உலகின் இளம் தலைமையாசிரியர்!

Monday, October 19, 2009

நன்றி: தினமணி

கோல்கத்தா, அக். 18:
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவருக்கு "உலகின் இளம் தலைமையாசிரியர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறது பி.பி.சி.

பி.பி.சி. செய்தி நிறுவனம் "கற்றுக்கொள்ளும் வேட்கை' என்ற பெயரில் புதிய செய்தித் தொடர் ஒன்றை தொடங்கியுள்ளது. உலகெங்கும் மிக மோசமான சூழல்களுக்கு இடையிலேயும் கற்றுக்கொள்ளும் வேட்கையோடு செயல்படுபவர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் நோக்கோடு இத்தொடரை பி.பி.சி. வெளியிடுகிறது.

இத் தொடரின் முதல் செய்தியாக மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பள்ளிக்கூடத்தைப் பற்றி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. உலகெங்கும் இன்னமும் கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வி ஒரு பெருங்கனவாகத்தான் இருக்கிறது.

பள்ளிக்கூடங்கள், மதிய உணவு, சீருடைகள், கல்வி உதவித்தொகை என்று பல்வேறு சலுகைகளை அரசுகள் அளித்தாலும்கூட மோசமான வறுமை கோடிக்கணக்கான குழந்தைகளை இன்னமும் இளம் தொழிலாளர்களாகவே வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஒரு சூழலிலிருந்து வெளிவந்திருப்பவர்தான் பாபர் அலி (16).

குடும்பத்தின் முதல் மாணவரான பாபர் அலி தன்னுடைய வீட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள ராஜ் கோவிந்தா பள்ளியில் படித்துவருகிறார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதால், பாபர் அலிக்குப் பெரிய அளவில் செலவுகள் ஏதுமில்லை. ஆனால், பிறரைப்போல குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ளாததோடு, குடும்பத்தினருக்கு மேலும் ஒரு சுமையைத் தரும் வகையில், தான் படிக்க வந்திருப்பதே ஒரு பெரிய காரியம்தான் என்கிறார் பாபர் அலி.

அவர் சொல்வது உண்மைதான். பாபர் அலி பகுதியைச் சேர்ந்த - அவர் வயதை ஒத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கிடைக்கும் வேலையைச் செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கும் துர்பாக்கியமான நிலையிலேயே இருக்கின்றனர். ஆகையால், தனக்கு தன் குடும்பம் அளித்த மிகப் பெரிய கொடையாக பள்ளிக்கூட வாய்ப்பைக் கருதிய பாபர் அலி கல்வியில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்கிறார்.

ஆனால், பாபர் அலிக்கு பி.பி.சி. புகழாரம் சூட்ட காரணம் ராஜ் கோவிந்தா பள்ளியின் சிறந்த மாணவராக அவர் திகழ்வதற்காக அல்ல. பாபர் அலி விளையாட்டாகத் தொடங்கிய இன்னொரு காரியத்துக்காக. அதாவது, அவர் விளையாட்டாகத் தொடங்கிய பள்ளிக்கூடத்துக்காக. அப்போது பாபர் அலிக்கு வயது 9. நம் வீட்டுப் பிள்ளைகள் விடுமுறை நாள்களில் "டீச்சர் விளையாட்டு' விளையாடுவதுபோல தன் வீட்டில் ஒரு நாள் "டீச்சர் விளையா'ட்டைத் தொடங்கினார் பாபர் அலி.

டீச்சர் - பாபர் அலி. மாணவர்கள் யார் என்றால், அங்குள்ள பிள்ளைகள். அதாவது, முன்னெப்போதும் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத ஏழைப் பிள்ளைகள். விளையாட்டு எல்லோருக்கும் பிடித்துப்போனது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளையாடத் தொடங்கினார்கள். விளையாட்டு ஒரு கட்டத்தைத் தாண்டியபோதுதான் தெரிந்தது பாபர் அலிக்கு, தன் சக நண்பர்களின் ஆர்வம் விளையாட்டின் மீதானது மட்டுமல்ல, கல்வியின் மீதானதும் என்று.

பாபர் அலி தன்னுடைய விளையாட்டுப் பள்ளிக்கூடத்தை உண்மையான பள்ளிக்கூடமாக மாற்றினார். ஒரு புதிய வரலாறு அங்கு உருவாகத் தொடங்கியது. சொன்னால், பிரமித்துப்போவீர்கள். இப்போது பாபர் அலியின் பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் தெரியுமா? 800 பேர்!

பாபர் அலி நடத்தும் இந்தப் பள்ளிக்கூடம் முற்றிலும் வித்தியாசமானது. பாபர் அலியின் வீட்டு முற்றம், வீட்டைச் சுற்றியுள்ள கொட்டகைகள், மரத்தடிகளே இந்தப் பள்ளிக்கூடம். களிமண்ணில், கட்டாந்தரையில் என்று கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பாடம் கற்கிறார்கள் மாணவர்கள். ஆசிரியர்கள்? பாபர் அலியும் அவருடன் படிக்கும் சில நண்பர்களும்தான்.

ஒவ்வொரு நாளும் தான் பள்ளிக்கூடம் சென்று வந்த பின்னர், இந்தப் பள்ளிக்கூடத்துக்கு மணியடிக்கிறார் பாபர் அலி. மணியோசை கேட்டதும் ஓடி வருகின்றனர் பிள்ளைகள். பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையிலுள்ள மூர்ஷிதாபாத் பகுதியில் மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது பாபர் அலியின் இந்தப் பள்ளிக்கூடம்.

மாற்றங்களுக்கு ஓர் உதாரணம் சம்கி ஹஜ்ரா (14). இந்தச் சிறுமி தன் தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். சம்கியின் தந்தை ஊனமுற்றவர். எந்த வேலைக்கும் செல்ல இயலாத நிலையில் இருக்கிறார். பாட்டியும் அப்படியே. சம்கி அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து ஈட்டும் சொற்பத் தொகையிலேயே இந்தக் குடும்பம் வாழ்கிறது.

பள்ளிக்கூடத்தை ஒருபோதும் அறிந்திராத சம்கி ஒரு நாள் விளையாட்டாக பாபர் அலியின் பள்ளிக்கூடத்துக்குச் சென்றார். இன்றோ முறையான பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவிகளுக்கே சவால் விடும் வகையில் இவர் படித்து வருகிறார். பாபர் அலி தனக்கு கல்வி கொடுத்த கடவுள் என்று குறிப்பிடுகிறார் சம்கி.

சரி. பாபர் அலி அப்படி என்னதான் பாடம் நடத்துகிறார்? ""நான் என் ஆசிரியர்களிடம் கேட்பதை இவர்களுக்கு அப்படியே சொல்கிறேன்; அவ்வளவுதான்'' என்கிறார் பாபர் அலி. தான் விரும்பும் சமூக மாற்றத்தை தன்னிலிருந்து தொடங்கிய பாபர் அலி மகத்தான மனிதன் என்று கொண்டாடுகிறது பி.பி.சி.

உலகின் இளம் தலைமையாசிரியர் இவரே என்றும் பிரகடனப்படுத்துகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மூர்ஷிதாபாத்தின் இந்த இளம் தலைமையாசிரியருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பொருத்தமானதுதானே!

0 comments:

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP