அரசு பள்ளிகளை தத்தெடுக்க பலத்த ஆதரவு : குவிகிறது விண்ணப்பம்
Wednesday, May 6, 2009
அரசுப் பள்ளிகளின் நிலை உண்மையில் மிகவும் வருந்தத்தக்க நிலையில்தான் இருக்கிறது. இதை நான் 12வது முடித்து விட்டு பிறகென்ன செய்வது என்று விழித்து விட்டு, பிறகு மீண்டும் படித்ததையே ஒருவருடம் டியூசன் உதவியோடு SELF IMPROVEMENT(இப்பொது இல்லை)போட்டு, ஒரு நல்ல அரசுப் பொறியியற்கல்லூரியில் சேர்ந்தபோது தான்... நாம் எவ்வளவு ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணரமுடிந்தது. நான் எங்கள் கிராமத்தில் உள்ள அரசு நடுனிலைப் பள்ளியிலும் மற்றும் அருகாமையில் உள்ள அரசு மேல்னிலைப்பள்ளியியிலும் படித்தேன்.
இப்பவும் என்னைப் போன்றவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க ஏதாவது வழிவகை உருவாகாதா என்ற ஏக்கமும் அதைப் பற்றிய தேடலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அப்படி தேடியதில் கிடைத்த ஒரு ஆறுதல் செய்தியை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
சுட்டி: http://www.dinamalar.in/pothunewsdetail.asp?News_id=11323&cls=&ncat=TN
செய்தி:
கோவை : தமிழக அரசு திட்டத்தின்படி, பள்ளிகளைத் தத்தெடுக்க தொழிலதிபர்கள் பலர் முன் வந்துள்ளனர். தமிழக கிராமங்களில் உள்ள பல அரசுப் பள்ளிகள் குடிநீர், கழிப்பறை, வகுப்பறை வசதிகள் இல்லாமல் உள்ளன. அரசுப் பள்ளிகளை ஒரு குறிப்பிட்ட காலம் வரை, தனியாருக்கு தத்து கொடுத்து, மேம்படுத்தும் திட்டத்தை, கோவையில் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்த கார்மேகம் அறிமுகம் செய்தார். தற்போது, மேல்நிலைக் கல்விக்கான இணை இயக்குனராக சென்றபின், மாநிலம் முழுவதும் அத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தொழிலதிபர்கள் அதிகமாக உள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இத்திட்டத்துக்கு வரவேற்பு பெருகி வருகிறது. கோவை கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் காந்திமாநகர் அரசு உயர்நிலைப் பள்ளிகளை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பிலும், கீரணத்தம், சின்னவேடம்பட்டி, குரும்பபாளையம், குன்னத்தூர், ஒரக்கால்பாளையம், சரவணம்பட்டி பகுதிகளில் உள்ள ஆறு அரசுப் பள்ளிகள் "சி.ஆர்.ஐ., பம்ப்ஸ்' நிறுவனம் சார்பிலும் தத்தெடுக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில பள்ளிகளைத் தத்தெடுக்க விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. பள்ளிகளைத் தத்தெடுக்க விரும்புபவர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம், ஐந்து ஆண்டுகளுக்கு செயல்திறன் உள்ளதாக இருக்கும். ஆய்வுக்குப் பின் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடியும்.
இத்திட்டத்தின் மாநில அளவிலான துவக்க விழா, மார்ச் 3ம் தேதி, கோவை ஜி.டி.நாயுடு அரங்கில் நடைபெற உள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் குற்றாலிங்கம், இயக்குனர் பெருமாள்சாமி, எஸ்.எஸ்.ஏ., கவுரவ ஆலோசகர் விஜயக்குமார் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
நன்றி: தினமலர் (பிப்ரவரி 28,2009)
சுட்டி: http://www.dinamalar.in/pothunewsdetail
0 comments:
Post a Comment