தமிழ்நாட்டில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ஈரோட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
Saturday, October 10, 2009
நன்றி: தினத்தந்தி (ஈரோடு, அக். 10-)
தமிழ்நாட்டில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் அரசு தேர்வாணையம் மூலம் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று காலை ஈரோடு வந்தார். ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்துக்கு சென்று பார்வையிட்டார். பள்ளிக்கூடத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் டாக்டர் அப்துல் கலாம் நூலகத்தை அமைச்சர் சுற்றிப்பார்த்தார். பின்னர் மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்:
தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். 12 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் ஆதி திராவிடர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அரசு அனுமதித்துள்ளது. அதற்கான தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்ததும் ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
ஆசிரியர்கள் பற்றாக்குக்குறை:
இந்த 12 ஆயிரம் ஆசிரியர்களில் 1,000 ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்கள் ஆவார்கள். இவர்கள் நியமிக்கப்படும் வரை பிளஸ்-2 மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் உதவியுடன் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் 5 ஆசிரியர்கள் வீதம் அரசு நியமித்து வருகிறது. இதனால் அந்த பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை வர வாய்ப்பு இல்லை.
சமச்சீர் கல்வி:
தமிழகத்தில் சமச்சீர் கல்விக்கான வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஒரு வார காலத்திற்குள் முடிவடையும். பின்னர் அது இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொது மக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியவர்களின் கருத்து கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடத்தப்படும்.
தற்போது 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படுகிறது. அடுத்த ஆண்டு மற்ற வகுப்புகளுக்கு பாடத்திட்டம் தயாரிக்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் கூறியபடிதான் சமச்சீர் கல்வி முறை அமலாக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்க வாழ்க்கை கல்வி முறையை சமச்சீர்கல்வியில் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆ.மு.காசிவிஸ்வநாதன், ஈரோடு மாவட்ட கலெக்டர் சுடலை கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் என்.கே.கே.பி.ராஜா, எஸ்.குருசாமி, மற்றும் மேயர் குமார் முருகேஸ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொன்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நூலகம் திறப்பு:
முன்னதாக பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 3 வகுப்பறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். மேலும் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அப்துல்கலாம் நூலகத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
0 comments:
Post a Comment