இங்கே என்ன தான் செய்து கொண்டிருக்கிறீர்!
Thursday, May 7, 2009
மலை உச்சியில் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
மலையின் கீழிருந்து மூன்று பேர் அவனைப் பார்த்தனர்.
மூவரில் ஒருவன் சொன்னான், “மலை மேல் நிற்பவன் யாருக்கோ காத்துக் கொண்டிருக்கிறான்”.
மற்ற இருவர் அவன் பேச்சை மறுத்தனர்.
மூவரில் இரண்டாமவன் சொன்னான், “யாருக்கோ காத்திருப்பவன், அந்த யாரோ வருகிறாரா என்று திரும்பிப் பார்த்த வண்ணம் நிற்க வேண்டும். ஆனால், மலை மேல் நிற்பவன் அப்படிச் செய்யவில்லை. எனவே, அவன் யாருக்கோ காத்திருக்கவில்லை. அவன் எதையோ தேட அங்கே வந்து நிற்கிறான்” என்றான்.
இரண்டாமவன் பேச்சும் ஏற்கப்படவில்லை.
மூவரில் மூன்றாமவன் சொன்னான், ” எதையோ தேடுபவன், ஆணி அடித்தாமாதிரி நின்று கொண்டிருக்க மாட்டான், அங்கே, இங்கே திரும்பிப் பார்த்தபடி தேடும் பாவனையில் இருப்பான். இவன் தியானம் செய்து கொண்டிருக்கிறான்”. என்றான்.
இந்த பதிலும் திருப்தி தரவில்லை. எனவே, அவர்கள் மலை மேல் ஏறிச் சென்று நின்றுகொண்டிருப்பவனிடமே கேட்டுவிடலாம் என முடிவு செய்து மலை மேல் ஏறி நிற்பவன் அருகில் சென்றனர்.
மலை மேல் நிற்பவனிடம், “நீங்கள் யாருக்கோ காத்திருக்கிறீர்களா ? என்று கேட்டனர்.
அவன் இல்லை என்றான்.
“நீங்கள் எதையோ தொலைத்துவிட்டு, அதைத் தேடுகிறீர்களா? என்று கேட்டனர்.
அவன் அதற்கும் இல்லை என்றான்.
கடைசியாக, “நீங்கள் இங்கே தனிமையில் நின்றபடி தியானம் செய்கிறீர்களா?” என்று கேட்டனர்.
அதற்குக்கூட, மலை மேல் நின்று கொண்டிருந்தவனிடம் இல்லை என்று தான் பதில் வந்தது.
பின் இங்கே என்ன தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மூவரும் கேட்டனர்.
அதற்கு அவன், ” நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்” என்றான்.
0 comments:
Post a Comment