ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள்
Tuesday, October 6, 2009
'என்.பி.டி.இ.எல்., திட்டத்தில், இரண்டாவது கட்டமாக, 2011ம் ஆண்டு டிசம்பருக்குள், 600 பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்கள், வெப் மற்றும் வீடியோ வடிவில் உருவாக்கப்பட்டு, ஆன்-லைனில் இலவசமாக வழங்கப்படும்' என, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் ஆனந்த் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க, மத்திய அரசு, என்.பி.டி.இ.எல்., திட்டத்தின் கீழ், பொறியியல் பாடங்களை ஆன்-லைனில் வழங்கி வருகிறது. ஏழு ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., ஆகியவை இணைந்து, பொறியியல் பாடங்களை வெப் மற்றும் வீடியோ வடிவில் உருவாக்கியுள்ளன. முதற்கட்டமாக, 21 கோடி ரூபாய் செலவில், சிவில், மெக்கானிக்கல், இ.சி.இ., எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கோர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், பயோடெக்னாலஜி ஆகிய பிரிவுகளில், 129 வெப் பாடங்கள், 110 வீடியோ பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவை, "www.youtube.com/iit', "http://nptel.iitm.ac.in' ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இவற்றை இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம். இப்பாடங்களை, "டிவிடி' வடிவிலும் பெற்றுக் கொள்ளலாம். "டிடி' - ஏக்லவியா சேனலிலும் இப்பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இணையதளத்தில், தினமும் 5,400 பேர் வீதம், இதுவரை 15 லட்சம் பேர் இப்பாடங்களைப் பார்த்துள்ளனர். என்.பி.டி.இ.எல்., திட்டத்தில், இரண்டாவது கட்டமாக, ஏரோஸ்பேஸ், கெமிக்கல் ஆகிய பொறியியல் மற்றும் வேதியியல், இயற்பியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், குறைந்தபட்சம் 600 பாடங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதுநிலை மற்றும் சில பிஎச்.டி., பாடங்களும் உருவாக்கப்படுகின்றன. இதற்காக, மத்திய அரசு 96 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 2011ம் ஆண்டு டிசம்பருக்குள் இப்பாடங்கள் உருவாக்கப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்படும். தேசிய ஐ.சி.டி., மிஷன் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 18 ஆயிரம் கல்லூரிகள் ஆன்-லைன் மூலம் இணைக்கப்பட உள்ளன. இப்பாடங்களைக் கற்பவர்களில் 40 சதவீதம் பேர் மாணவர்கள், எட்டு சதவீதம் பேர் ஆசிரியர்கள், 50 சதவீதம் பேர் ஏற்கனவே பட்டம் பெற்றவர்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில், தேசிய விர்ச்சுவல் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்பல்கலைக் கழகத்தில் என்.பி.டி.இ.எல்., பாடங்கள் பயன்படுத்தி, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படும்.
நன்றி: தினமலர்
0 comments:
Post a Comment