மனதை நெறிப்படுத்தும் வழிகள்

Saturday, October 10, 2009

நன்றி: தினத்தந்தி

சமுதாயத்தின் விடிவெள்ளிகளான இளைஞர்களின் மேம்பாட்டுக்கு தேவையான விஷயங்களின் கடந்த வார தொடர்ச்சியை விளக்குகிறார் திருச்சி மண்டல வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குனர் ப.சுரேஷ்குமார்.

இளைஞர்களுக்கு சிந்தனை ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம். சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். மனதை நெறிப்படுத்தி திறன்களை பெறுவது எப்படி? அதற்கான வழிகள் இதோ...

* ஒரு பிரச்சினையை அறிமுகப்படுத்தி அதை எதிர்கொண்டு திறம்பட தீர்வு காண பழகிக் கொண்டால் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும்போதும் சுமூகமாக தீர்வு காண்பது சாத்தியமாகிவிடும்.

* தகவல்களைப் பெற்று அனுபவ ரீதியாக பல்வேறு கோணங்களில் ஆராயப் பழகிக் கொள்ள வேண்டும்.

* பல்வேறு காரணிகளை ஆராய்ந்து ஆரோக்கியமான பயனளிக்கும் முடிவை எடுக்க மனதை பழக்க வேண்டும்.

* நிர்ணயித்துக் கொண்ட இலக்கை குறுகிய காலத்தில் அடைய முடிவது, நீண்ட காலத்தில் அடைய முடிவது என்று வகைப்படுத்தி அதற்கேற்ப முயற்சி மேற்கொள்ள எண்ணத்தை நெறிப்படுத்த வேண்டும்.

சமூகத் திறன்களாவன:

* நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து நட்புறவுடன் நடந்து கொள்ளுதல், குடும்பத்திலுள்ள பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள், உறவினர்களுடன் சுமூகமாக நடந்து கொள்ளுதல், சமுதாயத்திலுள்ள அனைவரிடமும் இசைவுடன் பழகுதல், ஒவ்வொரு தனி மனிதனை அவரவர்களின் குறை, நிறைகளுடன் நட்பு பாராட்ட பழகுதல் போன்றவை உறவுகளை மேம்படுத்தும் திறன் களாகும்.

* கவனமாக கேட்கும் ஆற்றல், கேட்கும்போது உணர்வை வெளிப்படுத்துதல், உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும் திறன், கருத்துக்களை கூறுதல் போன்றவை தொடர்பு கொள்ளும் திறன்களாகும்.

* இடர்பாடுகளை எதிர்கொள்ளுதல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன், தன்னுடைய நிலைப்பாட்டை வலியுறுத்தும் திறன் போன்ற சமாளிக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அகப்பண்புகள்:

இளைஞர்கள் அவரவர்களைப் பற்றி ஆரோக்கியமாக எண்ண வேண்டும் என்று க்ளென் மற்றும் ஆல்பர்ட் பன்டூரா என்ற உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். தங்களால் முடியும் என்று கருதும் இளைஞர்களே தலைவர் களாக முடியும். அவர்களது முக்கியத்துவத்தை அவர்களே அறிந்தவர்களாக இருப்பார்கள். சூழ்நிலைகளை மாற்றும் ஆற்றலும், தங்களது புலன்களை அடக்கி ஆளும் திறன் கொண்டவர்களாகவும் செயல்பட பயிற்சி அளிக்க வேண்டும்.

தூண்டுதல் உணர்வு:

இளைஞர்கள் மேம்பாட்டிற்கான பயிற்சி இளைஞர் களின் திறன் தேவை, அவர்களது வயது, கல்வி, அவர் களது ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

நினைவாற்றல், புரிந்துகொள்ளும் திறன், பகுத்தறியும் திறன் இவை கற்பதற்கு தேவையான மூன்று முக்கியமான திறன்கள் ஆகும். வாழும் சமூகத்தையும் புரிந்துகொள்ளும் திறனும் முக்கியம்.

ஆக்கப்பூர்வமான சமூகப் பழக்கங்கள்:

இது நான்கு வகைப்படும். அவையாவன: சுய கட்டுப்பாடு, தன்னைத்தானே மதிப்பது, விடாமுயற்சியுடன் இலக்கை அடைய முயலுதல், விருப்பத்தை தள்ளிப் போடுதல், உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்துதல் முதல் வகையாகும்.

பொறுப்பு: வாக்குறுதியை நிறைவேற்றும் பண்பு, நேர்மையாக நடந்து கொள்ளுதல், சவால்களை சந்தர்ப்பமாக மாற்றுதல், எடுத்த காரியத்தை குறித்த காலத்தில் முடிக்கும் பண்பு, தாங்கள் செய்த தவறுக்கு முன்வந்து பொறுப்பேற்றுக் கொள்ளுதல் போன்றவை இரண்டாவது வகையாகும்.

மதிப்பீடு செய்யும் திறன்: ஆராய்ந்து அறிந்து எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை தவிர்த்து, சரியாக மதிப்பீடு செய்து முடிவு எடுத்து செயல்படும் திறன் மூன்றாவது வகையாகும்.

மற்றவர்களுடன் இணைந்து செயல்படுதல்: உதவும் குணம், பகிர்ந்து கொள்ளும் ஆற்றல், கேட்டு மதிப்பீடு செய்து கருத்தை தெரிவித்தல், குழு மனப்பான்மையில் செயல்படுதல் போன்றவை நான்காவது வகையாகும்.

பிணைப்பு: இளைஞர்களது மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது அவரவருடைய குடும்ப சூழ்நிலையாகும். அதன் அடிப்படையிலேயே பள்ளி மற்றும் சமுதாயத்தில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளும் பெரும்பாலும் அமையும். உறவுகள் ஆரோக்கியமானதாக அமையும்போது இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். பெற்றோர்களுக்கு கூட்டம் நடத்தி குழந்தைகள் மேம்பாட்டிற்கு ஆலோசனை வழங்கலாம்.

தொடர்ந்து பள்ளிச் சூழலை மேம்படுத்துதல் நண்பர் களுடன் நல்ல புரிதலுடன் நடந்து கொள்ளுதல் போன்ற பழக்கத்தை ஏற்படுத்தலாம். சமூக செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்து சமூக மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் விதத்தில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.

ஒவ்வொரு இளைஞரும் உடல் ஆரோக்கியம் பேணுதல், அறிவாற்றலை வளர்த்தல், சமூக மேம்பாட்டில் அக்கறை செலுத்துதல், நெறிப்படுத்தப்பட்ட உணர்வுகளுடன் செயல்படுதல் போன்ற பண்புகளை கொண்டு விளங்கினால்தான் இளைஞர் மேம்பாட்டிற்கு மேற்கொள்ளும் முயற்சி, பயிற்சி போன்றவை முழுமையான பலனை அளிக்கும்.

0 comments:

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP