பள்ளி ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆங்கில பயிற்சி
Wednesday, October 14, 2009
நன்றி: தினமலர் கோவை: பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள் தாங்கள் சார்ந்துள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். மதுக்கரை ஒன்றியப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடந்த பயிற்சி முகாமில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துவது தொடர்பாக, பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ‘யுனிசெப்’ நிதியுதவியுடன் பிரிட்டிஷ் கவுன்சில் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் பயிற்சி அளித்து வருகின்றனர். கோவையில் இரு கட்டங்களாக நடைபெற்று வந்த இப்பயிற்சி கடந்த மாதம் நிறைவு பெற்றது. பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்களும் கண்காணிப்பாளர்களும், தாங்கள் சார்ந்துள்ள பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி அளித்து வருகின்றனர். மதுக்கரை ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மலுமிச்சம்பட்டி வட்டார வளமையத்தில் பயிற்சி நடைபெற்றது. ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களின் கற்றல் திறன் வளர்ச்சி அடைய ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய கற்பித்தல் முறைகள் பற்றி இதில் பயிற்சி அளிக்கப்பட்டது. பங்கேற்ற ஆசிரியர்கள் தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு, கற்றல் திறன் மேம்படுத்துவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்ததும் ஆசிரியர்கள் வட்டமாக அமர்ந்து ஆங்கிலத்தில் விவாதித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரோஜினி தலைமையில் ஆசிரியர் பயிற்றுனர்கள் வனிதா, சுமதி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
0 comments:
Post a Comment