இருப்பது என்பது ஒருபோதும் நடக்காது. அது இயல்பல்ல. முழுமைதான் சாத்தியம், சரியாக இருத்தல் என்பது சாத்தியமல்ல.
சரியாக இருத்தலுக்கும் முழுமையாக இருப்பதற்க்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. சரியாக செய்தல் என்பது எங்கோ எதிர்காலத்தில் வைக்கும் குறிக்கோள். முழுமை என்பது இப்போது இங்கே உணரப்படும் அனுபவம். முழுமை என்பது வாழ்வின் லட்சியமல்ல. அது வாழ்க்கை வழி. நீ உன் முழு மனதோடு ஒரு செயலில் ஈடுபட்டால் நீ முழுமையாக இருக்கிறாய். முழுமை மொத்தத்தை, ஆரோக்கியத்தை, ஒழுங்கை கொண்டு வரும்.
சரியாக செய்பவன் முழுமையை முற்றிலுமாக மறந்து விடுவான். அவனுக்கு தான் எப்படி இருக்க வேண்டுமென்பதில் சில கருத்துக்கள் இருக்கும், அதை அடைய காலம் தேவைப்படும். அது உடனடியாக நிகழாது, நாளை, அல்லது நாளை மறுநாள், அல்லது இந்த பிறவியில், அல்லது மறு பிறவியில் ஆகவே வாழ்வு தள்ளிப்போடப்படுகிறது.
கடந்த காலத்தில் மனிதன் வாழவே இல்லை. அவனது வாழ்வு தள்ளிப்போடுதலாகவே மாறி விட்டது. நான் எதிர்காலத்தை பற்றிய எந்த கருத்தும் இன்றி இப்போது இங்கே வாழச் சொல்லித்தருகிறேன். எதிர்காலம் நீ இப்போது வாழ்வதிலிருந்து பிறக்க வேண்டும். நிகழ்காலம் முழுமையாக இருந்தால் எதிர்காலம் மேலும் முழுமையானதாக இருக்கும். முழுமையிலிருந்து மேலும் முழுமை பிறக்கும்.
ஆனால் எதிர்காலத்தில் எப்படி இருக்கவேண்டுமென உனக்கு சில கருத்துக்கள் இருப்பதால் நீ நிகழ்காலத்தில் பகுதியாகத்தான் வாழ்கிறாய். ஏனெனில் உனது முழு கவனமும் எதிர்காலம்தான். உனது கண்கள் எதிர்காலத்தை பார்க்கின்றன. நீ உண்மையுடன் நிகழ்காலத்துடன் தொடர்பை இழந்து விட்டாய். நாளை உன்னுடன் தொடர்பில்லாத இந்த நிஜத்திலிருந்துதான் பிறக்கும். நாளை இன்றிலிருந்து பிறக்கிறது, ஆனால் உனக்கு இன்றுடன் தொடர்பில்லை.
டெவில் என்ற ஆங்கில வார்த்தை மிகவும் அழகானது – devil – அதை பின்புறத்திலிருந்து நீ படித்தால் அது வாழ்வது என்றாகும். வாழ்ந்தது இறைமையாகும், வாழாதது டெவிலாகும்.
வாழ்ந்தது தெய்வீகமாகும். வாழாதது விஷமாகும். இன்றை நீ தள்ளிப்போட்டால் வாழாதது உன்னைச் சுற்றி சுமையாக மாறும். நீ அதை வாழ்ந்து விட்டால் அதிலிருந்து நீ விடுபட்டு விடலாம். அது உன்னை வேட்டையாடாது, அது உன்னை இம்சை பண்ணாது.
ஆனால் இன்று வரை மனிதனுக்கு வாழ கற்றுக் கொடுக்கப்பட வில்லை. நம்பிக்கைதான் கொடுக்கப்பட்டுள்ளது. வாழும்வகையில் நாளை விஷயங்கள் நிகழ்ந்து விடும், நாளை நீ வாழலாம், வாழ்க்கை நாளை வந்துவிடும், நாளை நீ கௌதம புத்தராகவோ, ஜீஸஸ் ஆகவோ மாறலாம் என்று நம்பிக்கை மட்டுமே தரப்பட்டுள்ளது.
நீ ஒருக்காலும் ஜீஸஸ் அல்லது கௌதமபுத்தர் என ஆகப் போவதில்லை. நீ நீயாகத்தான் இருக்கப் போகிறாய். நீ யாருடைய நகலாகவும் மாறப்போவதில்லை. மற்றொரு புத்தராகவோ மற்றொரு ஏசுவாகவோ மாறுவது அசிங்கமானது. அது மனித இனத்துக்கு கேவலம். மனிதனுக்கென்று ஒரு மரியாதை உண்டு, ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே உரித்தான தன்மை உள்ளது.
ஒரு குறிப்பிட்ட விதமாக வாழ வேண்டும் என்பது பழைய கருத்து. பழைய முறை தனித்தன்மை கொண்டவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அது குறிப்பிட்ட விதமாக வாழ்வதற்க்கே ஆனது. அது ஒருவிதமான அடிமைத்தனத்தை உருவாக்குகிறது.
நான் தனித்தன்மையை போதிக்கிறேன், தனித்துவமான தனித்தன்மையை சொல்கிறேன். உன்னை நேசி, உனக்கு மரியாதை கொடு. ஏனெனில் உன்னைப் போன்ற ஒருவன் இதுவரை இருந்தது இல்லை, இருக்கப் போவதுமில்லை. பிரபஞ்சம் ஒருபோதும் மறுபடி செய்வது இல்லை. நீ தனித்துவமானவன். ஒப்பிட முடியாத அளவு தனித்துவமானவன். நீ அடுத்தவரைப் போல இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீ காப்பியடிப்பவனாக இருக்க வேண்டிய தேவையில்லை. நீ உன்னைப் போலவே, உனது இருப்பில் இருக்க வேண்டும். நீ உனது விஷயங்களைத்தான் செய்ய வேண்டும்.
நீ உன்னை ஏற்றுக் கொண்டு உன்னை மதிக்க ஆரம்பித்தால் நீ முழுமையடைவாய். பின் அங்கே உன்னை பிரிக்க ஏதுமிருக்காது. அங்கே பிளவை உண்டாக்க எதுவுமில்லை.
Source : The Book of Wisdom
0 comments:
Post a Comment