சிரிப்பு - ஓஷோ

Thursday, April 26, 2012

இந்த ஓஷோ தமிழாக்கம் இங்கிருந்து எடுக்கப்பட்டது.


1.சிரிப்பு
மனிதன் முழுமையடைய மிக முக்கியமான பகுதி நகைச்சுவை உணர்ச்சியாகும். அது அவனை ஆரோக்கியமாக வைத்திருக்கும், இளமையாக வைத்திருக்கும், புதிதாக
வைத்திருக்கும். மேலும் நூற்றாண்டுகளாக இந்த சோகமான மக்கள் மதத்தை
பிடித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் மசூதியிலிருந்து, கோவிலிருந்து, சர்சுகளிலிருந்து சிரிப்பை வெளியேற்றி விட்டனர். என்று இந்த புனிதமான இடங்களுக்குள் சிரிப்பு நுழைகிறதோ அன்றுதான் இவை உண்மையிலேயே
புனிதமான இடங்களாக மாறும், ஏனெனில் அப்போதுதான் அவை முழுமை
அடைகின்றன.
சிரிப்பு ஒன்றுதான் மனிதனை விலங்கிலிருந்து வேறு படுத்திக் காட்டும் குணம்.
மனிதனால் மட்டுமே முட்டாள்தனத்தை, மடத்தனத்தை பார்க்க முடியும். இயற்கையின்
வேடிக்கையை உணரக் கூடிய தன்னுணர்வும் ஆற்றலும் மனிதனுக்கு மட்டுமே உண்டு.
இது ஒரு பிரபஞ்ச விளையாட்டு, இது கடுகடுப்புக்குரிய விஷயமல்ல.
கடுகடுப்பு ஒரு வியாதி. ஆனால் கடுகடுப்புக்கு மரியாதை தரப்படுகிறது, கௌரவம்
தரப்படுகிரது, பாராட்டப்படுகிறது. ஒரு துறவியாக இருக்க வேண்டுமென்றால் நீ
கடுகடுப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதனால்தான் நோய் கொண்ட
மக்கள் மட்டுமே மதத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். - சிரிக்க தெரியாத மக்கள். மேலும்
சிரிக்க தெரியாத மக்கள் மனித இனத்தைவிட குறைவானவர்கள். இன்னும் மனித
இனமாகாதவர்கள். - அவர்களது இருப்பு தெய்வீகமானது என்று எப்படி சொல்ல அது
சாத்தியமற்றது. அவர்கள் இன்னும் மனிதர்களாகவே இல்லை. மனிதன்தான்
தெய்வத்திற்க்கும் விலங்குக்கும் இடையே உள்ளவன். அதனால்தான் நான் சிரிப்புக்கு
நகைச்சுவை உணர்வுக்கு அளவற்ற மரியாதை கொடுக்கிறேன்.
சிரிப்பு பிரார்த்தனையை விட அதிக புனிதமானது. ஏனெனில் பிரார்த்தனையை எந்த மடையன் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு புத்திசாலித்தனம் தேவை
இல்லை. சிரிப்புக்கு புத்திசாலித்தனம் தேவை. அதற்கு விஷயங்களை விரைவாக
பார்க்கும் அறிவு வேண்டும், அந்த வினாடியில் அங்கிருக்கும் மனம் வேண்டும். ஒரு
ஜோக்கை விவரிக்க இயலாது. நீ அதை புரிந்து கொள்ள வேண்டும் இல்லாவிடில்
நீ அதை தவற விட்டு விடுவாய். அதை விவரித்து கூறினால் அது அதன் முழு அழகையும் இழந்து விடும். எனவே ஜோக்கை விவரிக்க முடியாது. நீ அதை
உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும். உன்னால் அதை உடனடியாக புரிந்து
கொள்ள முடியா விட்டால் நீ அதை முயற்சி செய்து புரிந்து கொள்ளலாம், ஆனால்
