சமச்சீர் கல்வி திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம்

Wednesday, October 14, 2009

நன்றி: தினமலர்

தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் தமிழ் பாடங்கள் எளிமைப்படுத்தப்படவுள்ளன.

பிற பாடங்களைப் போல் தமிழ் பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற வைத்து, மொத்த மதிப்பெண்களை எளிதில் உயர்த்தவே இந்த நடவடிக்கை என சமச்சீர் கல்வி கமிட்டியில் இடம் பெற்றுள்ள சிலர் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது நான்கு கல்வி முறைகள் உள்ளன. நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த வேறுபாட்டை நீக்கி, பொதுவான கல்வி முறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி தற்போது ஒவ்வொரு பாடத்திலும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அடங்கிய குழுவினர் பாடத்திட்ட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். புதிய பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்தை எளிமையாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது பல மெட்ரிக் பள்ளிகளில் பிரெஞ்சு, சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் முதல் பாடமாக கற்பிக்கப்படுகிறது. இந்த பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவது எளிது என்பதால், இதன் மூலம் அதிக மாணவர்களை நூறு சதவீத மதிப்பெண் பெற வைக்க பள்ளிகளும் பெற்றோரும் இம்மொழிகளை படிக்க வலியுறுத்தி வருகின்றன.

இதற்கு நேர்மாறாக தமிழ் பாடத்தில் இலக்கணம் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் கடினமாகவும், படிக்கும் மாணவனுக்கு பாடத்தில் பிடிப்பு ஏற்படாமலும் செய்கிறது. இதனால் தமிழ்நாட்டில் படிக்கும் தமிழ் மாணவர்களால் தமிழில் கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடியாத அவலநிலை உள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள சமச்சீர் கல்வி மூலம் இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் தமிழ் பாடத்தை மிகவும் எளிமையானதாக மாற்ற பாடநூல் வல்லுனர்களுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இனி வரும் ஆண்டுகளில் மாணவர்களை தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த முக்கிய மாற்றம் காரணமாக தமிழக மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிரெஞ்சு, சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளை படிப்பதை விட்டு தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் நிலை உருவாகும். இதே போல் வரலாற்றுப் பாடங்களும் எளிமைப்படுத்தப்படவுள்ளன.

பிற புதிய மாற்றங்கள்: புதிய பாடத் திட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் சீர்கேடுகளை தடுப்பது, குறைந்து வரும் மழை, உணவு கலப்படம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது. உடல் நலம், சுகாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பகுதிகள் கூடுதலாக சேர்க்கப்படவுள்ளன. பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை மாற்றப்பட்டு, செயல்பாட்டு முறையில் பாடங்கள் அமைக்கப்படவுள்ளன.

புதிய பாடத்திட்டம், என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டம் போல், தேசிய அளவில் மாணவர்களின் போட்டியிடும் திறனை மேம்படுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கான கேள்விகளை டில்லியில் உள்ள வல்லுனர்களே வடிவமைக்கின்றனர்.

என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தை தழுவிய இந்த கேள்விகளுக்கு, தமிழக மாணவர்களால் எளிதில் பதில் அளிக்க முடிவதில்லை. என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டம் போல் சமச்சீர் கல்வி முறை வடிவமைக்கப்படவுள்ளதால், இனி வருங்காலங்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற முக்கிய தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறும் அருமையான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து பாடத்திட்ட குழுவினர் சிலர் கூறுகையில், “தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசமானதாக மாற்றும் சமச்சீர் கல்வித் திட்டத்தை, பெற்றோர்களும் ஆசிரியர்களும் மனதார ஆதரிக்க வேண்டும். இத்திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்துவதில் ஆசிரியரின் பங்கு முக்கியம். ஆசிரியர்கள் நிறைய விஷயங்களை படித்து கற்றுக் கொள்வது முக்கியம்,” என்றார்.

0 comments:

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP