கிழக்கு பதிப்பகத்தின் நூல்களில் ஒன்றான (தோல்விகளைத் துரத்தி அடி - எழில் கிருஷ்ணன் - விலை ரூ 75.) என்ற நூலிலிருந்து...
அவர் ஒரு ஜென் குரு. ஜப்பானில் அவரைக் குழந்தை புத்தர் என்று சொல்வார்கள். அவருடைய பேச்சு, நடவடிக்கை எல்லாம் குழந்தைத்தனமாக இருக்கும். பக்குவம் அடைந்த ஞானிபோல பேசமாட்டார். நடந்துகொள்ள மாட்டார். யாராவது யோசனை கேட்டால் 'சீ போ' என்றுதான் சொல்வார். 'வர்றியா கிட்டிப்புள் ஆடலாம்' என்று ஏதாவதொரு விளையாட்டுக்கு அழைப்பார். என்ன வேண்டுமானாலும் வாங்கித்தருகிறேன் என்றால் திண்பண்டம் கேட்பார். அவருடைய விருப்பம் எல்லாமே குழந்தைத்தனமாக இருக்கும்.
பிறகு ஏன் அவரை ஞானி என்று சொன்னார்கள்?
அவர் வாழ்ந்த காலத்தில் அவர் கொண்டாடப்படவில்லை. அவர் மரித்தபிறகே அவருடைய வாழ்க்கையைக் கேள்விப்பட்டு அவரைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். அவர் வாழ்ந்த வாழ்க்கையைக் கொண்டே அவருடைய மகத்துவம் அறியப்பட்டது. இந்தக் கதையைப் பாருங்கள்.
மன்னர் ஒருநாள் அவரைப் பார்க்க வந்தார். குரு வெளியே அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தார். மன்னர் குழம்பிப் போய்விட்டார். 'நான் தவறான நேரத்தில் வந்தேனா’ என்று குருவிடம் கேட்டார்.
'ஆமாம் நான் மிகவும் வேலையாக இருக்கிறேன்’ என்றார் குரு.
இவ்வளவு பெரிய ஞானி, யாரைப் பார்க்க வெளியே போகிறார் என்று மன்னர் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார். குரு சந்திக்கப் போகும் நபர் நிச்சயம் பெரிய ஆளாக இருக்கக்கூடும் என்று அவர் நம்பினார். மன்னர் குருவைப் பின்தொடர ஆரம்பித்தார். அவர் உதவியாளர்கள் பின்தொடர்ந்தனர்.
குரு தலைதெறிக்க ஓடுகிறார். அவருக்குக் காயங்கள் ஏற்படுகின்றன. அவர் அளவுக்கு மன்னராலும் அவர் உதவியாளர்களாலும் வேகமாகச் செல்லமுடியவில்லை. திணறுகிறார்கள். குரு சுவரெல்லாம் தாண்டிச் செல்கிறார்.
இறுதியில் ஆற்றங்கரைப் பக்கத்தில் உள்ள நாணல் புதருக்குச் செல்கிறார். ராஜாவுக்குப் புரியவில்லை. அங்கே ஏழுட்டுக் குட்டிப் பயல்கள் கும்பலாக நின்றுகொண்டிருந்தனர். குருவைப் பார்த்ததும் கையசைத்தனர். பதிலுக்கு இவரும் சந்தோஷமாகக் சையசைத்தார்.
ராஜா குழம்பிப் போய் நின்றார்.
குட்டிப்பயல்களிடம், 'ஸாரிப்பா லேட்டாகிவிட்டது’ என்கிறார் குரு.
ஒரு குட்டிபையன் குருவைக் கோபித்துக்கொள்கிறான்.
குரு அவனிடம், 'அதான் சொல்லிட்டேன் இல்லை. வேணும்னா தோப்புக்கரணம் போடறேன்’ என்று உடனே பத்துத் தோப்புக்கரணம் போடுகிறார்.
இப்போது ராஜாவுக்குக் கோபம் வந்தது. உலகமே நான் என்ன சொன்னாலும் அதற்குத் தலைவணங்கும். ஆனால் என்னை அவமதித்துவிட்டு இங்கே வந்து கொட்டம் அடிக்கிறாரே என்று குருமீது அடக்கமுடியாத கோபம் கொண்டார். .
குரு தொடர்ந்து அந்தச் சிறுவர்களைத் தாஜா செய்கிறார். பயல்களிடம், ’பச்சைக் குதிரை விளையாடலாமா’ என்று கேட்கிறார்.
அனைவரும் சாபூத்ரி போடுகிறார்கள் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடுகிறார்கள். குரு வைக்கோல் போருக்குள் ஒளிந்து கொள்கிறார்.
ராஜாவால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.
சிறுவர்கள் ஆறு பேரும் குருவைத் தேடோ தேடென்று தேடுகிறார்கள். மறைவில் நின்றுகொண்டு ராஜா அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
மாலையாகிறது. இருட்டாகிவிடுகிறது. ராஜாவுக்குப் பசியெடுக்கிறது. கடுங்கோபத்துடன் அங்கே இருந்து கிளம்புகிறார். ராஜாவின் கட்டளையின்படி அவருடைய ஆள்கள் தொடர்ந்து குருவைக் கண்காணிக்கிறார்கள். குருவினுடைய விநோத நடவடிக்கைகள் பற்றி அடுத்த நாள் ராஜாவுக்கு ரிப்போர்ட் கொடுத்தாகவேண்டும்.
அடுத்தநாள் ராஜாவுக்குத் தகவல் வருகிறது. இரவு போய் காலையானபின்பும் குரு வைக்கோல் போரிலிருந்து வெளியே வரவில்லை.
ராஜா திடுக்கிட்டுப் போகிறார். மீண்டும் அந்த இடத்துக்கு ஓடுகிறார்.
குருவுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை அவர்களது பெற்றோர்கள் கூட்டிச் சென்றுவிட்டார்கள். ஆனால் குரு இன்னமும் வைக்கோல் போருக்குள்தான் இருக்கிறார் என்று ராஜாவுக்குத் தகவல் சொல்லப்படுகிறது..
'பிரியுங்கள்’ என்று ஆணையிடுகிறார் ராஜா. வைக்கோல் போரைப் பிரிக்கிறார்கள்.
உள்ளே குறுகிக்கொண்டு ஒளிந்துகொண்டிருக்கிறார் குரு. ராஜாவின் ஆள்கள் பிரிப்பதைப் பார்த்து 'ஐய்யோ, பிரிக்காதீங்க. பிரிக்காதீங்க. அந்தப் பசங்க என்னைக் கண்டுபிடிச்சுடுவாங்க’ என்கிறார்.
நன்றி: ச.ந.கண்ணன்
Read more...