உன்னால் அப்போது அதன் பொருளைத்தான் புரிந்து கொள்ள முடியும், அப்போது
ஜோக் அங்கிருக்காது. அது அந்த வினாடியில்தான் இருக்கிறது.
நகைச்சுவைக்கு அங்கிருக்க வேண்டும், முழுமையாக அந்த வினாடியில் அங்கே
இருக்க வேண்டும். அது பகுத்தாயும் விஷயமல்ல, அது உள்ளே உதிக்கும் விஷயம்.
உன்னால் முழுமையாக சிரிக்க முடியுமென்றால் அங்கே புரிந்து கொள்ள வேண்டிய
சில விஷயங்கள் உள்ளன. ஆழமான சிரிப்பில் அகம்பாவம் மறைந்து விடுகிறது.
அது அங்கே காணப்படுவதில்லை. அகம்பாவம், சிரிப்பு இரண்டையும் ஒன்றாக
வைத்திருக்க முடியாது. அகம்பாவம் அங்கிருக்குமானால் அது உன்னை கடுகடுப்பாக
வைத்திருக்கும். எல்லா ஆணவக்காரர்களும் கடுகடுப்பானவர்களே, எல்லா கடுகடுப்பானவர்களும் ஆணவம் பிடித்தவர்களே.
சிரிக்க வேண்டுமென்றால் நீ குழந்தை போலாக வேண்டும் - ஆணவமின்றி. மேலும் நீ
சிரிக்கும்போது சிரிப்பு அங்கிருக்கும், நீ இருக்க மாட்டாய். சிரிப்பு நின்றவுடன் நீ
திரும்பவும் வருவாய். சிரிப்பு தொலைவுக்கு சென்றவுடன், அது தேய்ந்தவுடன் நீ
வருவாய், ஆணவம் மறுபடி வரும். ஆனால் சிரிக்கும்போது நீ ஆணவமற்ற நிலையின்
தரிசனத்தை காண்பாய்.
இரண்டு செயல்களின் போதுதான் நீ ஆணவமற்ற நிலையின் தரிசனத்தை எளிதாக
பெற முடியும். ஒன்று சிரிப்பு, மற்றொன்று நடனம். நடனம் உடல்ரீதியான முறை, ஆணவமற்ற நிலையை உணரக்கூடிய உடல் வழி. நடனமாடுபவர் நடனத்தில்
கரைந்து விடும்போது அவர் அங்கிருப்பதில்லை, நடனம் மட்டுமே இருக்கிறது.
சிரிப்பு நடனத்தை விட மென்மையானது, உள்ளிருப்பது. ஆனால் அதற்கும் அதே
அளவு மணம் உண்டு. நீ சிரிக்கும்போது...... அது உன் அடி வயிற்றிலிருந்து வரும்
சிரிப்பாக இருக்க வேண்டும். மேலோட்டமானதாக இருக்கக் கூடாது, வெறும் புன்சிரிப்பாக இருக்க கூடாது, நடிப்பாக இருக்கக் கூடாது.
கட்டாயத்திற்காகவோ, நடிப்பாகவோ, புன்சிரிப்பாகவோ இருந்தால் அது ஒரு அடி
வயிற்றிலிருந்து வருவதாக இருக்காது. மேம்போக்கானதாக இருக்கும். மேல்மட்டத்தில்
நீ அதை சமாளிக்கலாம். அப்போது உன்னால் நான் சிரிப்பைப் பற்றி என்ன சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ள முடியாது.
சிரிக்கும்போது உனது முழு உடலும் உனது முழு இருப்பும் அதில் ஈடுபடும்போது
அங்கே திடீரென ஒரு தரிசனம் தோன்றும். ஒரு கணம் கடந்த காலமும் மறையும்,
எதிர்காலமும் மறையும், ஆணவமும் மறையும், எல்லாமும் மறையும் - அங்கே சிரிப்பு
மட்டுமே இருக்கும். அப்படி சிரிப்பு மட்டுமே இருக்கும் அந்த கணத்தில் இந்த முழு இயற்கையும் சிரித்துக் கொண்டிருப்பதை உன்னால் பார்க்க முடியும்.

0 comments:

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP