சமச்சீர் கல்வி மெட்ரிக் பள்ளிகளுக்கு எதிரானது அல்ல: தங்கம் தென்னரசு
Wednesday, October 14, 2009
நன்றி: தினமணி
சென்னை, அக். 13: "சமச்சீர் கல்வி முறை மெட்ரிக் பள்ளிகளுக்கு எதிரானது அல்ல' என்று பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் "சமச்சீர் கல்வித் திட்டத்தின் சிறப்புகள்' குறித்த விளக்கக் கூட்டம் சென்னை பழஞ்சூரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பன்னாட்டு உறைவிடப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
இதில் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது:
சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இது மெட்ரிக் பள்ளிகளுக்கு எதிரான முடிவு அல்ல. சுதந்திரத்திற்கு முன்பு குறிப்பிட்ட சாரர் மட்டுமே கல்வி பெற்று வந்தனர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி உரிமை சில காரணங்களால் மறுக்கப்பட்டது.
அடித்தட்டு மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்று காமராஜர் பல முயற்சிகளை எடுத்தார்.
இன்று தமிழகத்தில் 1 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு உயர்நிலைப் பள்ளியும், 7 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு மேல்நிலைப் பள்ளியும் உள்ளது.
தென் மாவட்டத்தில் உள்ளவர்கள் கல்வியில் வளர்ச்சி காண அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கிறிஸ்தவ பள்ளிகளின் பங்கு மிக முக்கியமானது.
மனித வள மேம்பாட்டு குறியீட்டில் நாட்டிலேயே தமிழகம் 3-ம் இடம் பிடித்துள்ளது. இந்த மேம்பாட்டுக்கு அடிப்படையாக இருப்பது கல்வி தான். மெட்ரிக் பள்ளிகளை ஒதுக்கிவிட்டு சமச்சீர் கல்வியைக் கொண்டு வரவில்லை.
சமூக நீதி மற்றும் ஏற்றத்தாழ்வை நீக்க வேண்டுமெனில் கல்விதான் முக்கியப் பங்காற்றுகிறது. ஏற்றத்தாழ்வுகளை நீக்கக்கூடிய ஆயுதமாகக் கல்வி விளங்குகிறது. கல்வி முறையிலும் ஏற்றத்தாழ்வு உண்டு.
சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும், நமது எதிர்கால சந்ததியினரை முன்னேற்றவும் ஒரேவகையான கல்வித்திட்டத்தைக் கொண்டு வருவது அவசியமாகும்.
ஆங்கிலம் தொடரும்...: மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலம் அப்படியே தொடரும். மொழி சிறுபான்மை பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வரும் தெலுங்கு, உருது ஆகிய மொழிகளை அவரவர் மொழிகளிலேயே படிக்கலாம். அனைத்து குழந்தைகளுக்கும் எவ்வித மன உளைச்சல் இல்லாத வகையிலும், சிந்தனை திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலும், பாடச்சுமையைக் குறைக்கும் வகையிலும் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளியில் உள்ள நல்ல அம்சங்கள், கருத்துக்களை உள்ளடக்கிய வகையில் சமச்சீர் கல்வி திட்டம் அமைய வேண்டும். மெட்ரிக் பள்ளிகளும் அரசுக்கு, ஆலோசனைகளை வழங்க முன்வர வேண்டும்.
மெட்ரிக் பள்ளி இயக்குநரகம்: தமிழகத்தில் சுமார் 3,600 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகள் நிர்வாகம், கட்டமைப்பைக் கண்காணிக்க வேண்டி இருப்பதால் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அப்படியே தொடரும்.
அக்.15-ல் வரைவுப் பாடத்திட்டம் வெளியீடு: வரும் அக்டோபர் 15-ம் தேதி வரைவுப் பொதுப் பாடத்திட்டம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு பாடநூல் கழக நிறுவனத்தின் மூலமே அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும். மெட்ரிக் பள்ளிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். தமிழ்நாடு மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகரன், செயலாளர் என்.விஜயன், செயின்ட் ஜான்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் கிஷோர்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment