இது நான் அதிக உயரத்திற்கு உயர முடியும் என்பதைக் காட்டுகிறது
Sunday, May 3, 2009
நீ உன்னையே கூர்ந்து நோக்கினால் நீ பெற வேண்டிய நற்குணத்திற்கு நேர் எதிரானது உன்னுள் இருப்பதைக் காண்பாய் ("நற்குணம்" என்பதை அதன் மிக விரிவான, மிக உயர்ந்த பொருளில் பயன்படுத்துகிறேன்) உனக்கு ஒரு சிறப்புக் குறிக்கோள், ஒரு சிறப்புத் தெய்வப் பணி, ஒரு சிறப்பு அனுபூதி, உனக்கே உரிய ஒன்று உள்ளது. அதே சமயம் எல்லாத் தடைகளும் உன்னுள் இருக்கின்றன.
எப்பொழுதுமே உன்னுள்ளே உள்ள நிழலுருவமும் ஒளியும் சமமாக இருப்பதை நீ காண்பாய். உன்னிடம் ஒரு திறமை இருக்கும், அதற்கு எதிர்மறையானதும் இருக்கும். ஆனால் உன்னுள் மிகக் கரிய துளை, அடர்த்தியான ஒரு நிழலுரு இருக்கக் கண்டால், உன்னுள் எங்கோ ஒரு பெரிய ஒளி உள்ளது என்று நீ உறுதியாக நம்பலாம். அந்த ஒளியை அடைய மற்றதை எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக் கொள்வது உன் பொறுப்பு. உன்னிடம் மிகப்பெரிய பலவீனம் இருக்கக் கண்டால் நம்பிக்கை இழந்து விடாதே, ஏனெனில் அது மிகப் பெரிய தெய்வீக பலத்திற்கு அடையாளமாக இருக்கக் கூடும். "நான் இப்படி இருக்கிறேன், என்னால் வேறு வகையாக இருக்க முடியாது" என்று சொல்லாதே. அது உண்மை அன்று, நீ அதற்கு எதிரானதாக இருக்க வேண்டும் என்பதுதான். "அப்படி இருப்பதற்கு" காரணமே, உன்னுடைய எல்லாக் கஷ்டங்களும் இருக்கக் காரணமே அவற்றை நீ உருமாற்றஞ்செய்ய வேண்டும் என்பதுதான்.
நீ இதைப் புரிந்து கொண்டுவிட்டால் பல கவலைகள் மறைந்துவிடும், நீ மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பாய், மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பாய். உன்னிடம் மிகக்கரிய துளைகள் இருக்கக் கண்டால், நீ "இது நான் அதிக உயரத்திற்கு உயர முடியும் என்பதைக் காட்டுகிறது" என்று சொல்லுவாய், படுகுழி மிக ஆழமாக இருந்தால், "இது நான் அதிக உயரத்திற்கு ஏற முடியும்" என்பதைக் காட்டுகிறது என்று சொல்லுவாய். பிரபஞ்ச நோக்கிலிருந்தும் இதுதான் உண்மை.
தன்னில் உள்ள இருண்ட பக்கத்தைப் பார்த்த கணத்தில், அதைப் பார்த்து நீ "இது நான்" என்று சொல்லாமல், "இல்லை, இது என்னுடைய நிழலுரு, இது என்னைவிட்டு வெளியே எறிய வேண்டிய ஒன்று" என்று சொன்னால், நீ மறுபக்கத்தின் ஒளியை அதன்மீது பாய்ச்சுவாய், இரண்டையும் நேருக்கு நேர் சந்திக்கச் செய்வாய். இப்பொழுது மறுபக்கத்தின் ஞானத்தையும் ஒளியையும் கொண்டு நிழலுருவை அமைதியாக இருக்கும்படி கட்டாயப்படுத்த வேண்டும்.
அதற்கு அறிவூட்ட முயலக்கூடாது, அது மிகவும் கடினம்... முதலில் அதிலிருந்து தொலைவில் விலகி நிற்க வேண்டும், பிறகு அதன் மீது ஒரு பெரிய ஒளியைச் செலுத்தி, அது திரும்பிவர முடியாதபடி வெகு தொலைவிற்கு வீசி எறிய வேண்டும். சில சமயங்களில் அதை மாற்ற முடியும், ஆனால் அது மிகவும் அரிது. சில சமயங்களில் அதன் மீது மிக வலுவான ஒளியைச் செலுத்தி அதை உருமாற்றஞ் செய்ய முடியும். அப்பொழுது அது உன்னுடைய ஜீவனின் உண்மை எதுவோ அதுவாக மாறும்.
ஆனால் இது அரிது.. அப்படிச் செய்ய முடியும். பொதுவாக, மிகச் சிறந்தது, "இல்லை, இது நான் அல்ல! அது எனக்கு வேண்டாம்! இந்த இயக்கத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, அது என் இயல்பிற்கு மாறுபட்ட ஒன்று, என்னைப் பொறுத்தவரை அது இல்லை!" என்று சொல்லுவதுதான். இவ்வாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்துவதன் மூலமும் அதை வெளியே விரட்டுவதன் மூலமும் முடிவில் ஒருவன் தன்னை அதிலிருந்து பிரித்துக் கொள்ள முடியும்.
முதலாவது தன்னிடமுள்ள முரண்பாட்டை உணரும் அளவுக்கு ஒருவனிடம் தெளிவும் நேர்மையும் இருக்க வேண்டும்.
நன்றி -வைகறை
(ஸ்ரீஅரவிந்த ஆசிரமக் காலாண்டு வெளியீடு)
நன்றி: வெப்துனியா
0 comments:
Post a Comment